Friday, 25 December 2020

பத்து மிளகு

இன்று காலை எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 

செயல்புரியும் கிராமத்தின் அண்மை கிராமம் ஒன்றிலிருந்து. அழைத்தவர் ஆர்வம் நிறைந்த ஒரு சிறு விவசாயி.  முனைப்புடன் விவசாயம் செய்கிறார். கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். பண்ணையை நிர்வகிக்க ஆட்களை நியமித்துள்ளார். காலை மாலையிலும் வார இறுதி நாட்களிலும் தன் வயலில் தானே வேலை செய்கிறார். அதிக அளவு மரப்பயிர் வேளாண்மை செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். 

விவசாயி இப்போதிருக்கும் நிலையில் எளிய சில செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய முயல்வதே எனது பணி. செயல் புரியும் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் நம்மைப் பற்றி பக்கத்து கிராமத்தில் இருக்கும் விரிவுரையாளரிடம் தெரிவித்திருக்கிறார். அவர் சில வாரங்களுக்கு முன்னால் எனக்கு ஃபோன் செய்தார். சந்திக்க விருப்பம் தெரிவித்தார். கிராமத்திலேயே பல பணிகள். விரிவுரையாளரின் கிராமத்தைத் தாண்டித்தான் செயல்புரியும் கிராமத்துக்குச் செல்வேன். எனினும் வேலைப்பளு காரணமாக அவரைச் சந்திக்க முடியவில்லை. மூன்று நான்கு முறை ஃபோனில் கேட்டுக் கொண்டதால் அவரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கி ஒரு மாலை நேரத்தில் சந்தித்தேன். மிகவும் இனிமையான உரையாடல். 

நான் விவசாயிகளைச் சந்தித்ததுமே ஒரு விஷயத்தைக் கூறி விடுவேன். ‘’என்னுடைய தொழில் கட்டிட கட்டுமானம். விவசாயம் இல்லை; எங்கள் தொழிலில் நாங்கள் மரவேலைகளுக்கு தேக்கு மரத்தைப் பயன்படுத்துகிறோம். தேக்கின் விலை கூடிக் கொண்டே போகிறது. விவசாயிகள் தேக்கு பயிரிட்டால் அதனால் பெரும் பலன் பெற முடியும் என்பது எனது அனுபவத்தில் நான் அறிந்த உண்மை. அதனால் உங்கள் வழக்கமான விவசாயத்தில் மாற்றம் இல்லாமல் வயல் வரப்புகளில் மட்டும் தேக்கு பயிரிடுங்கள். பயன் பெறுங்கள். இந்த தகவலை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதும் தேக்கு மரம் நட உதவுவதுமே எனது பணி. உங்களுக்கு சில ஆண்டுகள் கழித்து நல்ல பொருளியல் பயன் கிடைக்குமென்றால் மகிழ்ச்சி.’’ இதை சந்திக்கும் அனைவரிடமும் சொல்வேன். அவரிடமும் சொன்னேன். 

மேட்டுப்பாங்கான மூன்று ஏக்கர் நிலத்தில் அவர் தேக்கு பயிரிட விரும்பினார். அந்த இடத்தை மறுநாள் காலையில் பார்த்தோம். 

இந்த இடத்தில் மரக்கன்றுகள் நடுவதை ஒரு முன்மாதிரியாகச் செய்ய வேண்டும் என விரும்பினோம். அதை ஆவணப்படுத்துவது என்றும் திட்டமிட்டோம். மூன்று ஏக்கர் நிலத்தில் 1200 தேக்கு மரங்கள் நட முடியும். ஒரு மரத்துக்கும் இன்னொரு இடத்துக்கும் இடையில் 10 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு மரக்கன்றை நட இரண்டு அடி நீளமும் இரண்டு அடி அகலமும் இரண்டு அடி ஆழமும் உடைய குழியினை எடுக்க வேண்டும். அதில் மக்கிய சாண எருவை இட வேண்டும். மக்கிய சாண எரு இடப்பட்ட குழியில் நடப்படும் மரம் நல்ல வளர்ச்சி பெறும். 

செயல் புரியும் கிராமத்தில், இந்த குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றி தேக்கு நட்ட விவசாயியின் வயலில் கன்றுகள் ஆறு மாதத்தில் ஏழு அடி உயரம் வளர்ந்துள்ளது. அதே குறிப்புகளைப் பின்பற்றி விரிவுரையாளர் வயலில் இவற்றை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என விரும்பினேன். 

இன்று காலை ஃபோன் செய்த போது ஒரு புது விஷயம் சொன்னார். 

‘’பிரபு! ரெண்டு நாள் முன்னால புதுக்கோட்டை பக்கத்துல ஒரு விவசாயியைச் சந்தித்தேன். அவர் மிளகு பயிர் செய்றார்.’’

காவிரி வடிநிலத்தில் மிளகு நன்றாக வளரும் என்பது எனக்குத் தெரியும். 

‘’எந்த மரப்பயிரின் மேல படற விடறாரு?’’

’’கிளேரியா மரத்தின் மேல்’’

‘’என்ன கிளேரியாவிலயா? அது நெடு நெடுன்னு வளந்துடுமே?’’

‘’பத்து அடி உயரம் கிளேரியா வந்ததும் அந்த உயரத்தோடு கட் செஞ்சுடறார். அது கிளைக்குது. அதுல மிளகுக் கொடி படருது.’’

‘’பரவாயில்லையே. நல்ல முயற்சி’’

‘’ஒரு ஏக்கருக்கு ஆறு லட்சம் ரூபாய் வருஷத்துக்கு கிடைக்குதுன்னு சொல்றார்.’’

‘’பிரமாதம் பிரமாதம். நம்ம பகுதி விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தணும். இந்த மிளகுக்காகத்தான் ஐரோப்பா காரங்க இந்தியாவுக்கு வந்தாங்க. மிளகு இப்பவும் உலக சந்தையில ரொம்ப கிராக்கி உள்ள பண்டம் தான்’’

‘’மிளகுக்கான தேவை எப்போதும் இருக்கும்’’

‘’ஸோ இந்த ஏரியாவுல மிளகு பயிரிடப் போற முதல் விவசாயி நீங்க தானா? வாழ்த்துக்கள்.’’

‘’ஒரு ஈல்ட் எடுத்துட்டு நாம மத்தவங்களுக்கு சொல்லுவோம் பிரபு’’

‘’நிச்சயமா’’

கிராமங்கள் முன்னேற வேண்டுமென்றால் அதில் உள்ள விவசாயிகளின் பொருளியல் உயர வேண்டும். அவ்வாறு நிகழ, எப்போதும்  நெல் பயிரிடுவதிலிருந்து சிறிது மாற்றி யோசித்து தங்களுக்குப் பயன் தரும் விஷயங்களைச் செய்து கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வே இன்றைய தேவை. 

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்கிறது ஒரு தமிழ்ப் பழமொழி.