6722. ‘தருண மங்கையை மீட்பது ஓர்
நெறி தருக! ‘என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி
அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன்,
கருங்கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன்,
விதிமுறை வணங்கி.
தென் தமிழகத்தில்
இராமேஸ்வரத்தை ஒட்டி திருப்புல்லாணி என்ற திவ்ய தேசம் ஒன்று உள்ளது. அதில்
தர்ப்பையின் மேல் சயனித்திருக்கிறார் பெருமாள் ஸ்ரீராமராக. சீதையை மீட்கச் செல்ல
வழி தருக எனக் கோரி வருணனை நோக்கி தர்ப்பையின் மீதிருந்து மந்திரத்தை ஒலித்தான்
ஸ்ரீராமன்.
6723. பூழி சென்று தன் திரு உருப்
பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம்
வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என,
ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன்,
எறி கடற்கு இறைவன்.
கடற்கரையின் மணல் துகள்கள் உடலெங்கும்
நிறையுமாறும் கதிர் வெம்மை நாளெல்லாம் சுடுமாறும் ஒரு வார காலம் மந்திரம் ஓதிய படி
ஸ்ரீராமன் இருந்தும் கடலின் அரசனான வருணன் வரவில்லை.
6734. மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தரெிந்து
பார் இயங்கு இரும்புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடுசரம் துரந்தான்.
சூரியக்கதிர் போல பிரகாசிக்கும் இராம பாணத்தை
செலுத்தினான் ஸ்ரீராமன்.
6777. மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகமும் அடைத்த ஆறு எலாம்;
இழைத்தன நெடுந்திசை யாதும்; யார் இனிப்
பிழைப்பவர்? என்பது ஓர் பெரும் பயத்தினால்.
மேகங்கள் அலறின. வருணன் பயத்தால் தாகமடைந்தான்.
திசைகள் அஞ்சின. ஆறுகள் அஞ்சின.
6781. எழுசுடர்ப் படலையோடும்
இரும்புகை நிரம்பி எங்கும்
வழி தரெிவு அறிகிலாத
நோக்கினன் வருணன் என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால்
உருகிய நெஞ்சன், அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின்
தோன்றினன், வழுத்தும் சொல்லான்.
ஸ்ரீராமனிடம் அபயம் கோரி வந்தான் வருணன்.
6793. ‘பார்த்தனில் பொறையின் மிக்க
பத்தினிக்கு உற்ற பண்பு
வார்த்தையின் அறிந்தது அல்லால்,
தேவர்பால் வந்திலேன், நான்;
தீர்த்த! நின் ஆணை, ஏழாம்
செறிதிரைக் கடலில் மீனின்,
போர்த் தொழில் விலக்கப் போனேன்
அறிந்திலேன், புகுந்தேன் ‘என்றான்.
கடலில் மீன்களுக்குள் நிகழ்ந்த போரை நீக்க
நெடுந்தொலைவு சென்றிருந்தேன். சீதைக்கு நிகழ்ந்தது எனக்குத் தெரியாது என்றான்
வருணன்.
6794. என்றலும், இரங்கி, ஐயன்,
‘இத்திறம் நிற்க இந்தப்
பொன்றல் இல் பகழிக்கு அப்பால்
இலக்கம் என்? புகறி ‘என்ன
வன்திறல் வருணன் யானும்
உலகமும் வாழ்ந்தோம் ‘என்னக்
குன்று என உயர்ந்த தோளாய்!
கூறுவல் என்று கூறும்.
இராம பாணம் இலக்கைத் தாக்காமல் திரும்பாது.
ஏதேனும் இலக்கைக் கூறுக என ஸ்ரீராமன் வருணனிடம் கோரினான்.
6795. ‘மன்னவ! மருகாந்தாரம்
என்பது ஓர் தீவின் வாழ்வார்,
அன்னவர் சத கோடிக்கும்
மேல் உளர், அவுணர் ஆயோர்,
தின்னவே உலகம் எல்லாம்
தீந்தன; எனக்கும் தீயார்;
மின் உமிழ் கணையை வெய்யோர்
மேல் செல விடுதி ‘என்றான்.
கடல்தீவு ஒன்றில் வசிக்கும் பல்லாயிரம் அரக்கர்களை
நோக்கி ஏவுக என்றான் வருணன்.
6798. பாபமே இயற்றினாரைப்,
பல் நெடுங் காதம் ஓடித்,
தூபமே பெருகும் வண்ணம்,
எரி எழச் சுட்டது அன்றே,
தீபமே அனைய ஞானத்
திருமறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு
தருமமே வலியது அம்மா!
தவத்திற் சிறந்த முனிவர்கள் இடும் தீசொல்
உண்டாக்கும் அழிவைப் போல அரக்கர்களை இராமபாணம் அழித்தது.
வருணனுக்காக எடுக்கப்பட்ட அம்பே அரக்கர்களுக்கு
அழிவுண்டாக்கினால் இலங்கை அரசனுக்காக எடுக்கப்படும் அம்பு என்ன விளைவை உண்டாக்கும்
என்பதை வாசக கற்பனைக்கு விட்டு விடுகிறார் கம்பர்.
6800. ஆழமும் அகலம் தானும்
அளப்பு அரிது எனக்கும் ஐய!
ஏழ் என அடுக்கி நின்ற
உலகுக்கும் எல்லை இல்லை;
வாழியாய்! வற்றி நீங்கில்,
வரம்பு அறுகாலம் எல்லாம்
தாழும்; நின் சேனை உள்ளம்
தளர்வுறும் தவத்தின் மிக்கோய்.
கடலின் ஒரு பகுதியை வற்றச் செய்யவே வெகு காலம்
பிடிக்கும். வானர சேனை சோர்வுறும்.
6801. ‘கல் என வலித்து நிற்பின்,
கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்;
இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லையில் காலம் எல்லாம்
ஏந்துவென், எளிதின்; எந்தாய்!
செல்லுதி, “சேது “ என்று ஒன்று
இயற்றி, என் சிரத்தின் என்றான். ‘
கடலின் மேல் ஒரு பாலம் அமைத்துச் செல்வீராக என ஓர்
எளிய வழிமுறை ஒன்றைக் கூறினான் வருணன்.
6802. ‘நன்று, இது புரிதும் அன்றே;
நளிகடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னின்,
எளிவரும் பூதம் எல்லாம்;
குன்று கொண்டு அடுக்கி, சேது
குயிற்றுதிர் ‘என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி;
வருணனும் அருளின் சென்றான்.
கடலில் அணை கட்டுவதால் ஐம்பூதங்களும் நமக்கு
உதவும் என்றார் ஸ்ரீராமன்.