Monday 28 December 2020

கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்

வீட்டில் அனைவரும் இராமேஸ்வரம் போய் இருக்கிறார்கள். 

நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். தனியாக இருக்கும் போது, வீடு திடீரென அளவில் பெரிதாகி விட்டதாய்த் தோன்றும். எல்லாரும் இருக்கும் போது செய்யப்படும் வேலைகளை சற்று முன்னதாகவே செய்து விடுவேன். அதிக நேரம் வீட்டில் இருப்பேன். நண்பர்களை வரச் சொல்லி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். 

இன்று ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் ஒரு வணிகர். கடுமையான உழைப்பாளி. ஞாயிறு என்பதால் அவருக்கு விடுமுறை. மாலை வந்திருந்தார். 

‘’என்ன பிரபு! ரெண்டு நாளா வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க’’

‘’கம்ப ராமாயணம் குறிச்சு ஒரு தொடர் எழுதி என்னோட பிளாக்-ல போஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கன். அதுல இப்போ ‘’கும்பகர்ணன் வதைப் படலம்’’ வந்திருக்கன்’’

‘’என்ன தொடர் அது. என்ன விபரம்?’’

‘’அது ஒரு பெரிய கதை அண்ணன்’’

‘’சொல்லுங்க கேப்போம்’’

எனக்கு என் மனத்தில் பதிவாகியிருப்பதை சொல்லத் தெரியும். சொல்லி முடிந்ததும் அது ஒரு கதை போல இருக்கும். 

‘’2017ம் வருஷம் டிசம்பர் மாசம் கடைசி வாரம் நாங்க ஃபிரண்ட்ஸ் நாலு பேர் ஹம்பி போனோம்’’

‘’யார் அது மீதி மூணு பேரு?’’

‘’ஆரம்பிக்கும் போதே சொன்னேன் பெரிய கதைன்னு. இன்னும் உள்விவரங்களுக்குப் போனா ரொம்ப பெரிசாயிடும். பரவாயில்லையா?’’

‘’சரி சரி உங்க ஃபுலோ-ல சொல்லுங்க’’

‘’ஃபிரண்ட்ஸ் டூர் போகணும்னு சொன்னப்ப ஹம்பி போகலாம்னு ஹம்பியை சூஸ் பண்ணது நான் தான். நீங்க ஹம்பியை பாக்கறது மூலமா ஒட்டு மொத்த இந்தியா குறித்து ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக்க முடியும்னு சொன்னேன். என்னைத் தவிர மத்த மூணு பேரும் அப்பதான் ஹம்பி வராங்க.’’

’’ஓ.கே’’

‘’புராதான ஆலயங்கள். மண்டபங்கள். கோட்டை மதில்கள். கோட்டை வாயில்கள் என மூன்று நாட்கள் ஹம்பியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்லயும் அலைந்தோம். மூன்றாவது நாள் அனேகமாக அது டிசம்பர் 29ம் தேதியா இருக்கும்னு நினைக்கறன். ஹம்பி-ல இருக்கற ஒரு பெரிய ஏரிக் கரையில இருக்கற சிமெண்ட் பெஞ்சு-ல ஒக்காந்து பேசிக் கொண்டிருந்தோம்.’’

‘’என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க’’

‘’நான் அந்த நகரத்தோட செல்வச் செழிப்பைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தன். எவ்வளவு கலை உணர்வு இருந்தா இவ்வளவு அழகை நிர்மாணிச்சிருக்க முடியும். ராமாயணத்துல இந்த இடம் கிஷ்கிந்தையா இருந்ததுன்னு சொல்றாங்க. ராமபக்தி பல ஆயிரம் ஆண்டா இருக்கற இடம். சொல்லிட்டே இருந்தப்ப ஒரு நண்பர் என்னிடம் கம்பராமாயணத்தை வாசிக்க ஆரம்ப நூல் எது என்று கேட்டார். 1960களில் கோயம்புத்தூர்க்காரரான திரு. பி.ஜி. கருத்திருமன் எழுதிய ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்கிற நூல். நான் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . வாசித்ததில்லை என்று சொன்னேன். ‘’

அன்று ஏரிக்கரையில் அஸ்தமன சூரியனைப் பார்த்து விட்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் ஹம்பியில் சுற்றி விட்டு டிசம்பர் 31 , 2017 அன்று காலை ஹம்பியிலிருந்து சென்னை புறப்பட்டோம். இரவு சென்னை வந்தடைந்து நால்வரும் நான்கு திசையில் பிரிந்தோம். 

2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதிகாலை ஊருக்கு வந்தேன். 

கம்பராமாயணம் குறித்து கேட்ட நண்பர், ’’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் ஆன்லைனில் வாசிக்கக் கிடைக்கிறது என்ற விபரத்தைக் கூறினார். அன்றே மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டேன். மூன்று நாளில் அந்த நூலை வாசித்தேன். 940 பாடல்கள் . கம்பனின் தேர்ந்தெடுத்த பாடல்கள். அயோத்தியா காண்டத்திலிருந்து யுத்த காண்டம் வரை 940 பாடல்களில் கம்ப ராமாயணம். 

அது ஒரு அருமையான நூல். நூலின் ஒரு பக்கத்தில் கம்பராமாயணப் பாடலும் அதன் கீழ் பதம் பிரித்தலும் அதற்கு எதிர்ப்பக்கத்தில் மிகக் குறைவான சொற்களில் - எவ்வளவு குறைவான சொற்களில் விளக்கினால் வாசகன் கம்பனின் பாடலைப் புரிந்து கொள்வானோ அவ்வளவு சொற்களில் - விளக்கமும் அளித்து அந்நூலை எழுதியிருப்பார். வாசகனுக்கும் கம்பனுக்கும் இடையில் ஒரு பாலம் போல அமைந்து வாசகன் கம்பனின் கவி உலகில் ஒரு பகுதியாக உதவியிருப்பார். 

அந்நூலைக் குறித்து ‘’யாமறிந்த புலவரிலே’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பாரதி வரி ஒன்றைத் தலைப்பாக்கினேன். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் என்பது பாரதியின் சொல்.

அதன் பின்னர் அந்த கட்டுரையை வாசித்த  எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னை கம்பராமாயணம் குறித்து எழுதச் சொன்னார். அவ்வாறு அவர் கூறிய தினம் ஸ்ரீராமநவமி. பெரிய பணியாயினும் என்னால் முடிந்த அளவு முயலலாம் என எண்ணினேன். 

’’சொல்லும் பொருளும் இணைந்திருப்பது போல’’ என காளிதாசனின் ரகுவம்சம் தொடங்குகிறது. சொல்லும் பொருளும் சேர்ந்து நிகழ்த்தும் லீலையே மானுட வாழ்க்கை. கம்பனின் சொல்லை என் மனத்தில் எப்படி உள்வாங்கிக் கொள்கிறேன் என்பதையும் எனது ரசனையையும் முன்வைத்து அதனை எழுதினேன். 

ஒன்றிலிருந்து ஒன்றாக பல விஷயங்கள் இணைந்து சம்பவங்கள் பெரிய சங்கிலித் தொடராக இருப்பதை நண்பர் கண்டார். 

‘’நீங்க எழுதுனது-ல சில பகுதிகளை இப்போ பார்க்க முடியுமா?’’

நான் மடிக்கணினியில் அவருக்குக் காட்டினேன். கம்பன் பாடல்களையும் அதற்கு நான் எழுதியிருந்த என் வாசிப்பையும் என் குரலில் வாசித்துக் காட்டினேன். 

வாழ்க்கையின் மேலான வாய்ப்புகளை - மனிதர்களின் அன்பின் உன்னதமான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் கம்ப சித்திரங்கள் சிலவற்றை என்னுடைய ஞாபகத்திலிருந்தும் கூறினேன்.

நண்பர் சொன்னார்: ‘’கம்பனைப் படிக்கணும்னு ஆர்வம் வருது. நாங்க ஒரு பத்து பேர் வரோம். வாரம் ரெண்டு மணி நேரம்னு கம்பராமாயணம் படிக்கலாம். நீங்க கிளாஸ் எடுங்க’’

‘’ஓ யெஸ் தாராளமா எடுக்கலாம். ரசனை அடிப்படையில இலக்கியத்தை அணுகுறவன் தன்னை எப்போதும் வாசகனாக மட்டுமே நினைப்பான். நாம எல்லாருமே கம்பனோட வாசகர்கள்; மாணவர்கள். நாம சேர்ந்து கம்பனைப் படிப்போம். எனக்கு நீங்க கம்பனுக்குள்ள ஆழ இன்னொரு வாய்ப்பு தரீங்க. குட்.’’

‘’பிரபு! எனக்கு ஒரு சந்தேகம். ஆறாம் வகுப்புல இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ்ப் பாடம் பள்ளிக்கூடங்கள்-ல இருக்குல்ல. அதுல கம்பராமாயணத்தை பாடமா வச்சு தமிழ்நாட்டுல பள்ளிப்படிப்பு படிச்ச எல்லாருக்கும் கம்பராமாயணம் அறிமுகமாயிருக்குன்னு ஒரு நிலையை கொண்டு வர முடியுமே. திருக்குறளும் இந்த 7 வருஷத்தில எல்லா அதிகாரமும் படிக்கற மாதிரி செய்ய முடியுமே. சிலப்பதிகாரத்தையும் இதோட சேர்த்துக்கலாம்.’’

’’உங்களோட ஐடியா வெரி குட் ஐடியா அண்ணன். பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் என்கிறான். இந்த மூன்று இலக்கியத்துல எல்லாமே இருக்கு. இதைத் தெரிஞ்சுகிறவன் மொழி, இலக்கணம், ரசனை என மூணும் தெரிஞ்சுகிறான். ஆறாம் வகுப்புல இருந்து 12ம் வகுப்பு வரைக்கும் தமிழை தமிழ் -1 , தமிழ்-2 என ஆக்கி இதை முதல் தாளா வைக்கலாம். அடுத்த தாள்ல இப்ப என்ன சொல்லிக் கொடுக்கறாங்களோ அது அப்படியே இருக்கலாம். தமிழுக்குச் செய்யற நல்ல சேவையா இருக்கும்.’’

‘’உண்மைதான்’’

‘’தமிழ்நாட்டுல தமிழ் தமிழ் னு பேசறாங்க. ஆனா செயல் ஒன்னும் இல்லையே’’

‘’எந்த மொழியும் தன்னோட ஆகப் பெரிய படைப்பாளியைக் கொண்டாடும். பிரிட்டன் ஷேக்ஸ்பியரை, அமெரிக்கா ராபர்ட் ஃபிராஸ்ட் டை, ரஷ்யா புஷ்கினை. ஆனா நம்ம மொழில மட்டும் தான் தமிழோட ஆகப் பெரிய படைப்பான கம்பராமாயணத்தை தீ வைத்துக் கொளுத்தனும்னு சொன்னவங்களும் கம்பராமாயணம் ஆபாசமான நூல்னு சொன்னவங்களும் 50 வருஷத்துக்கு மேல ஆட்சியில இருக்காங்க. தமிழுக்கு செய்யப்பட்ட பெரிய சேவையான ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் எழுதின திரு. பி.ஜி. கருத்திருமன் காங்கிரஸ்காரர். கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கார்.’’

‘’ஏன் அரசியலுக்காக கம்பராமாயணத்தை எதிர்க்கணும்?’’

‘’கம்பன் ஒருமைப்பாட்டைப் பேசறான். மனிதர்களை இணைக்கும் அடிப்படை விழுமியங்களைப் பத்தி பேசறான். திராவிட அரசியல் என்பது வெறுப்பு அரசியல். விழிப்புணர்வு குறைவா இருக்கற மக்களோட பயத்தை தூண்டி விட்டு அவங்களோட எல்லா சிக்கலுக்கும் அவங்க பண்பாடுதான் காரணம்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்கள் எந்த காலத்திலும் சேர்ந்துடாம இருக்கற மாதிரி பாத்துக்கரதுதான் திராவிட அரசியல்.’’

‘’இந்த நிலைமை மாறணும் பிரபு. சீக்கிரம் மாற்றம் வரும்னு நம்புவோம். ‘’

’’ஒவ்வொருத்தரும் நம்மால முடிஞ்சத அதுக்குச் செய்யணும். செய்வோம். ‘’

‘’நீங்க தொடரை எப்போ பூர்த்தி செய்யப் போறீங்க.?’’

‘’2017 டிசம்பர் கடைசி வாரம் இது குறிச்சு யோசிச்சன். முதல் படின்னு அதைச் சொல்லலாம். புது வருஷத்துக்கு இன்னும் நாலு நாள் இருக்கு. இந்த மாசம் 31ம் தேதிக்குள்ள இந்த வொர்க்-கை முடிக்கணும்னு நினைக்கறன். கொஞ்சம் பெரிய ஒர்க் என்பதால இந்த டைம் ரொம்ப எமோஷனாலா இருக்கு. கன்சிஸ்டண்ட் ஒர்க் மூலமா அதைக் கடந்துடலாம்.’’

‘’நீங்க ஒர்க்க முடிங்க. 31ம் தேதி நாங்க டிரீட் தர்ரோம்’’

‘’31ம் தேதி காலைல வலைப்பூ-ல  ‘’இராமர் பட்டாபிஷேகம்’’   போஸ்ட் பண்றன். கம்ப ராமாயண நூல் அமைப்பு முறைல இராமர் பட்டாபிஷேகத்துக்குப் பின்னால அரக்கர்களை வீழ்த்திய யுத்தத்துல கூட இருந்து உதவினவங்களுக்கு கூட இருந்து தோள் கொடுத்தவங்களுக்கு ராமன் ஒரு அரசனா பரிசு கொடுக்கறார். அதை அன்னைக்கு சாயந்திரம் போஸ்ட் பண்றேன்’’

நண்பர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.