Sunday 27 December 2020

தோள் கொடுத்தல்

கம்பன் காவியம் மானுடத்தின் நுட்பமான உயர்வான உணர்வு நிலைகளை பல இடங்களில் காட்டுகிறது. இந்தியர்களாகிய நாம் அதனைக் கேட்டு கேட்டு வளர்கிறோம். இராமன் மகத்தான மனிதன். மன்னிப்பே அவனது இயல்பு. பேரரசனின் செல்வனாயினும் பெருவீரனாயினும் அவன் கருணையுடன் இருந்தான். தனக்கு உற்றவர்களிடம் மட்டுமல்ல; தனது எதிரிகளிடமும் கூட. அவன் தனக்கு பெரும் தீங்கிழைத்த இராவணனுக்குக் கூட தவறைத் திருத்திக் கொள்ள பல வாய்ப்பு தருகிறான். கருணையின் நிலையம் என்கிறான் இராமனைக் கம்பன். 

குகனைச் சந்திக்கும் போதும், அனுமனைக் காணும் போதும், வீடணனை எதிரிகொள்ளும் போதும் அவன் அடையும் உணர்வுகள் மகத்தானவை. 

அந்த தருணங்களையொத்த பல தருணங்கள் பிற காப்பிய மாந்தராலும் நிகழ்கின்றன. 

இரண்டாம் முறை தூதுரைக்க, அங்கதனை தேர்வு செய்யும் போது , அனுமன் ஆற்றும் பணியை ஆற்ற வல்லவன் என ஸ்ரீராமன் தன்னைத் தேர்வு செய்வதை எண்ணி உளம் பூரிக்கிறான். 

இராவணனைக் கண்டதும் சினத்தால் அவன் மீது பாயும் சுக்ரீவன் கொள்ளும் உணர்வும் வியப்பூட்டுவது. 

முதற்போர் படலத்தில், ஒரு பாடல். இராவணன் தேருடன் யுத்தம் செய்கிறான். ஸ்ரீராமனிடம் தேர் இல்லை. அப்போது அனுமன் அங்கு வருகிறான். 

இருவர் வில் யுத்தம் புரியும் போது இருவரும் சமானமான உயரம் கொண்ட நிலையில் இல்லையாயில் உயரமான இடத்தில் இருப்பவர் முதல் ஆதிக்கம் கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே என்னுடைய தோளில் அமர்ந்து யுத்தம் புரிவீராக என்று கூறுகிறான். அனுமனுக்கு அட்ட மா சித்திகள் வசப்பட்டவை. அவனால் தன் உடலை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவு பெருக்கிக் கொள்ள முடியும். 

இதில் கவனிக்கக் கூடிய இடம் ஒன்று உண்டு. இராமனிடம் தேர் இல்லை என்னும் பின்னடைவைத் தன்னுடைய தோள் கொடுப்பதன் மூலம் நிகராக்குகிறான். இன்னும் ஊன்றி கவனித்தால், இராவணனுடைய தேர் பௌதிகமானது. அது பெற்றுள்ள வசதிகள் அறுதியானவை. அதனால் மேலும் விரிவு செய்ய முடியாது. புதிதாக எதையும் சேர்க்க முடியாது. அனுமனால் சூழ்நிலைக்கு ஏற்ப விரிவாக பெருக முடியும். 

தேர் இல்லை என்ற பின்னடைவை ஒரு கணத்தில் இல்லாமலாக்குகிறான். அதன் மூலம் இராவணனுக்கு கிடைக்கும் சாதக அம்சத்தை ஸ்ரீராமனின் சாதக அம்சமாக ஆக்குகிறான் அனுமன். 

‘’தோள் கொடுத்தல்’’ என்பதற்கு நுட்பமான பொருள் என்ன என்பதை இப்பாடல் மூலம் கம்பன் காட்டுகிறான்.

நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் போர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின் மேல் ‘என்றான் (7360)

''மெல்லிய எனினும்’’ - மெல்லியவை ஆயினும் என் தோளில் ஏறுக என்கிறான் அனுமன். 

அனுமன் வாயு புத்திரன். புஜபலம் மிக்கவன். அவனது தோள் வலிமையே இலங்கையை தீக்கிரையாக்கியது. எனினும் , இராமனது வீரத்துடன் ஒப்பிடும் போது மென்மையானது என்ற பொருளில் ‘’மெல்லிய எனினும்’’ என்கிறான் அனுமன்.