Saturday 26 December 2020

அங்கதன் தூதுப் படலம்

 

 



7102.   தூதுவன் ஒருவன் தன்னை

    இவ்வழி விரைவில் தூண்டி,

மாதினை விடுதியோ? “ என்று

    உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம்

    கருதியது, அறனும் அஃதே;

நீதியும் அஃதேஎன்றான்

    கருணையின் நிலையம் அன்னான்.

 

கருணையைத் தன் இயல்பாகக் கொண்ட ஸ்ரீராம பிரான் வீடணனிடம் ’’பெரும்பணியான சேது பந்தனம் நிகழ்த்தி இலங்கையில் பராக்கிரமத்துடன் நுழைந்துள்ள நாம் இராவணனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தந்து ‘’சீதையை விடுக’’ என்னும் செய்தியுடன் ஒரு தூது அனுப்புவோம். அதுவே நீதி ஆகும். அதுவே அறம் ஆகும்.’’ என்று கூறினார்.

 

 

 

7103.   அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,

    ‘அழகிற்றே யாகும்என்றான்;

குரங்கு இனத்து இறைவன் நின்றான்,

    ‘கொற்றவற்கு உற்றதுஎன்றான்;

இரக்கமது இழுக்கம்என்றான்,

    இளையவன்; ‘இனி, நாம் அம்ப

துரக்குவது அல்லால், வேறு ஓர்

    சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.

 

ஸ்ரீராமனின் கூற்றைக் கேட்டு வீடணன் ‘’அது சரியானது’’ என்று கூறினான். சுக்ரீவன் ‘’அதுவே அரச முறைமை’’ என்றான். இலக்குவன் தாமதமின்றி உடனே போர் துவக்குவோம் என்றான்.

 

7109.   மாருதி இன்னும் செல்லின்,

    மற்று இவன் அன்றி வந்து

சாருநர் வலியோர் இல்லை

    என்பது சாரும் அன்றே?

ஆர், இனி ஏகத் தக்கார்?

    அங்கதன் அமையும்; ஒன்னார்

வீரமே விளைப்பரேனும்,

    தீது இன்றி, மீள வல்லான்.

 

அனுமன் மீண்டும் சென்றால், இராவணன் அரசவையில் நுழையும் துணிச்சல் படைத்தவன் அவன் ஒருவனே என்றாகும். இம்முறை அங்கதனை அனுப்புவோம். அங்கதன் கூர்மதியுடன் தூது உரைக்கக் கூடியவன். ஏதேனும் இன்னலை விளைவிப்பார்களாயின் அதிலிருந்தும் மீண்டு வரும் திறன் படைத்தவன்.





7110.   நன்றுஎன, அவனைக் கூவி,

    ‘நம்பி! நீ நண்ணலார்பால்

சென்று, இரண்டு உரையின் ஒன்றைச்

    செப்பினை தருதிஎன்றான்;

அன்று அவன் அருளப் பெற்ற

    ஆண்தகை அலங்கல் பொன்தோள்

குன்றினும் உயர்ந்தது என்றால்,

    மன நிலை கூறலாமே?

 

அங்கதனை அழைத்து இராவணனிடம் தூது சென்று வருமாறு இராமன் பணித்தான். அப்பணிக்குப் பொருத்தமானவனாக ஸ்ரீராமனால் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதைப் பற்றி எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான் அங்கதன்.

 

7111.   என் அவற்கு உரைப்பது? ‘என்ன,

    ‘ஏந்திழையாளை விட்டுத்

தன் உயிர் பெறுதல் நன்றோ?

    அன்று எனின், தலைகள் பத்தும்

சின்ன பின்னங்கள் செய்ய,

    செருக்களம் சேர்தல் நன்றோ?

சொன்னவை இரண்டின் ஒன்றே

    துணிக ‘‘ எனச் சொல்லிடுஎன்றான்.

 

தூதுச் செய்தி என்ன என்று அங்கதன் வினவினான். ‘’சீதையை விடுவித்து உயிர் பெறுக. அல்லது பத்து தலைகளும் சின்னாபின்னமாகப் போகும் போர்க்களத்தைச் சந்திக்க’’ என்பதே தூதுச் செய்தி.

 

7112.   அறத் துறை அன்று, வீரர்க்கு

    அழகும் அன்று, ஆண்மை அன்று,

மறத் துறை அன்று, சேமம்

    மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;

நிறத்து உற வாளி கோத்து

    நேர் வந்து நிற்கும் ஆகின்

புறத்து உற எதிரே வந்து

    போர்தரப் புகல்திஎன்றான்.

 

நாள் தள்ளாமல் ஒளிந்து கொள்ளாமல் போர்க்களத்துக்கு விரைந்து வருக.





7113.   பார்மிசை வணங்கிச் சீயம்

    விண்மிசைப் படர்வதே போல்,

வீரன் வெஞ் சிலையில் கோத்தஅ

    அம்பு என, விசையின் போனான்,

மாருதி அல்லன், ஆகின்,

    நீஎனும் மாற்றம் பெற்றேன்;

யார் இனி என்னோடு ஒப்பார்? ‘

    என்பதோர் இன்பம் உற்றான்.

 

அனுமனை ஒத்த தேர்வாக ஸ்ரீராமனால் நான் கொள்ளப்பட்டேன். என் அளவு பேறு பெற்றவர் யார் என அங்கதன் எண்ணினான்.

 

7114.   அயில் கடந்து எரிய நோக்கும்

    அரக்கரைக் கடக்க, ஆழித்

துயில் கடந்து அயோத்தி வந்தான்

    சொல் கடவாத தூதன்,

வெயில் கடந்திலாத காவல்,

    மேருவின் மேலும் நீண்ட

எயில் கடந்து, இலங்கை எய்தி,

    அரக்கனது இருக்கை புக்கான்.

 

பேரரண்களைக் கொண்ட இலங்கையின் அரண்களைத் தாண்டி இராவணன் அவையில் நுழைந்தான் அங்கதன்.

 

7115.   அழுகின்ற கண்ணர் ஆகி,

    ‘அநுமன்கொல்? ‘என்ன அஞ்சித்

தொழுகின்ற சுற்றம் சுற்ற,

    சொல்லிய துறைகள் தோறும்

மொழிகின்ற வீரர் வார்த்தை

    முகம்தொறும் செவியின் மூழ்க,

எழுகின்ற சேனை நோக்கி,

    இயைந்து இருந்தானைக் கண்டான்.

 

அங்கதன் அங்கே சென்றதும் அரக்கர்கள் அனுமன் தான் மீண்டும் வந்து விட்டானோ என்று எண்ணி துயரடைந்தனர். மந்திராலோசனை செய்து கொண்டிருந்த இராவணனை அங்கதன் கண்டான்.






7118.   அணி பறித்து அழகு செய்யும்

    அணங்கின் மேல் வைத்த ஆசைப்

பிணி பறித்து, இவனை யாவர்

    முடிப்பவர் படிக் கண்? பேழ்வாய்ப்

பணி பறித்து எழுந்த மானக்

    கலுழனின், இவனைப் பற்றி

மணி பறித்து எழுந்த எந்தை

    யாரினும் வலியன்அன்றே.

 

இராவணனைக் கண்டதும் அவன் கிரீடத்தின் மாணிக்கங்களைப் பறித்து வந்த சுக்ரீவனின் வலிமையை எண்ணி பெருமை கொண்டான் அங்கதன்.

 

7119.   நெடுந்தகை விடுத்த தூதன்

    இவை இவை நிரம்ப எண்ணி,

கடுங் கனல் விடமும் கூற்றும்

    கலந்து கால் கரமும் காட்டி,

விடும் சுடர் மகுடம் மின்ன,

    விரிகடல் இருந்தது அன்ன

கொடுந் தொழில் மடங்கல் அன்னான்

    எதிர் சென்று குறுகி நின்றான்.

 

இராவணனுக்குப் பக்கத்தில் சென்றான் அங்கதன்.

 

7120.   நின்றவன் தன்னை, அன்னான்

    நெருப்பு எழ நிமிரப் பார்த்து, ‘இங்கு

இன்று, இவண் வந்த நீ யார்?

    எய்திய கருமம் என்னை?

கொன்று இவர் தின்னா முன்னம்

    கூறுதி தரெியஎன்றான்;

வன்திறல் வாலி சேயும்

    வாள் எயிறு இலங்க நக்கான்.

 

‘’யார் நீ? எங்கு வந்தாய்? ‘’ என அங்கதனிடம் வினவினான் இராவணன்.




7121.   பூத நாயகன், நீர் சூழ்ந்த

    புவிக்கு நாயகன், அப் பூமேல்

சீதை நாயகன், வேறு உள்ள

    தயெ்வ நாயகன், நீ செப்பும்

வேத நாயகன், மேல் நின்ற

    விதிக்கு நாயகன். தான் விட்ட

தூதன் யான்; பணித்த மாற்றம்

    சொல்லிய வந்தேன்என்றான்.

 

விசும்பின் தலைவன்; புவியின் தலைவன்; புவிமகள் சீதையின் தலைவன்; தெய்வங்களின் தலைவன்; வேதத்தின் தலைவன்; விதியின் தலைவன் ; அத்தகையவன் ஸ்ரீராமன். அவனது தூதன் நான்.

 

7124.   இந்திரன் செம்மல், பண்டு, ஓர்

    இராவணன் என்பான் தன்னைச்

சுந்தரத் தோள்கேளாடும்

    வால் இடைத் தூங்கச் சுற்றி,

சிந்துரக் கிரிகள் தாவித்

    திரிந்தனன், தேவர் உண்ண

மந்தரக் கிரியால் வேலை

    கலக்கினான், மைந்தன்என்றான்.

 

இராவணனைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட வாலியின் மைந்தன் நான்.



7126.   “‘தாதையைக் கொன்றான் பின்னே

    தலை சுமந்து, இருகை நாற்றி,

பேதையன் என்ன வாழ்ந்தாய் ‘‘

    என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்;

சீதையைப் பெற்றேன்; உன்னைச்

    சிறுவனுமாகப் பெற்றேன்;

ஏது எனக்கு அரியது? ‘என்றான்

    இறுதியின் எல்லை கண்டான்.

 

உன் தந்தையைக் கொன்றவர்களுடன் உடனிருக்கிறாயே? நீ என்னுடன் இரு. உன்னை என் மகன் போல நடத்துகிறேன்.

 

7129.   வாய் தரத்தக்க சொல்லி,

    என்னை உன் வசம் செய்வாயேல்,

ஆய்தரத் தக்கது அன்றோ,

    தூது வந்து அரசது ஆள்கை?

நீ தரக் கொள்வேன் யானே?

    இதற்கு இனி நிகர்வேறு எண்ணின்,

நாய் தரக் கொள்ளும் சீயம்,

    நல் அரசு! ‘என்று நக்கான்.

இராவணனிடம் அங்கதன் , ‘’நீ தர அரசு பெறுவது என்பது ஒரு நாய் தர அதனைச் சிங்கம் பெறுவது போன்றது’’

 

7131.   கூவி இன்று என்னை, நீ போய்,

    “தன்குலம் முழுதும் கொல்லும்

பாவியை, அமருக்கு அஞ்சி

    அரண் புக்கு பதுங்கினானை,

தேவியை விடுக! அன்றேல்,

    செருக்களத்து எதிர்ந்து தன்கண்

ஆவியை விடுக! ‘‘ என்றான்,

    அருள் இனம் விடுகிலாதான்.

 

தூதுச் செய்தியை உரைத்தான் அங்கதன்.