வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும்
தார்கெழு தானையின் அளவும் தன்மையும்
நீர்கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய் ‘என்றான். (6659)
கடலால் சூழப்பட்ட
இலங்கையின் நகரில் உள்ள மதில் அரணின் தன்மை குறித்தும் அரக்க வீரர்களின் பராக்கிரமம்
குறித்தும் இலங்கை சேனையின் எண்ணிக்கை குறித்தும், நற்பண்புகள் மிக்கவரே எங்களுக்கு
விளக்குவீராக என வீடணனிடம் ஸ்ரீராமன் கூறினார்.
எழுதலும் ‘இருத்தி ‘என்று இராமன் ஏயினான்
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்
தொழுது உயர் கையினான் தரெியச் சொல்லினான். (6660)
இராமனின்
வினாவுக்கு விடையளிக்க வீடணன் எழுகிறான். அவன் எழ முயலும் போதே ‘’அமர்க ; அமர்ந்தவாறே
கூறுக’’ என்கிறார் இராமன். இராமன் வீடணனை ‘’முழுது உணர் புலவன்’’ – அறிஞன் என எண்ணுவதாக
கம்பன் குறிப்பிடுகிறார். அந்த தருணத்தில் வெளிப்பட்ட ஸ்ரீராமனின் பண்புக்கு நெகிழ்ந்து
வீடணன் பேசத் துவங்குகிறான்.
நிலையுடை வடவரை குலைய நேர்ந்து அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும்முடி வாங்கி ஓங்கு நீர்
அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே. (6661)
காற்றின் பலம்
கொண்ட நகரம் இலங்கை.
‘ஏழு நூறு யோசனை அகலம் இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை ஆழிமால் வரை
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். (6662)
மிக நீளமான மதில்
அரண்களால் காக்கப்படும் நகரம் இலங்கை.
தம்பி; முற் பகல் சந்திரர் நால்வரில் தயங்கும்
கும்ப மால் கரிக் கோடு இரு கைகளால் வாங்கிச்
செம்பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் திரிந்தான்,
கும்ப கன்னன் என்று உளன் பண்டு தேவரைக் குமைத்தான். (6692)
ஐராவதத்தை
மோதி வென்று தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனும் தேவர்களை தன் ஆற்றலால் கலங்கடித்தவனுமான
கும்பகர்ணன் இராவணனுடைய தம்பி. இராவண சேனையின் முக்கியமான மாவீரன்.
கோள் இரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெம் சினம் அத்து இந்திர சித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னைத்,
தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. ‘ (6693)
இந்திரனைச் சிறைப்பிடித்த
இந்திரஜித் இராவணன் சேனையின் மாவீரர்களில் ஒருவன்.
எள் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளி மான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை வேரோடும் வாங்கி
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க. (6697)
ஐம்பூதங்களைத்
தன் உடலாய்க் கொண்ட புலித்தோல் ஆடை அணிந்த உமையொரு பாகன் வீற்றிருக்கும் கைலாய பர்வதத்தை
பெயர்த்து வான் நோக்கி எடுத்தவன் இராவணன்.
‘ஆன்ற எண் திசை உலகு
எலாம் சுமக்கின்ற யானை,
ஊன்று கோடு இறத் திரள் புயத்து அழுத்திய உரவோன்,
தோன்றும் என்னவே துணுக்கம் உற்று இரிவர், அத்தொகுதி
மூன்று கோடியின் மேல் ஒரு முப்பத்து மூவர். ‘ (6698)
அஷ்ட திக்கிலும்
நிலைபெற்று புவியைச் சுமக்கும் யானைகளுடன் பொருதி அதன் தந்தங்களை தம் மார்பில் வாங்கிக்
கொண்டவன் இராவணன்.
ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து
எழுவால்;
பாடு பட்டவர் பகுகடல் மணலினும்
பலரால்;
சூடு பட்டது தொல்நகர்; அடுபுலி
துரந்த
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர். (6704)
அனுமன்
அசோகவனத்தின் தூண் ஒன்றால் தாக்கிய போது உருக்குலைந்து போன அரக்கர்களின் எண்ணிக்கை
கணக்கில் அடங்காதது. மாண்ட அரக்கர்களின் எண்ணிக்கை மணற்துகளினும் அதிகம். இலங்கை தீக்கிரையானது.
ஆட்டு மந்தையில் நுழைந்த புலியென இருந்த அனுமனால் அச்சத்தில் சிதறி ஓடினர் அரக்கர்.
ஸ்ரீராமன்
வீடணனிடம் இலங்கையின் வலிமை குறித்து கேட்கிறார். முழுதும் உரைத்த பின் வீடணன், அத்தகைய
இலங்கையும் வானர சேனையின் தளபதியால் சின்னாபின்னமாக்கப்பட்டது என்ற விபரத்தை நினைவு
படுத்தி அமைகிறான்.