Friday, 1 January 2021

செயல் புரியும் கிராமம்

’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து நம் தளத்தில் எழுதும் போதெல்லாம்  கிராமத்தின் பெயரை ’’செயல் புரியும் கிராமம்’’ என்றே குறிப்பிட்டுள்ளேன். நாம் செயல் புரியும் கிராமம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நமது வேண்டுகோளை ஏற்று மக்கள் செயல் புரியும் கிராமம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை அந்த கிராமத்தின் பெயரைக் கூறவில்லை. அதில் ஒரு மந்தணம் இருப்பது ஒரு சில நன்மைகளுக்காகவே. முதல் விஷயம், இவ்வாறான ஒரு பணி வாய்ப்பு எல்லா கிராமங்களுக்கும் பொருந்தும். எனவே எல்லா கிராமங்களின் பெயரும் அக்கிராமத்தின் பெயரே. எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் எத்தனையோ இந்திய கிராமங்களின் வழியே சென்றுள்ளேன். அந்த கிராமங்களின் ஒரு பிரதிநிதியாக நான் இந்த கிராமத்தைப் பார்க்கிறேன். 

அந்த ஊருக்குள் நுழையும் போது, எனக்கு அந்த கிராமத்தில் யாரையும் தெரியாது. இன்று அந்த ஊரின் மக்கள் அனைவருமே என்னிடம் மனம் திறந்து பேசுகிறார்கள். அவர்களுடைய தேவைகள் குறித்து - அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து - அவர்களுடைய சிக்கல்கள் குறித்து என பல விஷயங்களைப் பேசுகிறார்கள். கேட்கிறார்கள். 

நான் வெறும் கருவி மட்டுமே; எனினும் நானும் மனிதன் தான். அவர்கள் என் மீது காட்டும் அன்பையும் பிரியத்தையும் நினைத்து இந்த கணம் நெகிழ்ந்து கண் கலங்குகிறேன். 

கிராமங்கள் குறித்த உண்மைக்கு மாறான பல விஷயங்கள் கிராமங்களில் வசிக்காத - கிராமங்களைக் கண்டறியாத மாநகரங்களில் நகரங்களில் வசிப்பவர்கள் மனத்தில் உள்ளன. அவை களையப்பட வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் சில எல்லைகளும் தடைகளும் இருப்பதைப் போல அவர்களுக்கும் சில உள்ளன. அவை நீக்கப்படுவதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும். 

அந்த கிராமத்தில் ஒரு ‘’எக்கனாமிக் சர்வே’’ எடுக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு சம்பவம் மட்டும் பதிவு செய்கிறேன். ஒரு விவசாயி. 3 ஏக்கர் நிலம் உடையவர். தன் வயலில் நாம் அளித்த 50 தேக்கு மரங்கள் நட்டிருக்கிறார். அவை இப்போது நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. மரம் நட்டிருக்கும் பகுதியைச் சுற்றி  முள்வேலி அமைக்க விரும்பினார். அதற்கான நிதி ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார். அவருக்குத் தேவைப்பட்டது ஒரு சொற்பமான தொகை தான். ’’தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ‘’கிஸான் கிரெடிட் கார்டு’’ வாங்கிக் கொள்ளுங்கள்; உங்கள் விவசாயத் தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.’’ என்று கூறினேன். தேவைப்பட்டால் நான் உடன் வந்து வாங்கித் தருகிறேன் என்றேன். ‘’விவசாயம் எப்போதும் முன்ன பின்ன இருக்கும். நம்மால மாச சம்பளம் வாங்குறவங்க போல ஒன்னாம் தேதி டியூ கட்ட முடியாது. ஓவர் டியூ ஆச்சுன்னா பேங்க்குக்கு கஷ்டம். நம்மால யாரும் சிரமப்பட வேண்டாம் சார்’’ என்றார். இதுக்கு முன்னாடி லோன் வாங்கி கட்டாம இருந்து இப்படி ஏதும் கஷ்டம் வந்திருக்கா என்றேன். ‘’இல்லை சார்! இது வரைக்கும் நான் எந்த லோனும் பேங்க்-ல வாங்கனதில்லை’’ என்றார். நடைமுறையில் இருக்கும் அரசுத் திட்டங்கள் அந்த கிராமத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.