தம்பி ஊருக்குக் கிளம்பினான்.
ஐந்து நாட்களாக பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான். எல்லாவற்றைப் பற்றியும் அவன் கேள்விப்படுபவற்றை தனது தரப்பு என நம்பிக் கொண்டிருக்கிறான். அதன் உண்மைகளை நுணுக்கி அறியும் உபகரணங்கள் இன்னும் அவனுக்கு வாய்க்கவில்லை. காலமும் அனுபவமும் அதனை அவனுக்கு வாய்க்கச் செய்யும்.
‘’அண்ணா! நான் உங்கள்ட்ட பாத்துட்டன். உங்களுக்கு திராவிட இயக்கம் பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனா தமிழ்நாட்டு மக்கள் பரவலா திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறாங்க.’’
‘’ஆதரிக்கிறாங்கன்னு எப்படி சொல்ற?’’
‘’பெரும்பாலானவங்க இட ஒதுக்கீடால பயன் அடைஞ்சிருக்காங்க. எல்லாரும் ஸ்கூலுக்குப் போய் படிக்கிறாங்க. காலேஜ் போறாங்க. நிறைய பேருக்கு அரசாங்க வேலை கிடைச்சிருக்கு. அது தொடரணும்னா திராவிட இயக்கம் தொடர்ந்து இருக்கணும்னு மக்கள் விரும்புவாங்க தானே.’’
நான் அவனிடம் என் தரப்பைக் கூறினேன்.
1. எந்த சமூகமும் அதன் வேர்களை முற்றாக அறுத்துக் கொண்டு வளர முடியாது. திராவிட இயக்கம் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையான வேரை அறுக்கும் இயல்பு கொண்டிருக்கிறது. எந்த அளவு தமிழ்ச் சமூகத்தின் வேர் அறுபடுகிறதோ அந்த அளவுக்கே அதனால் நிலை பெற முடியும். அவர்களுடைய வரலாறு அதுதான்.
2. ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாநில அரசு , தம் மக்களுக்கு கல்வி அளித்தே ஆக வேண்டும். அந்த விஷயத்தில் அவர்கள் மத்திய அரசுக்கு, மத்திய அரசின் தணிக்கை அமைப்புகளுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். அது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வு. கட்டாயம்.
3. ஒரு சமூகம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கு அடையாளம் அச்சமூகத்தில் எத்தனை பேர் தொழில் முனைவோராக இருக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களால் எவ்விதமான தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டதில்லை. அதாவது அவர்கள் முயற்சியால் எந்த முன்னேற்றமும் உண்டானதில்லை.
அவ்வாறு முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அந்த சமூகத்திற்குத் தரப்படும் கல்வியில் இருந்தே அதற்கான விஷயங்கள் இடம் பெற வேண்டும்.
4. சுற்றுலா தமிழ் நாட்டின் மிக வாய்ப்புள்ள தொழில். தொன்மையான ஆலயங்கள் இங்கே மாபெரும் வாய்ப்பு. இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் எல்லா குடும்பமும் வாழ்வில் ஒரு முறையாவது இராமேஸ்வரம் வருகிறார்கள். ரயில்வே இராமேஸ்வரத்தை நாட்டின் எல்லா நகரங்களுடனும் நேரடியாக இணைக்கிறது. ஆனால் மாநில அரசாங்கம் அவர்களை தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைக் காணச் செல்வதற்கு ஏதேனும் முயற்சி எடுத்திருக்கிறதா? வணிக வளர்ச்சியின் பெரும் பணியே தொடர்பு கொள்ளுதல். தமிழ்ச் சமூகம் எவருடன் தொடர்பு இல்லாமல் இருப்பதே திராவிட இயக்கத்திற்கு நலம் பயக்கும் என்பதால் அவர்கள் இவ்வாறு ஏதும் செய்ததில்லை.
5. நீர் மேலாண்மையின் பாரம்பர்ய முறைகள் அனைத்தையும் அழித்தது திராவிட இயக்கம். அதன் மூலம் விவசாயத்தை இலாபமற்ற ஒன்றாக மாற்றினார்கள்.
6. ஊழலை அரசாங்க நடைமுறையாக்கியது திராவிட இயக்கம். தங்கள் நலனுக்காக ஒரு சூம்பிப் போன அரசு வலைப்பின்னலை நிலை பெற வைத்துள்ளனர்.
7. தமிழ்ச் சமூகத்தில் ஜாதிய பிரிவினைகளைத் தூண்டி விட்டு மக்களைப் பிரித்தே வைத்து நன்மை அடைபவர்கள் திராவிட இயக்கத்தினர்.
8. தமிழ்நாட்டைப் போல மது கடலென நிறைந்திருக்கும் இன்னொரு இந்திய மாநிலம் இல்லை.