Sunday, 10 January 2021

வளர்ச்சி

இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். 

நான் எவரைச் சந்திக்கும் போதும் அவர்களாக ஆரம்பிக்காமல் பொது விஷயங்கள் குறித்து பேசுவதில்லை. ஒரு விஷயத்தைக் கேட்டு புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்களிடம் மட்டுமே அவர்கள் சொல்லும் விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் அம்சங்களைச் சுட்டிக் காட்டுவேன். எந்த விதத்திலாவது அவர்கள் சிந்தனைக்கு அது உதவ வேண்டும் என எண்ணுவேன். அந்த சாத்தியம் இல்லாத நபர்களிடம் நான் மௌனம் காத்து விடுவேன். 

‘’தமிழ்நாடு திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் காக்கப்பட்ட மாநிலம்’’ என்றார் நண்பர். 

‘’அவர்கள் எதைக் காத்தார்கள்?’’ நான் கேட்டேன். 

‘’தேசியத்துக்கு இங்கே இடம் கிடையாது. தேசியத்தை எதிர்த்து மாநில நலன்களை காத்தார்கள்’’ என்றார். 

நான் அவரிடம் சில விஷயங்களை முன்வைத்தேன். 

1. திராவிட இயக்கம் அடிப்படையில் எதிர்மறையான இயக்கம். அவர்கள் சமூக மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை. அவர்களைப் போல் இயங்கும் எவராலும் சமூக மாற்றத்தை உண்டாக்கிட முடியாது. 

சமூக மாற்றத்துக்காக சிந்திக்கும் உழைக்கும் அமைப்புகள் சாமானிய மக்கள் பொருளியல் நலன்களைப் பெற செயல்படுவார்கள். தமிழ்நாட்டில் அதனை முன்னெடுத்தது காந்திய அமைப்புகள். தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் திராவிட இயக்கம் சாமானியர்களின் பொருளியல் நலன் குறித்த எந்த செயல்பாட்டிலும் ஈடுபட்டதில்லை. 

2. திராவிட இயக்கத்தின் அரசியல் பாணி என்பது எதிர்மறைப் பிரச்சாரம். எதிர்மறை செயல்பாடுகள். எந்த பிரதேசத்திலும் பல ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் பண்பாட்டுக் கட்டமைப்புகளின் மீது அவர்கள் வசையையும் அவதூறையும் பரப்புவார்கள். 

‘’ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்கையிலே உனக்குத் தேரோட்டம் தேவைதானா தியாகராஜா?’’ என்பது அவர்களுடைய முழக்கம். 

தேர்த் திருவிழா ஒரு பண்பாட்டு நிகழ்வு. பல நூற்றாண்டுகளாக நிகழ்வது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் போது பல எளிய மக்களும் விவசாயிகளும் கைவினைஞர்களும் சிறு வணிகர்களும்  அதனால் பலன் பெறுகிறார்கள் என்பதே உண்மை. தேரோட்டம் தேவைதானா என்ற கேள்வி நேரடியாக எளிய மக்களையே பாதிக்கும். 

திராவிட இயக்க ஆட்சிக் காலத்தில் தேரோட்டம் மீண்டும் நடந்தது என்பார்கள். மேடை மேடையாக தேரோட்டம் தேவைதானா என கேட்டதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு தேரை ஓட்டவில்லை. 

3. திராவிட இயக்கம் எங்குமே மக்களை இணைத்தது இல்லை. மக்கள் பிரிந்து இருந்து பூசலிட்டவாறு இருப்பதன் மூலமே அவர்களால் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள இயலும். சாதிப் பூசல்கள் தமிழ்நாட்டில் இந்த அளவு இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கம். 

4. திராவிட இயக்கம் அரசாங்கம் என்ற அமைப்பை நம்பிச் செயல்படுவது. அதாவது அரசாங்கத்தின் கஜானாவை நம்பி இருப்பது. எனவே அரசு என்ற அமைப்பின் செயல்பாடுகளில் பொதுமக்களுக்கு எந்த புரிதலும் இருந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கருத்தாக இருக்கக் கூடியவர்கள். தங்கள் செயல்பாடுகள் தடையின்றி நடக்க அரசாங்க ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை திராவிட இயக்கம் பெரிய அளவில் ஊக்குவிக்கும். 

5. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பல விஷயங்களில் தமிழ்நாடு முன்னிலை பெற்றிருக்கிறது என்பார்கள். தொலைநோக்கு கொண்ட தலைமை தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கும் என்றால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளியல் மலர்ச்சியை உருவாக்கக் கூடிய பல ஆக்கபூர்வமான விஷயங்களை இங்கே நிகழ்த்த முடியும்.

அந்த சாத்தியத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழ்நாட்டை வைத்துள்ளார்கள்.

6. தமிழ்நாட்டில் எழுபது ஆண்டுகளாக திராவிட இயக்கம் விதைத்திருக்கும் விஷ வித்துக்கள் தமிழ்நாட்டு மக்கள் இணைந்து பொருளியல் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாத வண்ணம் செய்துள்ளது. அரசியலை மிகப் பெரிதாக எண்ணும் எந்த சமூகத்தாலும் வளர முடியாது. அதற்கு தமிழ்ச் சமூகமே உதாரணமாகி உள்ளது. 

7. திராவிட இயக்கத்தையும் சாராயத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சாராயத்தை ஊரெங்கும் பரப்பி கொண்டு சேர்க்கும் அவர்களுடைய செயல்பாடு ஒன்றே சாமானியர்கள் மேல் அவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்பதை உணர்த்தும்.