நேற்று அம்மாவின் கிராமத்தில், அம்மாவின் தாய்மாமா - வீரராகவன் தாத்தா- இயற்கை எய்தினார். 91 வயது.
அவரை வளர்த்தது என் பாட்டி. சிறு வயது முதலே வடலூர் இராமலிங்க சுவாமிகள் மீதும் தீப வழிபாட்டின் மீதும் பெரும் பற்று கொண்டவராய் இருந்தார். தனது 20வது வயதில் கிராமத்தில் வள்ளலார் ஆலயம் அமைக்க ஊர் நடுவே இருந்த மேட்டுப்பாங்கான 20,000 சதுர அடி மனையை ஊருக்கு தானமாக அளித்தார். இது நடந்தது 1950ம் ஆண்டு.
அங்கே ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்புடன் வள்ளலார் ஆலயம் கட்டப்பட்டது. ஜோதி ஏற்றப்பட்டு இன்றளவும் ஒளிர்கிறது. தீபத்திற்கு எண்ணெய் விடுதல் தாத்தாவின் பணி. காலை மாலை என இரண்டு வேளையும் ஆலயத்துக்குச் செல்வார். ஆலயத்தின் அருகே தான் அவரது வீடு. ஆலயப் பணிகள் இருப்பதனால் எந்த வெளியூர் சென்றாலும் ஒரே நாளில் ஊர் திரும்பி விடுவார். எப்போதும் திருவருட்பாவை ஓதிக் கொண்டிருப்பார். கையில் எப்போதும் திருநீறு இருக்கும். கிராமத்தில் அனைவரும் தைப்பூசத்திற்கு மூன்று நாட்கள் முன்னால் கிளம்பி வடலூர் சென்று வடலூரில் ஜோதி தரிசனம் செய்து விட்டு அன்னதானம் அளித்து விட்டு திரும்பும் போது வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த கருங்குழி, வள்ளலார் பிறந்த மருதூர் மற்றும் வள்ளலார் உள்ளம் உருகி வழிபட்ட சிதம்பரம் நடராஜர் ஆலயம் ஆகிய இடங்களில் வழிபாடு செய்து விட்டு ஊர் திரும்புவார்கள்.
ஊரில் விநாயகர் ஆலயம் உள்ளது. மாரியம்மன் கோவில் உள்ளது. திரௌபதி அம்மன் கோவில் இருக்கிறது. பெருமாள் கோவில் இருக்கிறது. வள்ளலார் கோவில் இருக்கிறது. அனைத்து ஆலயப் பணிகளையும் திருவிழாக்களையும் முன்னின்று நடத்தியவர்.
நான் சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே என் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். ஆயிரம் பிறைகள் கண்ட நிறை வாழ்வு. சுடர் தெய்வத்தின் ஆசியைப் பெற்ற வாழ்வு.
வீரராகவன் தாத்தாவுக்கு என் அஞ்சலி.