Sunday 17 January 2021

இந்திரஜித் வதைப் படலம்

9269.   ஏயினன் இன்னன் ஆக,

    இலக்குவன் எடுத்த வில்லான்,

சேய் இரு விசும்பை நோக்கி

    ‘வீடண! தீயோன் அப்பால்

போயினன் ஆதல் வேண்டும்;

    புரிந்திலன் ஒன்றும்என்பான்,

ஆயிரம் புரவி பூண்ட தேரின்

    பேர் அரவம் கேட்டான்.

 

வீடணனிடம் இலக்குவன் இந்திரஜித் களத்தை விட்டு அகன்று விட்டான் எனக் கூறிக் கொண்டிருந்த அதே கணத்தில் ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் ஒலியை இலக்குவன் கேட்டான்.

 

9272.   ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன்,

    அமரரும் வெருவினர்; கவிகுலமும்

வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்,

    விடுகணை சிதறினன்; அடுதொழிலோன்,

தீர்த்தனும், அவன் எதிர்முடுகி; நெடுந்

    திசைசெவிடு எறிதர, விசைகெழுதிண்

போர்த்தொழில் புரிதலும், உலகு கடும்

    புகையொடு சிகை அனல் பொதுளியதால

 

இந்திரஜித்தின் வரவைக் கண்டு அரக்கர்கள் ஆர்ப்பரித்தனர். தேவர்களும் வானரர்களும் அஞ்சினர். இந்திரஜித் தனது அம்புகளை எய்யத் துவங்கினான். அவற்றுக்கு நிகரான அம்புகளை இலக்குவனும் எய்தினான். அவற்றின் மோதலால் களம் பெரும் புகைமண்டலம் ஆனது.

 

 

 

9277.   ‘வில்லினின் வெல்லுதல் அரிதுஎனலால்,

    வெயிலினும் அனல் உமிழ் அயில், விரைவில்

செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று

    அது திசைமுகன் மகன் உதவியதால்;

எல்லினும் வெளிபட எதிர்வது கண்டு,

    இளையவன் எழுவகை முனிவர்கள்தம்

சொல்லினும் வலியது ஓர் சுடுகணையால்,

    நடு இரு துணிபட உரறினனால்.

 

அரிய ஈட்டி ஒன்றை இலக்குவன் மேல் ஏவினான் இந்திரஜித். அதனைத் தன் அம்பால் இரண்டாகப் பிளந்தான் இலக்குவன்.

 

9279.   ‘தேர் உளது எனின், இவன்வலி தொலையான்

    எனும் அது தரெிவு உற, உணர் உறுவான்

போர் உறு புரவிகள் படுகிலவால்;

    புனைபிணி துணிகில, பொருகணையால்;

சீரிது, பெரிது, இதன் நிலைமைஎனத்

    தரெிபவன் ஒரு சுடு தறெுகணையால்,

சாரதி மலை புரை தலையை நெடுந்

    தரையிடை இடுதலும் நிலை திரிய.

 

இந்திரஜித்துக்கு அவனுடைய தேரே பலம். அவனை வீழ்த்த வேண்டுமானால் அவனுடைய தேரை வீழ்த்த வேண்டும். இலக்குவனின் அம்புகளால் தேரின் குதிரைகளையோ தேர்க்காலையோ அழிக்க முடியவில்லை. எனவே ஓர் அம்பெய்தி அத்தேரின் பாகனை இலக்குவன் கொன்றான்.

 

9283.   ‘எய்தவன் பகழி எல்லாம் பறித்து,

    இவன் என்மேல் எய்யும்;

கய்தடுமாறாது; உள்ளம்,

    உயிர் இனம் கலங்காது யாக்கை

மொய்கணை கோடி கோடி

    மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்;

அய்யனும், ‘இவனோடு எஞ்சும்

    ஆண்தொழில் ஆற்றல்என்றான்.

 

இந்திரஜித்தின் வீரத்தை இலக்குவன் வியந்தான். அமரர்களும் வியந்து பொன்மலர் மாரி பொழிந்தனர்.

 

9284.   ‘தேரினைக் கடாவி, வானில்

    செல்லினும் செல்லும்; செய்யும்

போரினைக் கடந்து மாயம்

    புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்

காரினைக் கலந்து வஞ்சம்

    கருதினும் கருதும்; காண்டி,

வீர; மெய்; பகலின் அல்லால்,

    விளிகிலன் இருளின், வெய்யோன்.

 

வீடணன் இலக்குவனிடம் இந்திரஜித் இரவில் கூடுதல் பலம் பெற்று விடுவான்; அவனைப் பகலில் அழிப்பதே உசிதமானது எனக் கூறினான்.

 

9288.   ‘ஆர் அழியாத சூலத்து

    அண்ணல் தன் அருளின் ஈந்த

தேர் அழியாத போதும்,

    சிலை கரத்து இருந்த போதும்,

போர் அழியான், இவ் வெய்யோன்;

    புகழ் அழியாத பொன் தோள்

வீர! இது ஆணைஎன்றான்

    வீடணன், விளைவது ஓர்வான்.

 

வீடணன் இலக்குவனிடம், சங்கரன் அளித்த தேரும் வில்லும் இந்திரஜித் கையில் இருக்கும் வரை அவனை அழிக்க முடியாது என்று கூறினான்.

 

9289.   ‘பச்சை வெம்புரவி வீயா;

    பல இயல் சில்லி பாரில்

நிச்சயம் அற்று நீங்கா

    என்பது நினைந்து, வில்லின்

விச்சையின் கணவன் ஆனான்,

    வின்மையால், வயிரம் இட்ட

அச்சினோடு ஆழி வெவ்வேறு

    ஆக்கினான், ஆணி நீக்கி.

 

தேரின் கடையாணியை உடைத்து தேரை நிலைகுலையச் செய்தான் இலக்குவன்.

 

9290.   மணிநெடுந் தேரின் கட்டு

    விட்டு, அது மறிதலோடும்,

அணிநெடும் புரவி எல்லாம்

    ஆற்றல ஆய அன்றே

திணிநெடு மரம் ஒன்று

    ஆழிவாள் மழுத் தாக்க, சிந்திப்

பணை நெடு முதலும் நீங்க,

    பாங்கு உறை பறவை போல.



கோடரியால் தாக்கப்பட்ட பெருமரத்தின் பறவைகள் சிதறிப் போவது போல இந்திரஜித்தின் தேர் சிதறியது.



9295.   ‘சிலை அறாது எனினும், மற்று அத்

    திண்ணியோன் திரண்ட தோளாம்

மலை அறாது ஒழியாதுஎன்னா,

    வரிசிலை ஒன்று வாங்கி,

கலை அறாத் திங்கள் அன்ன

    வாளியால், கையைக் கொய்தான்,

விலை அறா மணிப்பூணோடும்,

    வில்லொடும், நிலத்து வீழ.

 

இந்திரஜித்தின் வில்லை உடைப்பதற்கு பதிலாக வில்லை ஏந்தியிருக்கும் இந்திரஜித்தின் கையை அறுத்தெரிந்தான் இலக்குவன்.

 

9302.   காற்று என, உரும் ஏறு என்ன,

    கனல் என, கடைநாள் உற்ற

கூற்றம் ஓர் சூலங்கொண்டு

    குறுகியது என்ன, கொல்வான்

தோற்றினான்; அதனைக் காணா,

    ‘இனி, தலைதுணிக்கும் காலம்

ஏற்றதுஎன்று, அயோத்தி வேந்தற்கு

    இளையவன் இதனைச் செய்தான்.

 

கொடும் கூற்றென எழுந்த இந்திரஜித்தினைக் கொன்று அழித்திட உறுதி கொண்டான் இந்திரஜித்.

 

9303.   ‘மறைகளே தேறத்தக்க,

    வேதியர் வணங்கற் பால

இறையவன் இராமன் என்னும்

    நல் அறமூர்த்தி என்னின்,

பிறை எயிற்று இவனைக் கோறி

    என்று, ஒரு பிறைவாய் வாளி

நிறை உற வாங்கி விட்டான்

    உலகு எலாம் நிறுத்தி நின்றான்.

 

இராம நாமம் உரைத்து தன் அம்பை இந்திரஜித் மேல் செலுத்தினான் இலக்குவன்.

 

9304.   நேமியும், குலிச வேலும்,

    நெற்றியின் நெருப்புக் கண்ணான்

நாம வேல் தானும், மற்ற

    நான்முகன் படையும், நாண,

தீ முகம் கதுவ ஓடிச் சென்று,

    அவன் சிரத்தைத் தள்ளி,

பூமழை அமரர் சிந்த,

    பொலிந்தது அப் பகழிப் புத்தேள்.

 

ராம நாமம் சொல்லி ஏவப்பட்ட அம்பு இந்திரஜித் தலையைக் கொய்தது.

 

 

9321.   கம்ப மதத்துக் களியானைக்

    காவல் சனகன் பெற்றெடுத்த

கொம்பும் என்பால் இனிவந்து

    குறுகினாள் என்று அகம்குளிர்ந்தேன்;

வம்பு செறிந்த மலர்க்கோயில்

    மறையோன் படைத்த மாநிலத்தில்,

தம்பி உடையான் பகை அஞ்சான்

    என்னும் மாற்றம் தந்தனையால்.

 

இராமன் இலக்குவனிடம் உன் வீரத்தை முழுமையாகக் கண்ட போது மீண்டும் சீதையை அடைந்த மகிழ்ச்சியை அடைந்தேன். தம்பி உடையான் பகைக்கு அஞ்சான் என்பதை உணர்ந்தேன். என்றார்.