Monday 18 January 2021

இராவணன் தேர் ஏறு படலம்

9785.   எற்றிய முரசங் கேளா,
    ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை
    குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும்,
    துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன
    இலங்கை ஊர் வறளிற்று ஆக.
 
முரசொலி கேட்டதும் லட்சோப லட்சம் அரக்கர் போருக்குத் திரண்டனர். அரக்கர் இல்லாத இலங்கை நீர் வற்றிய கடல் போல காட்சியளித்தது.
 
9786.   ஈசனை, இமையா முக்கண்
    ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து,
    திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும்
    வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப்
    போர்த்தொழிற்கு அமைவது ஆனான்
 
இராவணன் சிவபெருமானை பூசித்தான். கொடைகளை வழங்கினான். போருக்குப் புறப்பட்டான்.
 
9787.   அருவி அஞ்சனக் குன்றிடை
    ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம்
    என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில்
    படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த
    பொன்கவசமும், சேர்த்தான்.
 
இராவணன் இந்திரனிடமிருந்து பெற்ற பொற்கவசம் பூண்டு போருக்குக் கிளம்பினான்.
 
9801.   வருக, தேர்! ‘என வந்தது
    வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன்
    இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது;
    துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச்
    செல்வது, ஓர் இமைப்பில்.


தனது தேரை ஒருங்கமைக்க ஆணையிட்டான்.


9803.   பாரில் செல்வது, விசும்பிடைப்
    படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும்
    செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு
    முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும்
    செல்வது, ஓர் இமைப்பின்.
 
இராவணனது தேர் நிலத்தில் செல்வது. நீரில் செல்வது. போர்க்களங்களுக்கு ஏற்றது. வானுலகில் செல்வது. எந்த உலகத்துக்கும் செல்லக் கூடியது.
 
9808.   ஏறினான் தொழுது; இந்திரன்
    முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார்,
    மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை,
    மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார்,
    உலகு எலாம் அனுங்க.
 
இராவணன் தேரில் ஏறிய கணத்தில் புவியிலும் வானுலகத்திலும் உள்ளோர் அனைவரும் அச்சத்தில் நடுங்கினர்.
 
9809.   மன்றல் அம்குழல் சனகி தன்
    மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந்
    துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள்
    அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென்,
    தலைப்படின்என்றான்.
 
இன்று ஜானகி துயரடைய வேண்டும். அல்லது மண்டோதரி துயரடைய வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.
 
9810.   பல களம் தலை மௌலியோடு
    இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும்
    படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை
    விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன்
    ஆம் என உயர்ந்தான்.
 
பேருரு கொண்டு யுத்தத்துக்கு எழுந்தான் இராவணன்.


9817.   கடல்கள் யாவையும், கன மலைக்
    குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச்
    செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும்,
    தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை
    என்பதுங் கண்டார்.
 
கடலலைகள் என ஒலி எழுப்பி ஆர்ப்பரித்தது அரக்கர் சேனை.
 
9818.   எழுந்து வந்தனன் இராவணன்;
    இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது;
    கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்!
    அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்என்றனன்,
    வீடணன், விரைவான்.
 
அச்சமேற்படுத்தும் விதத்தில் இராவணன் யுத்தத்துக்குக் கிளம்பி வந்திருக்கிறான் என வீடணன் ஸ்ரீராமனிடம் கூறினான்.
 
9819.   தொழும் கையொடு, வாய் குழறி,
    மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு
    பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி
    ‘அஞ்சல்என அந்நாள்,
எழுந்தபடியே கடிது
    எழுந்தனன், இராமன்.
 
அபய ஹஸ்தத்துடன் எழுந்தான் ஸ்ரீராமன்.
 
9820.   கடக் களிறு எனத்தகைய
    கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும்
    வாள் வலன் விசித்தான்,
மடக்கொடி துயர்க்கும், நெடு
    வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு,
    இன்றுஎன இசைத்தான்.
 
ஜானகியின் துயருக்கும் வானோரின் அல்லலுக்கும் இன்றுடன் முடிவு ஏற்படும் என்ற உறுதியுடன் எழுந்தான் ஸ்ரீராமன்.
 
9823.   மூண்டசெரு இன்று அளவில்
    முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி
    அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய
    மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘
    என்று அரன் இசைத்தான்.
 
இந்த யுத்தம் இன்றுடன் நிறைவு பெறும் என்றார் சிவபெருமான். ஸ்ரீராமருக்கு ரதத்தை வழங்குமாறு தேவர்களிடம் கூறினார் சிவபெருமான்.
 
9824.   தேவர் அதுகேட்டு, ‘இது
    செயற்கு உரியதுஎன்றார்;
ஏவல் புரி இந்திரனும்
    அத் தொழில் இசைந்தான்,
மூவுலகும் இன்று ஒரு
    கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு
    தேர் கொணர்திஎன்றான்.
 
இந்திரன் ஸ்ரீராமன் யுத்தம் செய்ய தன்னுடைய தேரை வழங்கினான்.