Monday 18 January 2021

இராமன் தேர் ஏறு படலம்

9825.   மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்

பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;

சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்

பாதம் எனநின்றது பரந்தது விசும்பின்.

 

பொன்னைப் போல் ஒளி விடும் தேரை மாதலி ஸ்ரீராமனுக்காக ஓட்டி வந்தான்.

 

9833.   வந்ததனை வானவர்

    வணங்கி, ‘வலியோய்! நீ

எந்தை தர வந்தனை;

    எமக்கு உதவுகிற்பாய்;

தந்தருள்வை வென்றிஎன

    நின்று, தகை மென் பூச்

சிந்தினர்கள்; மாதலி

    கடாவி நனி சென்றான்.

 

‘’இந்திரனின் சார்பில் உன்னை அனுப்புகிறோம். தேவர்கள் மகிழ்வடையும் விதமாக உனது சேவை அமைய வேண்டும்’’ என்று கூறி மாதலியை களத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

9834.   ‘வினைப்பகை விசைக்கொடு

    விசும்பு உருவி, மான

மனத்தின் விசைபெற்றுளது

    வந்ததுஎன வானோடு

அனைத்து உலகமும் தொழ,

    அடைந்தது, அமலன்பால்;

நினைப்பும் இடை பின் பட

    நிமிர்ந்து உயர் நெடுந்தேர்.

 

மாதலி பாகனாய் இருந்த தேர் ஸ்ரீராமனை அடைந்தது.

 

9835.   ‘அலரி தனி ஆழி புனை

    தேர் இது எனின், அன்றால்;

உலகின் முடிவில் பெரிய

    ஊழ் ஒளி இது அன்றால்;

நிலைகொள் நெடு மேரு கிரி

    அன்று; நெடிது அம்மா!

தலைவர் ஒரு மூவர் தனி

    மானம் இது தானோ?

 

எல்லா விதத்திலும் உயர்வானது அத்தேர்.

 

9836.   ‘என்னை இது நம்மை இடை

    எய்தல்? ‘என எண்ணா,

மன்னவர்தம் மன்னன்மகன்,

    மாதலியை, ‘வந்தாய்,

பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு,

    ஆர்புகல? ‘என்றான்;

அன்னவனும் அன்னதனை

    ஆக உரை செய்தான்.

 

இராவணனுக்கு எதிரான யுத்தத்தில் வானர சேனைக்கு உதவிடும் விதமாக இந்த தேரை அனுப்ப உத்தரவிட்டது யார் என மாதலியிடம் ஸ்ரீராமன் கேட்டார்.



9837.   ‘முப்புரம் எரித்தவனும்,

    நான்முகனும், முன்நாள்

அப்பகல் இயற்றி உளது;

    ஆயிரம் அருக்கர்க்கு

ஒப்பு உடையது; ஊழி திரி

    காலும் உலைவு இல்லா

இப்பொரு இல் தேர் வருவது

    இந்திரனது எந்தாய்!

 

அமரர் தலைவனான இந்திரனின் கட்டளைப்படி வந்துள்ளதாக மாதலி கூறினான்.

 

9842.   ஐயன் இதுகேட்டு, ‘இகல்

    அரக்கர் அகல் மாயச்

செய்கை கொல்? ‘எனச் சிறிது

    சிந்தையில் நினைந்தான்;

மெய் அவன் உரைத்ததுஎன

    வேண்டி, இடை பூண்ட

மொய் உளை வயப்பரி

    மொழிந்த, முது வேதம்.

 

’இது அரக்கர்களின் மாயமாக இருக்குமோ என ஸ்ரீராமன் சிந்தித்ததை அறிந்த தேரின் புரவிகள் வேத கோஷம் செய்தன.

 

9843.   ‘இல்லை இனி ஐயம்என

    எண்ணிய இராமன்,

நல்லவனை, ‘நீ உனது

    நாமம் நவில்க! ‘என்ன,

வல் இதனை ஊர்வது ஒரு

    மாதலி எனப்பேர்

சொல்லுவர்எனத் தொழுது,

    நெஞ்சினொடு சொன்னான்.

 

ஐயம் நீங்கிய ஸ்ரீராமனின் மாதலியிடம் அவன் நாமம் என்ன என்று கேட்டான்.

 

9844.   மாருதியை நோக்கி, இள

    வாள் அரியை நோக்கி,

நீர் கருதுகின்றதை

    நிகழ்த்தும்என, நின்றான்

ஆரியன்; வணங்கி அவர்,

    ‘ஐயம் இலை, ஐயா!

தேர் இது புரந்தரனது

    என்றனர், தெளிந்தார்.

 

அனுமனும் இலக்குவனும் இது இந்திரனின் தேர் என உறுதிப்படுத்தினர்.








9845.   விழுந்து புரள் தீவினை

    குலத்தோடும் வெதும்ப,

தொழும் தகைய நல்வினை

    களிப்பினொடு துள்ள,

அழுந்து துயரத்து அமரர்

    அந்தணர் கைமுந்துற்று

எழுந்து தலை ஏற, இனிது

    ஏறினன் இராமன்.


தீவினைகள் வாட நற்செயல்கள் துள்ளி எழ அமரரும் அந்தணரும் கை உயர்த்தி வாழ்த்த இனிதே தேரில் ஏறினான் ஸ்ரீராமன்.