Saturday 30 January 2021

அறிவார் தொழில்

 அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
-திருக்குறள்

என்னுடைய மடிக்கணினி பத்து நாட்களாக வேலை செய்யவில்லை. என்னுடைய அலைபேசியின் சிம் கார்டு அலைக்கற்றைகளை உள்வாங்க இயலாததாக ஆகி விட்டது. எனவே மடிக்கணினி அலைபேசி இரண்டும் இல்லாமல் கடந்த வாரமும் இந்த வாரமும் இருக்க வேண்டியதாயிற்று. இந்த இடைவெளி தேவையான ஒன்றுதான் என்று தோன்றியது. கடந்த 15 ஆண்டுகளில் உலகம் தகவல்களாலும் தொடர்பு சாதனங்களாலும் நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் பழக்கத்தின் அடிப்படையில் அவற்றை ஏற்கிறோம். இருப்பினும் அவை நம் பணியாளே. எஜமானன் அல்ல. எனினும் மனித இயல்பு என்பது எதிலும் சிக்கிக் கொள்வதாகவும் மீள இயலாமல் தவிப்பதாகவுமே இருக்கிறது. 

இந்த 10 நாட்களில் எனது இயங்குமுறை பெரிதும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல்களை இணைய மையத்தில் பார்த்தேன். எழுத வேண்டியவற்றை காகிதத்தில் பேனாவால் எழுதினேன். 

ஒரு விடுபடலை உணர்ந்தேன். நான் இணையத்தையும் அலைபேசியையும் குறைவாகப் பயன்படுத்துபவனே. என் வலைப்பூவில் பதிவுகள் இடுவேன். குறிப்பிட்ட சில இணையதளங்களை மட்டுமே வாசிப்பேன். ஹிந்துஸ்தானி இசை கேட்பேன். அவ்வளவே. என்னுடைய அலைபேசி ஜி. எஸ்.எம் அலைபேசி. அதில் பேசலாம். அலாரம் வைக்கலாம். டார்ச் உள்ளது. வேறு வசதி ஏதும் கிடையாது. 

10 நாளில் நானே ஒரு இடைவெளியையும் ஆசுவாசத்தையும் உணர்கிறேன் எனில் தமிழ்ச் சமூகம் ஸ்மார்ட் ஃபோனில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கிறது. அதன் நிலையை எண்ணிப் பார்த்தேன்.

எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஓர் அரசன் தான் மிகவும் விரும்பும் பழத்தைக் கொண்டு வருபவருக்கு எடைக்கு எடை தங்கம் தருவதாக அறிவித்தாராம். ஆனால் ஒரு நிபந்தனை. அந்த பழம் அவர் அறிந்ததாகவோ அந்த பழத்தின் சுவை அவருக்குப் பழகிய ஒன்றாகவோ இருந்தால் கொண்டு வருபவரின் இன்னொரு பழம் கொண்டு வருபவரின் வாயில் திணிக்கப்படும். தோலோடு உட்கொள்ள வேண்டும். ஒருவன் அத்திப்பழம் கொண்டு வந்தான். இன்னொருத்தன் திராட்சைப் பழத்துடன் வந்தான். நாவல் பழம் வேறொருவனுடையது. அரசர் அப்பழங்களின் சுவையை அறிந்திருந்தார். அவர்கள் இரண்டாவது பழத்தை உண்டு விட்டு சென்றனர். தோலுடன் அவற்றை உண்பதில் சிக்கல் ஏதும் இல்லை. ஒருவன் எலுமிச்சைப் பழம் கொண்டு சென்றான். அரசர் அதன் சுவை அறிவார்; சற்று சிரமப்பட்டு தோலுடன் பழத்தின் புளிப்பைத் தாங்கிக் கொண்டு உண்டு விட்டான். அத்தியும் திராட்சையும் நாவலும் கொண்டு சென்றவர்கள் எலுமிச்சையைத் தோலுடன் உண்டதை எப்படி உணர்கிறாய் என்று அவனிடம் கேட்டார்கள். அவன் கூறினானாம் : என்னுடைய நிலைமை பரவாயில்லை. அங்கே ஒருவன் பலாப்பழத்துடன் வந்திருக்கிறான் என்று.