Tuesday 23 February 2021

இராவணன் வதைப் படலம்

 9847. ‘எழுக தேர்; சுமக்க எல்லோம்
    வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க,
    வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார் ‘என்று
    ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச்
    சென்றது, மூரித் திண் தேர்.

எழட்டும் ஸ்ரீராமனின் தேர் . எங்கள் துயர் நீங்கட்டும். இராவணன் வீழ்சசி அடையட்டும். மன்னர் மன்னனான ஸ்ரீராமசந்திர மூர்த்தி வெல்லட்டும். அரக்கியர் துயரத்தால் விம்மி அழட்டும்.  


9848. அன்னது கண்ணில் கண்ட
    அரக்கனும், ‘அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர் ‘என்று உன்னி,
    வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், ‘அதுகிடக்க ‘என்னா,
    தன்னுடைப் பெருந் திண் தேரை
மின் நகு வரிவில் செங்கை
    இராமன் மேல் விடுதி ‘என்றான்


தேவேந்திரனின் தேரில் ஸ்ரீராமன் வருவதை இராவணன் நோக்கினான். இராமனின் தேரை நோக்கி தன் தேரை செலுத்துக என பாகனிடம் கூறினான்.  

9849. இரிந்த வானரங்கள் எல்லாம்,
    ‘இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு
    ஐயுறவு இல் ‘என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும்
    சிந்தினர்; ‘திசையோடு அண்டம்
பிரிந்தன கொல்! ‘என்று எண்ணப்
    பிறந்தது, முழக்கின் பெற்றி.

ஸ்ரீராமனின் வெற்றி உறுதியானது என்பதை உணர்ந்த வானரங்கள் ராமநாமத்தை உற்சாகமாய் முழங்கின.


9863. அடல்வலி அரக்கற்கு அப்போது,
    அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, எற்றிக்
    கால் கிளர்ந்து உடற்றுங் காலை,
வடவரை முதல ஆன
    மலைக்குலம் சலிப்ப மான,
சுடர் மணி வலயம் சிந்தத்
    துடித்தன, இடத்த பொன் தோள்.


இராவணன் தோள்கள் துடிக்க யுத்தத்தில் இறங்கினான்.

9869. கருமமும் கடைக்கண் உறும் ஞானமும்
அருமை சேரும் அறிவும் அவிச்சையும்
பெருமைசால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினார்.

கர்மவினையும் ஞானமும் அறிவும் அஞ்ஞானமும் ஒருவன் செய்த பாவமும் அவன் புரிந்த அறச்செயல்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மோதுவது போல ஸ்ரீராமனும் இராவணனும் மோதினார்கள். 


9871. வென்றி அம்திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர்
அன்றியும் நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார்.


இருவரும் திசை வேழங்கள் மோதிக் கொள்வது போல் மோதிக் கொண்டனர். நரசிம்மமும் இரணிய கசிபும் யுத்தம் புரிந்தது போல் புரிந்தார்கள்.


9873. கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க தொல் அண்டம் வெடிபட
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான்.

இராவணன் தன் சங்கின் மூலம் பெருமுழக்கம் செய்தான்.

9874. சொன்ன சங்கினது ஓசை துளங்குற
‘என்ன சங்கு? ‘என்று இமையவர் ஏங்குற
அன்ன சங்கைப் பொறாமையின் ஆரியன்
தன்னவெண் சங்கு தானும் முழங்கிற்றால்.

பெருமாளின் பாஞ்சஜன்யம் தானாகவே ஒலித்தது.

9878. சென்ற தேரோர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங்கண் குதிரை குதிப்பன
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன.


இருவரின் தேர்ப்பரிகளும் மோதிக் கொள்ள தயாராயின.

9879. கொடியின்மேல் உறை வீணையும் கொற்ற மா
இடியின் ஏறும் முறையின் இடித்தன
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஓர் மூரி முழக்கின.

ஒரு புறம் வீணைக் கொடி. மறுபுறம் மின்னல் கொடி. 


9880. ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்த என்னல் ஆம்
வீழி வெங்கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி மாமழை ஒத்ததால்.

இராவணின் வில் பேரலைகள் என முழங்கின. ஸ்ரீராமனின் வில் மாமழை என முழங்கியது. 
கடல் பெரிது எனினும் அதற்கு அடிப்படையானது மழை. 


9883. சேண வந்து அமர் நோக்கும் செழும்புயம்
பூண் அழுந்தின; சிந்தின பூமழை
காண வந்த கடவுளர் கை எலாம்
ஆண் அவன் துணை ஆருளர் ஆகுவார்.

ஸ்ரீராமன் மேல் மலர்மாரி பொழிந்தனர் தேவர்கள். 


9888. மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்

நால் கலங்க நகும்தொறும் நாவொடு

கால் கலங்குவர் தேவர்; கண மழை

சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால்.


இராவணனின் பெருஞ்சிரிப்பைக் கண்டு அரக்கர்கள் அஞ்சினர்.



9895. விண்போர்த்தன; திசை போர்த்தன;

    மலைபோர்த்தன; இமையோர்

கண்போர்த்தன; கடல் போர்த்தன;

    படிபோர்த்தன; கலையோர்

எண்போர்த்தன; எரிபோர்த்தன;

    இருள்போர்த்தன; ‘என்னே

திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின்

    உரி போர்த்தவன் திகைத்தான்.


இராவணனின் அம்புகள் விண்ணை மறைத்தன. திசைகளை மறைத்தன. தேவர் உலகை மறைத்தது. கடலை மறைத்தது. தீயை மறைத்ததை. 


கரிய வேழத்தை ஆடையாய்ப் போர்த்திய சிவபெருமான் இராவணனின் யுத்தத் திறனை வியந்து கவனித்தார். 


9896. அல்லா நெடும் பெருந்தேவரும்

    மறைவாணரும் அஞ்சி,

எல்லாரும் தம் கரங்கொண்டு இரு

    விழிபொத்தினர், இரிந்தார்;

செல் ஆயிரம் விழுங்கால் உகும்

    விலங்கு ஒத்தது சேனை;

வில்லாளனும் அதுகண்டு, அவை

    விலக்கும் தொழில் வேட்டான்.


வானர சேனையை இராவணன் அம்புகளிலிருந்து எப்படி காப்பது என ஸ்ரீராமன் யோசித்தான்.


9916. ஒறுத்து உலகு அனைத்தையும்

    உரற்றும் ஓட்டின,

இறுத்தில; இராவணன்

    எறிந்த எய்தன

அறுத்ததும் தடுத்ததும்

    அன்றி, ஆரியன்

செறுத்து ஒரு தொழில் இடை

    செய்தது இல்லையால்.


இராவணன் அம்புகளை செயலிழக்கச் செய்யும் யுத்தத்தையே ஸ்ரீராமன் மேற்கொண்டார்.


9923. ‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்

ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்

வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்

காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே.


புவி அதிரும் ஒரு யுத்தம் அங்கே நடந்தது. 


9924.     அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி

பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல

வெங்கதிர் தண்கதிர் விலங்கி மீண்டன

மங்குலும் நெடுமழை வறந்து சாய்ந்ததால்.


ஸ்ரீராமன் மீதுஅம்புகள் பட்டதால்,

ஒளி தன் இயல்பு அழிந்து மங்கியது. ஆர்ப்பரிக்கும் அலைகடல் ஓய்ந்தது. சூரியன் மறைந்தது. இயற்கை தன் இயல்பிலிருந்து மாறியது.


9929.   தூண் உடை நிரை புரை கரம் அவை தொறும் அக்

கோண் உடை மலை நிகர் சிலை இடை குறைய,

சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வோடு

ஊண் உடை உயிர் தொறும் உறை உறும் ஒருவன்.


எவராலும் தோற்கடிக்க முடியாத

அம்புகளை ஸ்ரீராமன் இராவணனை நோக்கி ஏவினான்.


9930.   கயில் விரிவுற வரு கவசமும் உருவிப்

பயில் விரி குருதிகள் பருகிட வெயிலோடு

அயில் விரி சுடுகணை கடவினன் அறிவின்

துயில் புரிவுழி உணர் சுடர் ஒளி ஒருவன்


ஸ்ரீராமனின் அம்புகள்

இராவணனின் கவசத்தை உடைத்து அவன் நெஞ்சக் குருதியை வெளிக் கொண்டு வந்தன.


9931.   திசை உறு துகிலது செறி மழை சிதறும்

விசை உறு முகிழது விரிதரு சிரனோடு

இசை உறு கருவியின் இலகுறு கொடியைத்

தசை உறு கணை கொடு தரை உற இடலும்.


இராவணனின் வீணைக் கொடியை வீழ்த்தின ஸ்ரீராமனின் அம்புகள்.


9935.   தீ முகம் உடையன சில முகம்; உதிரம்

தோய் முகம் உடையன; சுரர்முகம் உடைய;

பேய் முகம் உடையன; பில முகம் நுழையும்

வாய் முக வரி அரவு அனையன வருமால்.


தீ முகம் கொண்டிருந்தன சில

அம்புகள். குருதி கொட்டும் முகம் கொண்டிருந்தன சில அம்புகள். தேவர்களின் முகம் சில அம்புகளுக்கு. பேய்களின் முகத்துடன் சில அம்புகள். பாம்பு வடிவம் கொண்டிருந்தன சில.


9967.   ‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்

உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும் ஓடத்

துரத்தியால்என, ஞானமாக் கடுங்கணை துரந்தான்

சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தொடரவும் சேயோன்.


இராவணனின் மாயாஸ்திரங்களை

தனது ஞான அஸ்திரத்தால் துரத்தினான் ஸ்ரீராமன்.


9968.   துறத்தல் ஆற்றுறு ஞானமாக் கடுங்கணை தொடர,

அறத்து அலாது செல்லாத நல் அறிவு வந்து அணுக,

பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை

மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அம்மாயம்.


தன்னை முற்றறிதலால் மாயை இல்லாமல் ஆவதைப் போல

ஞானாஸ்திரத்தால் மாயாஸ்திரம் இல்லாமல் ஆனது.


9979.   ‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்

அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகின்றான்;

தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;

இவனோதான் அவ் வேதமுதல் காரணன்? ‘என்றான்.


இவனே கடவுளோ? இவன் சிவனும்

அல்ல; திருமாலும் அல்ல. பிரும்மனும் அல்ல. எனது எல்லா வரங்களையும் உடைத்தெறிகிறான். யார் இவன்? இவனே கடவுளோ?


9980.   ‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை

பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன்

நேரே செல்வென், கொல்லும் எனின்தான் நிமிர்வென்றி

வேரே நிற்கும்; மீள்கிலது என்னா, மிடல், உற்றான்.


எதிரில் நிற்பது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எனது யுத்தத்தை நான்

முழுமையாக நிறைவு செய்து முடிப்பேன்.

 

9992.   வேதியர் வேதத்து மெய்யன் வெய்யவர்க்கு

ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்

சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்

பாதியின் மதிமுகப் பகழி ஒன்றினால்.


இராவணின்

தலை ஒன்றினை தன் பிறையம்பினால் கொய்தான் ஸ்ரீராமன்.

9993.   மேருவின் கொடுமுடி வீசு கால் எறி

போரிடை ஒடிந்துபோய் புணரி புக்கு என

ஆரியன் சரம்பட அரக்கன் வன்தலை

நீரிடை விழுந்தது நேர்கொண்டு ஒன்றுபோய்.


வீழ்த்தப்பட்ட இராவணன் தலையை ராமபாணம் கடலில் கொண்டு போய் தள்ளியது.


9994.   குதித்தனர் பாரிடை குன்று கூறு உற

மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினர்;

துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினர்;

மதித்தனர் இராமனை வானுேளார் எலாம்.


இராவணன் தலை வீழ்த்தப்பட்டதால் மகிழ்ந்து கொண்டாடினர் தேவர்கள்.

 9995.   இறந்ததோர் உயிர் உடன் தருமத்து ஈட்டினால்

பிறந்துளதாம் எனப் பெயர்த்தும் ஓர்தலை

மறந்திலது எழுந்தது மடித்த வாயது;

சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ?


கர்ம வினையால் இறப்புக்குப் பின் மீண்டும் ஒரு பிறப்பு நிகழ்வது போல இராவணனின் தவப்பயனால் தலை கொய்யப்பட்ட இடத்திலிருந்து மேலும் ஒரு தலை முளைத்தது.  

9996.   கொய்தது கொய்து இலது என்னும் கொள்கையின்

எய்த வந்து, அக்கணத்து எழுந்ததோர் சிரம்,

செய்த வெஞ்சினத்துடன் சிறக்கும் செல்வனை

வய்தது, தழெித்தது, மழையின் ஆர்ப்பது.


புதிதாக முளைத்த தலை

ஸ்ரீராமனை வசைபாடியது.


10005. ஓய்வு அகன்றது ஒருதலை நூறு உற

போய் அகன்று புரள பொருகணை

ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி

நாயகன் கைக் கடுமை நடத்துவான்.


தனது ஆயிரக்கணக்கான அம்புகளால் புதிதாக முளைத்துக் கொண்டிருந்த இராவணனின்

தலைகளை அறுத்துத் தள்ளினான் ஸ்ரீராமன்.


10008. பொழுது நீடித்த புண்ணியம் போனபின்

பழுது செல்லும் அன்றே மற்றைப் பண்பு எலாம்?

தொழுது சூழ்வன முன் இன்று தோன்றிட

கழுது சூன்ற இராவணன் கண் எலாம்.

 

ஒருவனுடைய புண்ணியம் அவனை விட்டு நீங்கிய பின் அவனைக் காத்து நின்ற மற்ற நல்ல தன்மைகளும் நீங்கி விடுகின்றன. இராவணன் அனைத்தாலும் கைவிடப்பட்டவனானான்.

 

10009. வாளும் வேலும் உலக்கையும் வச்சிரக்

கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும்

தோளின் பத்திகள் தோறும் சுமந்தன

மீளி மொய்ம்பன் உரும் என வீசினான்.

 

தனது இறுதி வலிமையைத் திரட்டி தன் கைகளிலிருந்த வாள், வேல், உலக்கை, வஜ்ரம், தண்டு, மழு ஆகிய ஆயுதங்களால் தாக்கினான்.

 

10016. கய் துறந்த படையினன் கண் அகல்

மெய்துறந்த உணர்வினன் வீழ்தலும்

எய்திறம் தவிர்ந்தான் இமையோர்களை

உய்திறம் துணிந்தான் அறம் உன்னுவான்.

 

முற்றிலும் சோர்ந்து விட்ட இராவணன் மீது அம்புகளை எய்யாமல் சிறிது நேரம் இருந்தான் ஸ்ரீராமன்.

10017. ‘தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது;

ஊறு தான் உற்ற போழ்தே உயிர்தனை

நூறுவாய்என மாதலி நூக்கினான்;

ஏறு சேவகனும் இது இயம்பினான்.

 

இராவணன் செயலற்று இருக்கும் போதே அவன் மீது அம்பு எய்து அவனைக் கொல்க என மாதலி ஸ்ரீராமனிடம் கூறினான்.

 

10018. ‘படைதுறந்து மயங்கிய பண்பினோன்

இடை பெறும் துயர் பார்த்து இகல்நீதியின்

நடைதுறந்து உயிர்கோடலும் நன்மையோ?

கடைதுறந்தது போர் என்கருத்துஎன்றான்.

 

மயங்கிக் கிடக்கும் இராவணனை எவ்வாறு கொல்வது; அது போர்நெறி அன்று என்றான் ஸ்ரீராமன்.

 

10027. கூற்றின் வெங்கணை கோடியின் கோடிகள்

தூற்றினான் வலி மும்மடி தோற்றினான்;

வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால்

ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார்.

 

விழிப்புற்ற இராவணன் தனது பாரிய யுத்தத்தை மேற்கொள்ளத் துவங்கினான்.

 

10028. “‘எல் உண்டாகின் நெருப்பும் உண்டுஎன்னும் இச்

சொல் உண்டாம்; அது போல், இவன் தோளிடை

வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம்எனா,

செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான்.

 

நெருப்பின்றி புகை எழுவது இல்லை. இராவணன் வில் அவன் கையில் இருக்கும் வரை யுத்தம் நிற்கப் போவது இல்லை.

 

10032. இருப்பு உலக்கை, நீள்தண்டு, வேல், ஈட்டி, வாள்,

நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,

திருப் புலக்க உய்த்தான் திசை யானையின்

மருப்பு உலக்க வழங்கிய மார்பினான்.

 

ஸ்ரீராமன் மார்பைக் குறி வைத்து ஆயுதங்களால் தாக்கத் துவங்கினான் இராவணன்.

 

10035. ‘நாரணன் திரு உந்தியில் நான்முகன்

பார வெம்படை வாங்கி இப் பாதகன்

மாரின் எய்வென்என்று எண்ணி வலித்தனன்

ஆரியன் அவன் ஆவி அகற்றுவான்.

 

நான்முகன் கணையால் இராவணனைத் தாக்குவேன் என ஸ்ரீராமன் எண்ணினான்.

 

10036. முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்

அந்தணன் படை வாங்கி அருச்சியா

சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா

மந்தரம் புரை தோள் உற வாங்கினான்.

 

பிருமாத்திரத்தை எடுத்து தன் வில்லில் நாண் ஏற்றி தொடுக்கத் தயாரானான் ஸ்ரீராமன்.

 

10037. புரம் சுடப் பண்டு அமைத்தது பொன் பணை

மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது

அரம் சுடச்சுடர் அம்பது அவ் ஆற்றலான்

உரம் சுடச் சுடரோன்மகன் உந்தினான்

 

இராவணனை நோக்கி நான்முகன் கணையை ஏவினான் ஸ்ரீராமன்.

 

10038. காலும் வெம் கனலும் கடை காண்கிலா

மாலும் கொண்ட வடிக்கணை மாமுகம்

நாலும் கொண்டு நடந்தது நான்முகன்

மூல மந்திரம் தன்னொடு மூட்டலால்.

 

நான்முகன் கணை ஐம்பூதங்களின் ஆற்றலுடன் இராவணனை நோக்கிச் சென்றது.

 

10039. ஆழி மால்வரைக்கு அப்புறத்து அப்புறம்

பாழி மால்கடலும் ஒளி பாய்ந்ததால்

ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புறும்

வாழி வெஞ்சுடர் பேர் இருள் வாரவே.

 

கணை இராவணன் மார்பைக் கிழித்துச் சென்றது.

 

10040. அக்கணத்தின் அயன்படை ஆண்தகை

சக்கரப் படையோடும் தழீஇச் சென்று

புக்கது அக்கொடியோன் உரம்; பூமியும்

திக்கு அனைத்தும் விசும்பும் திரியவே.

 

இராவணன் உயிரை எடுத்தது பிரம்மக் கணை.

 

10041. முக்கோடி  வாழ்நாளும்  முயன்றுடைய  பெருந்தவமும், முதல்வன்முன்நாள்,

எக்கோடியாராலும் வெலப்படாய்எனக்கொடுத்த வரமும், ஏனைத்

திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும், தின்று, மார்பில்

புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று,  இராகவன்தன் புனித வாளி.

 

இராவணனுடைய மூன்று கோடி வாழ்நாளையும் பெருந்தவத்தையும் எவராலும் வெல்ல முடியாது என பிரம்மன் கொடுத்த வரத்தையும் அவனது தோள் வலிமையையும் இல்லாமல் ஆக்கி அவன் உயிரை எடுத்தது ஸ்ரீராமன் செலுத்திய பாணம்.

 

10042. .ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசிகூறித்

தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய், பாற்கடலில் தூய்நீர் ஆடி,

தேர் குன்றம் இராவணன்தன் செழுங்குருதிப் பெரும்பரவைத் திரைமேல் சென்று,

கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா

இராவணன் மார்பைக் கிழித்து வெளியேறிய அம்பை தேவர்களும், அந்தணரும், முனிவர்களும் ஆசி கூறி மலர்மாரி பொழிந்தனர். அந்த கணை பாற்கடலில் நீராடி ஸ்ரீராமனின் அம்பறாத் தூணியில் வந்து அமர்ந்தது.

 

10043. .கார்நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ எனத் திணி தோள் காட்டின் நின்றும்

தார்நின்ற மலைநின்றும், பணி குலமும் மணிக்குலமும் தகர்ந்து சிந்த,

போர்நின்ற விழிநின்றும் பொறிநின்ற புகையோடும் குருதி பொங்க,

தேர்நின்ற நெடுநிலத்துச் சினம் முகம் கீழ்ப்பட விழுந்தான், சிகரம்போல்வான்.

 

மலை வீழ்வது போல வீழ்ந்தான் இராவணன்.


 

10047. .புலைமேலும் செலற்கு ஒத்துப் பொதுநின்ற

 செல்வத்தின் புன்மைத் தன்மை

நிலைமேலும் இனி உண்டே? ‘நீர்மேலைக்

    கோலம்எனும் நீர்மைத்து அன்றே

தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின்

    படர்புறத்தும் தாவி ஏறி,

மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால்,

    வானரங்கள், வரம்பு இலாத.

 

இராவணன் மேனி மேல் ஏறி விளையாடின வானரங்கள்.

 

10059. .‘அன்னதோ? ‘என்னா, வீரன் ஐயமும் நாணும் நீங்கி,

தன்னதோள் இணையை நோக்கி, வீடணா! தக்கது அன்றால்;

என்னதோ இறந்துளான்மேல்  வயிர்த்தல்? நீ இவனுக்கு ஈண்டு

சொன்னது ஓர் விதியினாலே கடன்செயத் துணிதிஎன்றான்.

 

இராவணனுக்குரிய இறுதிக் கடன்களைச் செய்வாயாக என ஸ்ரீராமன் வீடணனிடம் கூறினான்.

 

10063. ‘உண்ணாதே உயிர் உண்ணாது ஒருநஞ்சு; சனகி எனும் பெருநஞ்சு உன்னைக்

கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்; நீயும் களம் பட்டாயே!

எண்ணாதேன் எண்ணியசொல் இன்று இனித்தான்

    எண்ணுதியோ? எண் இல் ஆற்றல்

அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம்

    பிரளயமே! அமரர் கூற்றே.

 

அண்ணா! அண்ணா! எந்த விஷமும் உண்ணப்பட்டால் சாவைத் தரும். ஜானகி என்ற விஷத்தைப் பார்த்ததற்கே உங்களுக்கு அழிவு வந்ததே.

 

10070. .என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து,

    சாம்பவனாம் எண்கின் வேந்தன்,

குன்று ஓங்கு நெடுந்தோளாய்! விதிநிலையை

    மதியாத கொள்கைத்து ஆகிச்

சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது

    வருந்துதியோ? ‘என்னத் தேறி

நின்றான், அப்புறத்து அரக்கன் நிலைகேட்டாள்,

    மயன்பயந்த நெடுங்கண் பாவை.

 

ஜாம்பவான் இராவணனைத் தேற்றினான்.





     

10082. ‘வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த

    திருமேனி, மேலும் கீழும்

எள் இருக்கும் இடனின்றி, உயிர் இருக்கும்

    இடன்நாடி, இழைத்தவாறோ?

கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

    மனம் சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் ‘‘ எனக் கருதி, உடல் புகுந்து,

    தடவியதோ ஒருவன் வாளி?

 

எருக்க மலர்களைத் தம் முடியில் சூடிய சிவபெருமானை கயிலை மலையுடன் தூக்கிய இராவணனின் உடலில் எள்ளளவு இடமின்றி அம்புகள் துளைத்துள்ளனவே. ‘’மயக்கம் தரும் மலர்க்கூந்தலை உடைய ஜானகியை சிறை வைத்த இராவணனின் அகம் எங்கே எங்கே என்று தேடித் தேடி அழிக்க எண்ணியதோ இராமனின் அம்புகள்?’’ என்றாள் மண்டோதரி.

 

10089. .என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்

பொன் தழைத்த  பொரு அரு மார்பினைத்

தன் தழைக் கைகளால் தழுவித் தனி

நின்று அழைத்து உயிர்த்தாள்,  உயிர் நீங்கினாள்.

 

இராவணன் உடலைத் தழுவி மண்டோதரி உயிர் நீத்தாள்.

 

10090. வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்

தான மங்கையரும் தவப் பாலவர்

ஆன மங்கையரும் அருங் கற்புடை

மான மங்கையர் தாமும் வழுத்தினார்.

 

மண்டோதரியை அனைவரும் வாழ்த்தினர்.

 

10091. பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை

வன்னி கூவி வரன்முறையால் மறை

சொன்ன ஈமம் விதிமுறையால் தொகுத்து

இன்னல் நெஞ்சினொடு அஞ்சலித்து ஏற்றினான்.

 

வீடணன் இராவணனின் இறுதிக்கடனைச் செய்தான்.

 

10095. மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து

உற்ற தீக் கொடுத்து உண்குறு நீர் உகுத்து

எற்றையோர்க்கும் இவன் அலது இல்எனா

வெற்றிவீரன் குரைகழல் மேவினான்.

 

மற்ற அரக்கர்களுக்கும் செய்ய வேண்டிய நீர்க்கடனை வீடணன் ஆற்றினான்.

 

10096. வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும்

சிந்தை வெந்துயர் தீருதி தெள்ளியோய்!

முந்தை எய்தும் முறைமை இது ஆம்எனா

அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான்.

 

துயரம் அடைந்திருந்த வீடணனை தன் இனிய சொற்களால் ஆற்றுப்படுத்தினான் ஸ்ரீராமன்.