இங்கே எனக்கு மூன்று நண்பர்கள்.
ஒருவர் பெயர் சாமிநாதன். இன்னொருவர் கார்த்தி. மூன்றாமவர் முத்துக்குமரன்.
மூவரும் சிவில் எஞ்சினியர்கள். சாமிநாதன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கார்த்தியும் முத்துக்குமரனும் அந்நிறுவனத்தில் பணி புரிகிறார்கள். சென்ற ஆண்டு ஜனவரியில் நாங்கள் நால்வரும் சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டைக்கு என்னுடைய மாருதி ஆம்னியில் சென்றிருந்தோம். பரங்கிப்பேட்டை, மகா அவதார் பாபாஜியின் ஜன்ம பூமி. அங்கே இப்போதும் ஒரு முருகன் கோவில் இருக்கிறது. அந்த முருகன் கோவிலில் பாபாஜியின் தந்தை அர்ச்சகராகப் பணி புரிந்திருக்கிறார். பாபாஜி சிறுவனாக இருந்த போது, தந்தைக்கு கோவில் பணிகளில் உதவ ஆலயத்துக்கு வருவதுண்டு. இந்த தகவல்கள் பாபாஜியின் சீடர் ஒருவர் நிஷ்டையில் இருந்த போது பாபாஜி தெரிவித்தது. அந்த சீடர் பாபாஜிக்கு ஒரு சிற்றாலயத்தை எழுப்பியுள்ளார். சக்தி வாய்ந்த ஆலயம்.
சாமிநாதனின் உறவினர்கள் பலர் பரங்கிப்பேட்டையில் உள்ளனர். எங்கள் ஊரிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஊர் திரும்பும் போது ஆம்னியில் உரையாடிய வண்ணம் இருந்தோம்.
நானும் சாமியும் சம வயது உள்ளவர்கள். கார்த்தியும் குமரனும் எங்களை விட பத்து வயது இளையவர்கள்; இருவருக்கும் ஒரே வயது.
‘’குமரன்! கொஞ்ச தூரம் நீங்க டிரைவ் பண்றீங்களா? கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கறன்?’’
‘’சார்! எனக்கு டிரைவ் பண்ணத் தெரியாது சார்!’’
‘’கார்த்தி! உங்களுக்கு?’’
’’சார்! குமரன் ட்ட டூவீலர் லைசன்ஸ் இருக்கு. நான் இன்னும் டூவீலர் லைசன்ஸே எடுக்கல’’
‘’அப்ப உங்க மூணு பேருக்குமே ஃபோர் வீலர் ஓட்டத் தெரியாதா?’’
அனைவரும் கோரஸ்ஸாக ஆம் என்றனர்.
’’ஊருக்குப் போனதும் என்னோட முதல் வேலை உங்க மூணு பேருக்குமே டிரைவிங் டிரெயினிங் கொடுக்கறது தான்.’’
‘’சார்! எங்களுக்கு டிரைவிங் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது சார்! நாங்க உடனடியா கார் வாங்கப் போறது இல்ல’’
‘’நீங்க ஏன் கார் வாங்கறதை தள்ளி வைக்கிறீங்க தெரியுமா? உங்களுக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால் தான். ஓட்டக் கத்துக்கிட்டா நீங்க சீக்கிரமாவே கார் வாங்குவீங்க. சொந்தமா கார் வாங்கினாத் தான் கார் ஓட்ட கத்துக்கணும்னு இல்ல. இப்ப நீங்க ஒரு டீமோட போறீங்க. தொடர்ந்து டிரைவிங் பண்ற ஒருத்தரை மாத்தி ரிலீவ் பண்ண நீங்க டிரைவிங் தெரிஞ்சவரா இருக்கறது ஹெல்ப் பண்ணும். எனி குவாலிஃபிகேஷன் டஸ் நாட் பிகம் டிஸ்குவாலிஃபிகேஷன். இப்ப நம்ம நாலு பேருக்குமே டிரைவிங் தெரியும்னு வச்சுக்கங்க. நாம அதை எடுத்துட்டு நாடு முழுக்க சுத்தலாம். தில்லி போலாம். சிம்லா போலாம். லடாக் போலாம். டார்ஜிலிங் போலாம். ‘’
‘’சார்! ஆல் இண்டியா டூரா?’’
‘’யெஸ்’’
‘’சார்! என்ன சார் நீங்க எப்பவுமே ஆல் இண்டியா டூர் கனவுலயே இருக்கீங்க?’’
‘’ஆமா! எனக்கு எப்பவுமே இந்தியாங்கற மிகப் பெரிய கனவு இருந்திட்டே இருக்கு. சக மனுஷனை நேசிக்கறதை நாம பண்பாடா பழக்கமா ஆயிரக்கணக்கான ஆண்டுகளா வச்சுருக்கோம். இந்த மாதிரி ஒரு பண்பு உலகத்துல வேற எங்கயும் இந்த அளவு இருக்காது. நான் அனுப்வத்துல சொல்றன்’’
‘’நமக்கு நம்ம வேலையே சரியா இருக்கு சார். மணல்மேடு சைட். இந்த பக்கம் புஞ்சை சைட். அப்புறம் டவுன்ல தரங்கம்பாடி ரோடு சைட்’’
‘’வருஷத்துல 15 நாளாவது டிராவலுக்காக ஒதுக்குங்க’’
புவனகிரியில் ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆலயத்தில் வழிபட்டோம். தில்லை காளி அம்மன் கோவிலில் வழிபட்டோம். ஞாயிறு ராகு கால வழிபாட்டில் ஆலயமெங்கும் குங்குமமும் எலுமிச்சையும் சிதறிப் பரவி செங்கோலம் கொண்டிருந்தது.
அன்னையே எங்கள் அறியாமைகளை மூர்க்கங்களை அழித்து விடு என அரற்றினோம்.
திரும்பும் போது, குமரன் சொன்னார் . ‘’சார்! காளி கோயில்ல இருக்கும் போது அங்கயே உயிர் போய்ட்டா நல்லாயிருக்கும்னு தோணுது சார்’’
‘’அதாவது குமரன் நம்ம பண்பாட்டுல சாவு பெரிய விஷயம் இல்லை. முக்திதான் பெரிய விஷயம். நாம நினைச்சா சாவைக் கொண்டு வந்துட முடியும். ஆனா தீவிரமான மிகத் தீவிரமான உறுதியோட இருந்தாத்தான் முக்தி கிடைக்கும். சாமானியர்களுக்கு ஆயிரம் பிறவிகள் ஆகலாம். புனரபி ஜனனம் புனரபி மரணம்னு ஆதி சங்கரர் சொல்ரார்.’’
உரையாடல் தீவிரமடைந்ததும் அனைவரும் மௌனம் ஆனோம். தெற்கு வீதியைக் கடந்து எங்கள் வாகனம் சென்று கொண்டிருந்தது.
***
எனது நண்பர் ஒருவர் ஹார்டுவேர் கடை வைத்திருக்கிறார்.
ஒருநாள் அவரைக் காணக் கடைக்குச் சென்றிருந்தேன். அவர் தினமும் காலை 9 மணிக்கு கடையைத் திறந்து விடுவார். அன்று அவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் முன்னதாகவே சென்றேன். எனினும் அவர் வர 9.20 ஆகி விட்டது.
‘’சாரி பிரபு! இன்னைக்கு டிரைவிங் கிளாஸ் முடிய லேட் ஆயிடுச்சு. ‘’
‘’டிரைவிங் கிளாஸ்ஸா? உங்களுக்குத் தான் டிரைவிங் நல்லா தெரியுமே?’’
‘’இப்ப தான் தொடர்ந்து வண்டியை எடுக்கறன். அப்பப்ப ஏதாவது கரெக்ஷன்னா மாஸ்டர் கிட்ட கேட்டுப்பன். ‘’
‘’மாஸ்டரா? வயசுல பெரியவரா?’’
‘’ம் ம் .. அவருக்கு உங்க வயசு இருக்கும்.’’
‘’அப்ப இளைஞர் தான். மாஸ்டர் பேர் என்ன?’’
‘’அழகப்பன். ரொம்ப நல்லா டிரெயினிங் கொடுப்பார்’’
‘’அவரோட நம்பர் கொடுங்க. நான் பேசறன். என்னோட ஃபிரண்ட்ஸ் சில பேருக்கு டிரெயினிங் தர வேண்டி இருக்கு. ‘’
இது நடந்தது நாங்கள் பரங்கிப்பேட்டை போய் வந்து ஒரு வருடத்திற்குப் பின்பு.
***
சாமிநாதனின் அலுவலகத்தில் நுழைந்தேன்.
பரங்கிப்பேட்டை சம்பவத்தை நினைவு படுத்தினேன்.
‘’இப்ப நான் ஒரு எஃபிசியண்ட் மாஸ்டர் ஒருத்தரை ஐடெண்டிஃபை பண்ணியிருக்கன்’’
மூவருக்கும் சிறு ஆர்வம் ஏற்பட்டது.
அழகப்பன் மாஸ்டருக்கு ஃபோன் செய்தேன்.
‘’அண்ணன்! வணக்கம். என்னோட பேர் பிரபு. ஹார்டுவேர் வச்சிருக்க நமச்சிவாயம் அண்ணன் உங்க நம்பர் கொடுத்தாங்க. என்னோட ஃபிரண்ட்ஸ் மூணு பேருக்கு கார் டிரைவிங் டிரெய்னிங் கொடுக்கணும். அது சம்பந்தமா உங்க கிட்ட பேசணும். உங்க வீடு எங்கன்னு சொல்லுங்க. நான் வந்து பாக்கறேன்’’
‘’ஒன் அவர் முன்னாடி நமச்சிவாயம் சார் ஃபோன் பண்னாங்க. நீங்க ஃபோன் பண்ணுவீங்கன்னு சொன்னாங்க.’’
எங்கள் அலுவலகம் இருக்கும் இடத்தைச் சொன்னோம். மாஸ்டர் வந்து விட்டார்.
அவருக்குத் தேனீர் கொடுத்து உபசரித்தோம்.
‘’அண்ணன்! என்கிட்ட ஒரு மாருதி ஆம்னி இருக்கு. பழைய மாடல் 16 வருஷமா இருக்கு. என்ஜின் பக்கா. நான் மினிமமாத்தான் எடுக்கறது. என்னோட Passion டூ-வீலர் மேல தான். எனக்கு பைக் ரைடிங் ரொம்ப பிடிக்கும். நான் மயிலாடுதுறையில இருந்து ரிஷிகேஷ் வரைக்கும் போயிருக்கன். 6166 கி.மீ. 21 நாட்கள்.’’
‘’என்ன வண்டி? எத்தனை பேர்?’’
‘’ஹீரோ ஹோண்டா . நான் மட்டும்”
‘’தனியாவா?’
‘’தனியா என்னன்ணன் தனியா . ஒரு தேசமே கூட இருக்குண்ணன்’’
அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
‘’நான் பார்ட்டியோட டிரைவிங் பண்ணிடு ஷிர்டி அடிக்கடி போயிருக்கன். பத்து நாள் முன்னாடி நாலு பேரு Audi கார்ல போனோம். ‘’
நான் டிரைவிங் டிரைய்னிங் எப்போது தொடங்கலாம் என கேட்டேன். நண்பர்கள் நல்ல நாள் பார்த்தார்கள். அவர்கள் பார்த்த நாள் சஷ்டி.
***
நிர்ணயிக்கப்பட்ட நாள் அன்று , தரங்கம்பாடி சாலையில் உள்ள தருமபுரம் மடத்தின் நுழைவாயில் வளைவு அருகே நான் முதல் ஆளாக காலை 5.30 மணிக்கு ஆம்னியுடன் சென்று நின்றேன். காசியில் குமாரசாமி மடம் கண்ட ஸ்ரீகுமரகுருபரர் தருமை ஆதீனத்தின் மாணவர். நண்பர்கள் டிரைவிங் கற்றுக் கொண்டு இதே வாகனத்தில் ஆல் இண்டியா டூர் செல்வதாகவும் அப்போது காசியில் குமாரஸ்வாமி மடத்துக்குச் சென்று வழிபடுவதாகவும் கற்பனை செய்து கொண்டிருந்தேன். அப்போது மாஸ்டர் அழகப்பன் வந்தார். அதன் பின்னர் சாமிநாதனும் கார்த்தியும் குமரனும் வந்தார்கள். பயிற்சி தொடங்கியது.
***
சாமியின் அலுவலகம்.
‘’இப்ப என்னோட வேலை உங்க எல்லாருக்கும் டிரைவிங் லைசன்ஸ் எடுத்துத் தர்ரது.’’
‘’சார்! டிரைவிங் ஸ்கூல்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா அவங்க கிட்ட சொல்லி எடுத்துடலாம் சார்” கார்த்தி சொன்னார்.
‘’என்னோட ஃபிரண்ட் ஒருத்தர் டிரைவிங் ஸ்கூல்ல ஒர்க் பன்றார். அவர்ட்ட கேக்கறன். ‘’ குமரன் நண்பருக்கு ஃபோன் செய்தார். ஆஃபிஸுக்கு வெளியில் சென்று பேசி விட்டு வந்தார். ‘’சார்! எல். எல். ஆர் எடுக்க 2000 ரூபா. லைசன்ஸுக்கு 2000 ரூபா.’’
‘’அவசியமே இல்லை. பரிவாஹன் - வெப் சைட்ல நாம அப்ளை பண்ணலாம். ஒரு பைசா லஞ்சம் தரத் தேவையில்லை. ‘’
மூவரும் பரிவாஹன் மூலம் அப்ளை செய்தனர். ரூ. 230ல் எல். எல். ஆர் வந்தது.
***
செம்பொன்னார் கோவில் கீழ முக்கூட்டைக் கடந்து சிறிது தூரத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சத்ரபதி சிவாஜி வந்திருக்கிறார். குமரன் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். மாஸ்டர் அழகப்பன் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். நாங்கள் பின்னால் உட்கார்ந்திருந்தோம்.
‘’மாஸ்டர்! எனக்கு ஒரு பிளான். இவங்க மூணு பேரும் வண்டி நல்லா ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. லைசண்ஸ் கூடிய சீக்கிரம் எடுத்துருவாங்க. இன்னைக்கு டிரைவிங் டெஸ்ட் வச்சாக்கூட பாஸ் ஆகற லெவல்ல இருக்காங்க. ‘’
’’ஆமாம் மூணு பேர் டிரைவிங்கும் மெச்சூர்டா இருக்கு’’ என மாஸ்டர் ஆமோதித்தார்.
‘’நாம அஞ்சு பேர் . நமச்சிவாயம் அண்ணனைக் கூட்டிப்போம். ஆறு பேர். ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு மயிலாடுதுறையில இருந்து புறப்படுவோம். நேரா சுவாமிமலை. சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்றோம். அங்கயிருந்து கும்பகோணம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வழியா போய் சேது ரஸ்தாவைப் பிடிக்கறோம். ராமநாதபுரம் வழியா தூத்துக்குடி திருச்செந்தூர். சனிக்கிழமை காலைல திருச்செந்தூர் கடல்ல குளிச்சுட்டு செந்தில் ஆண்டவனைக் கும்பிடறோம். அப்படியே திருப்பரங்குன்றம். பழமுதிர்ச்சோலை. நைட் பழனில ஸ்டே. ஞாயிறு காலை பழநி தண்டாயுதபாணியை தரிசனம் பண்ணிட்டு திருத்தணி கிளம்புறோம். நைட் திருத்தணில தரிசனம். திங்கள் கிழமை காலைல மயிலாடுதுறை வந்துடறோம். எப்படி நம்ம பிளான்’’ என்றேன்.
நண்பர்கள் வெற்றி வேல் வீர வேல் என ஆர்ப்பரித்தனர்.