Tuesday 16 March 2021

திறன் மேம்பாடு

 நான் மடிக்கணினி வாங்கியது பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால். இத்தனை ஆண்டுகளில் பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லை. ஓரிரு சிறு சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு. சில நாட்களில் அவை சரிசெய்யப்பட்டு விடும். ஆனால் இம்முறை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. மடிக்கணினியைப் பிரிந்து இருப்பது என்பது தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தத்தை அளித்தது. மிகப் பிந்தி , நண்பர் ஒருவர் அவருடைய லேப்டாப்பைக் கொடுத்து உதவினார். எனினும் எனக்கு என்னுடைய லேப்டாப் தேவைப்பட்டது.

முதலில் ஒரு சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றேன். காலை கொண்டு போய் கொடுத்தேன். மாலையில் வரச் சொன்னார்கள்.

‘’சார்! ஓப்பன் பண்ணி பாத்துட்டோம். இது ரொம்ப பழைய மாடல். சரி பண்ண முடியாது. நம்மகிட்ட புதுசு ஒண்ணு வாங்கிக்கங்க. 30,000க்கு நல்ல மாடல் கிடைக்கும்.’’

‘’இன்னைக்கு காலைல வரைக்கும் நல்லா ஃபங்ஷன் ஆகிட்டு இருந்துச்சு. ஏதாவது ஸ்பேர் மாத்தறதுன்னா மாத்திடலாம்’’

‘’இதுக்கு ஸ்பேர்லாம் கிடைக்காது சார். புதுசு வாங்கிக்கங்க’’

நான் லேப்டாப்பை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எனது லேப்டாபை உற்பத்தி செய்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் கும்பகோணத்தில் உள்ளது. அங்கே எடுத்துச் சென்று கொடுத்து வந்தேன். இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார்கள். சென்றேன்.

அதே பாட்டு.

திரும்ப வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன்.

நண்பர்கள் சிலர் மயிலாடுதுறையில் ஒரு புதிய சர்வீஸ் சென்டரை பரிந்துரை செய்தார்கள்.

அங்கும் அதே கதை.

பின்னர் என் உறவினர் ஒருவருடன் கலந்தாலோசித்தேன். அவர் கடலூரில் ஒரு சர்வீஸ் சென்டரை சொன்னார்.

அங்கு எடுத்துச் சென்றேன்.

ஒன்றரை மாதம் ஆகி விட்டது.

ஆனால் லேப்டாப்பை இயங்க வைத்து விட்டார். ரூ.2000 சர்வீஸ் கட்டணமாக வாங்கிக் கொண்டார்.

‘’டெஸ்க் டாப் மாதிரி யூஸ் பண்ணிக்கங்க சார். இன்னும் கொஞ்ச நாள் வரும்.’’

‘’இத்தனை வருஷத்துல என் லேப்டாப் என் வீட்டை விட்டு எங்கயும் வெளியில எடுத்துட்டு போனதில்லை. இப்ப தான் முதல் தடவை கடலூர் வந்திருக்கு.’’

‘’அடுத்த தடவை ஏதும் ஃபால்ட்ன்னா புதுசு மாத்திடுங்க’’

‘’டாகுமெண்ட் எல்லாத்தையும் சேமிச்சு வச்சுக்கறன். எனக்கு இது இன்னும் கொஞ்ச நாள் உழைக்கும்னு தோணுது. ‘’

தொழில் திறன் உள்ளவர்களால் அடுத்தவர்களும் பயன் இருக்கிறது.