Saturday, 13 March 2021

ஒளிரும் சுடர்

 அன்பே தகளியா*  ஆர்வமே நெய் ஆக,* 
இன்பு உருகு சிந்தை இடு திரியா,*  நன்பு உருகி* 
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்*  நாரணற்கு* 
ஞானத் தமிழ் புரிந்த நான். 

_பூதத்தாழ்வார்

{அன்பை விளக்காக்கி ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு இனிய நற்சிந்தனை என்னும் திரியில்  பரம்பொருளுக்கு செம்மையான ஞானச்சுடர் விளக்கை ஞானத்தமிழில் ஏற்றுகிறேன்.}

இன்று மாசி மாதக் கருநிலவு. இரவில் இருள் பேரடர்த்தி கொண்டிருக்கும் தினம். ‘’ஞான தீபம்’’ பணிகளை இன்று துவங்கலாம் என உத்தேசித்தேன். நிதி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் 15 செட் புத்தகங்களை ஆர்டர் செய்து சலூன்களுக்கு அன்புக் கொடையாக வழங்கலாம் என எண்ணினேன். எந்த பணிக்கும் ஒரு துவக்கம் அளித்தல் என்பது மிக முக்கியமான செயல். துவங்கி விட்டால் பின்னர் அதுவே தன் இயல்பான வேகத்தைச் சென்றடைந்து கொள்ளும். 

நேற்று மாலை புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். இன்று காலை பார்சல் ஊருக்கு வந்தது. 

கட்டுமானப் பணிகளை மனையின் வடகிழக்கு பகுதியிலிருந்து துவங்குவோம். அதைப் போல மயிலாடுதுறை மாவட்டத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் ஊரிலிருந்து ‘’ஞான தீபம்’’ பணிகளைத் துவங்கினேன். ஐந்து ஊர்களில் உள்ள சலூன்களில் நூல்களை அளித்தேன். சலூன் கடைக்காரர்கள் மிக நல்ல வரவேற்பு அளித்தனர். உணர்வுபூர்வமாக மிக்க நன்றி சொன்னார்கள். பத்து செட் புத்தகங்கள் இன்று அளிக்கப்பட்டன. நாளை ஞாயிற்றுக்கிழமை மீதமிருக்கும் ஐந்து செட் புத்தகங்களைக் கொடுத்து விடலாம். 

பார்சல் கட்டு பெரியதாக இருந்தது. 15 செட் புத்தகங்களே இவ்வளவு பெரிதென்றால் 400 செட் ஆர்டர் செய்தால் அது எத்தனை பார்சல் கட்டுகளாக வரும் என கற்பனை செய்து பார்த்தேன். 

நண்பர்களின் துணையே நம்மை இயங்க வைக்கிறது. அவர்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.