Wednesday 17 March 2021

நூல் அறிமுகம் : தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்


நூல் : தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் பக்கம் : 234 விலை : ரூ.30 வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், அ.கு.எ 639115.

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்புகையில் முதலில் தமிழ் மண்ணில் காலடி வைக்கிறார். பாம்பனில் அவர் வந்திறங்குகிறார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தான் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்ள முக்கிய காரணமாயிருந்ததை சுவாமிஜி நினைவு கூர்கிறார். 

தமிழ்நாட்டுக்கும் சுவாமி விவேகானந்தருக்குமான உறவு என்பது மிகவும் நெருங்கியது. தமிழ்நாட்டின் மீது சுவாமிஜிக்கு பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது. 

சுவாமி விவேகானந்தர் ஓர் ஆச்சார்யனின் இடத்திலிருந்து நம் நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள ஆற்ற வேண்டிய செயல்கள் என்ன என்பதை விளக்கமாகச் சொல்கிறார். 

மக்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றப்படும் சிறந்த வழிபாடு என்கிறார் சுவாமிஜி. வேதம் மானுடர்களை ‘’அமிர்தத்தின் புதல்வர்களே’’ (அமிர்தஸ்ய புத்ர;) என அழைப்பதைக் கொண்டு எல்லா மனிதர்களுமே இறைமையின் குழந்தைகள் எனவே அவர்களிடம் உறைந்துள்ள தெய்வீகத் தன்மையை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்கிறார். 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராய் இருப்பதற்கு எவரும் தான் பழகி வந்திருக்கும் எந்த விதமான நிஷ்டையையும் பின்பற்றலாம் ; அதற்கு எத்தடையும் இல்லை; எனினும் அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளையும் ஞானத்தையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 

வேதாந்தம் எவ்வாறு ஹிந்து சிந்தனையின் உன்னதமான உயரத்தில் இருக்கிறது எனக் கூறும் சுவாமிஜி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சங்கரர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் வேதாந்திகளே என்கிறார். பகவான் புத்தருக்கும் ராமானுஜருக்கும் வேதாந்தத்துடனும் அத்வைதத்துடனும் இருந்த உரையாடலை எடுத்துச் சொல்கிறார். 

தமிழ்நாட்டில் பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம்,மானாமதுரை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.