Sunday 7 March 2021

நிதி சேர்க்கை

சிறு குழந்தைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லாரும் கவனித்திருக்கலாம். உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் குழந்தைகள் அவர்களிடம் ‘’நீங்கள் எப்போது ஊருக்குப் போவீர்கள்?’’ என்று கேட்பார்கள். வீட்டில் அனைவரும் அவ்வாறு கேட்கக் கூடாது என்று கடிந்து கொண்டு சத்தம் போடுவார்கள். உண்மையில் எல்லா குழந்தைகளுமே வீட்டுக்கு வரும் உறவினர்களை விரும்பும்; அவர்கள் அதிக நாட்கள் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படும். ‘’ரொம்ப நாள் தங்கியிருப்பீர்கள் தானே?’’ எனக் கேட்க எண்ணி வேறு மாதிரி கேட்டு விடும். நானும் சிறு வயதில் அந்த மாதிரி கேட்டிருக்கிறேன். 

ஓர் அமைப்பை நடத்துவது என்பது பெரும் பணி. அத்திறன் எளிதில் கைவரப் பெற்றவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் நுண் செயல்பாடுகள். சிறிய அலகில் திட்டமிடப்படுபவை. செயலாக்கப்படுபவை. ’’செய்வன திருந்தச் செய்’’ என்னும் அடிப்படையில் வேலைகள் நடைபெறுகின்றன. கட்டுமானம் என்னுடைய தொழில் என்பதால் அத்தொழிலை மேற்கொள்வதன் பயிற்சி அமைப்பை வழிநடத்துவதிலும் உதவுகிறது. 

இருப்பினும் இவ்வாறான பணிக்கு நான் எதிர்பாராமல் வந்து சேர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். கட்டுமானப் பணி என்பது பணி இடத்தில் நாள் முழுதும் நின்று கொண்டே வேலைகளை மேற்பார்வையிட வேண்டும். கொதிக்கும் வெயிலில் எவ்வித அல்லலும் இல்லாமல் நிற்க பொறியாளர்களுக்குப் பயிற்சி உண்டு. வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால் மனம் உடனே தயாராகி விடும். எங்கள் தொழிலில் ஒரு வேலையைச் சரியாகச் செய்யாமல் போனால் அதை சரி செய்வதையும் மீண்டும் நாம் மட்டுமே செய்தாக வேண்டாம். பிழை நிகழ்ந்து அதனைத் திருத்துவது என்பது மும்மடங்கு நேரத்தையும் ஆற்றலையும் கோரும்.  எனவே எதையும் முதல் தடவை செய்யும் போதே சரியாகத் திருத்தமாகச் செய்து விடுவது யாவர்க்கும் நலம்!

என்னுடைய தொழில் சார்ந்த பணிகளைத் தவிர மற்ற நேரத்தில் படைப்பூக்கச் செயல்பாடுகளில் (Creative) ஈடுபட்டிருப்பேன். அதன் இயல்புகளும் தன்மைகளும் முற்றிலும் வேறானவை. காந்திய இயக்கத்திலிருந்து இந்தியாவின் பெரும் படைப்பாளிகள் பலர் உருவாகி வந்திருக்கின்றனர். உலகெங்கும் கலைஞர்களுக்கு மேலான சமூகம் குறித்த கனவு இருந்திருக்கிறது; இருக்கிறது. 

என் ஆளுமையின் பகுதியாக இருக்கும் பொறியாளன் - கலைஞன் - சமூகச் செயல்பாட்டாளன் என்பது அவ்வப்போது கலந்து விடும். அவை சிறு சிறு குழப்பங்களை உண்டாக்கி விடுவது உண்டு. 

சில நாட்கள் முன்பு, ‘’காவிரி போற்றுதும்’’  சார்பில் செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு  வீட்டு வாசலில் மலர்ச்செடிகள் வைக்கும் முயற்சிக்கு உதவி செய்த நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். 

***
அன்புள்ள நண்பருக்கு,

நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? நான் இங்கே நலம்.

 

ஒரு புதிய விஷயத்தை முன்னெடுக்க உள்ளேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு நீங்கள் அளித்த நன்கொடை பெரிய தொகை. ஆதலால் இந்த முறை நீங்கள் நிதி அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ எவ்விதமான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது எந்த திசையில் நகர்கிறது என்பதை தங்களைப் போன்றோரிடம் தெரிவித்து ஆலோசிப்பது மனதுக்கு ஊக்கம் அளிக்கிறது.

 

கீழ்க்கண்ட இணைப்பை வாசிக்கவும். தங்கள் அபிப்ராயத்தைத் தெரிவிக்கவும்.

 

ஞான தீபம்

 

அன்புடன்,

பிரபு 


***

கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி ஒரு வசனம் பேசுவார். ‘’இந்தியாவிலயே ஏன் இந்த வேர்ல்ட்லயே கார் வச்சுருக்க கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்’’ என்று. 

அது போல நிதி தர வேண்டாம்; அபிப்ராயம் மட்டும் தெரிவியுங்கள் எனக் கேட்டது நாமாகத் தான் இருப்போம் என நினைக்கிறேன்!