Sunday 7 March 2021

நூல் அறிமுகம் : சிகாகோ பிரசங்கங்கள்

 


சிகாகோ பிரசங்கங்கள் ; சுவாமி விவேகானந்தர் , மொழிபெயர்ப்பு ; சுவாமி சித்பவானந்தா, பக்கம் : 41 விலை : ரூ. 10 வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், அ.கு.எ 639115.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உரையாற்றினார். மாநாட்டில் சுவாமிஜி ஆறு முறை உரையாற்றியிருக்கிறார். முதல் உரையிலேயே அவர் மாநாட்டில் கூடியிருந்தவர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். அவ்வுரை குறித்த தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியான போது ஒட்டு மொத்த அமெரிக்காவும் சுவாமிஜியைத் திரும்பிப் பார்த்தது. உற்று நோக்கியது. 

ஆறு உரைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. அவற்றைத் தொகுத்து வாசிக்கும் போது ஹிந்து மதம் குறித்தும் இந்தியா குறித்தும் சமயங்களின் இலக்குகள் மற்றும் எல்லைகள் குறித்தும் முழுமையான புரிதல் உண்டாகிறது. 

முதல் உரை

மாநாட்டில் கூடியிருந்தவர்களை, தன் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் உணர்ந்து அவ்வாறு அழைத்ததன் மூலமே மானுடம் தழுவிய தனது பார்வையை வெளிப்படுத்தினார். ‘’வசுதைவ குடும்பம்’’ என இந்திய மரபு கூறுவதும் அதையே என்பதை உணர்த்தினார். 

மதங்களுக்குள் சமரசம் நிலவ வேண்டும் என்பது சிகாகோ மாநாட்டின் முயற்சி. அத்தகைய தன்மை இந்திய மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்ததை சுவாமிஜி எடுத்துரைக்கிறார். யூதர்களும் ஜாரதுஷ்டிரர்களும் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான போது அவர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்கள் சமயத்தை அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வழிவகை செய்து கொடுத்த நாட்டிலிருந்து பண்பாட்டிலிருந்து தான் வந்தவன் என சுவாமிஜி குறிப்பிடுகிறார். 

நதிகள் கடலை அடைவது போல சமயங்கள் ஒவ்வொரு பாதையில் கடவுளை அடைகின்றன. சமய பேதத்தை மனதில் இருத்துவது அறியாமை என்கிறார் சுவாமிஜி. 

முதல் உரையிலேயே சுவாமிஜி பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பகவத்கீதையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ‘’எவர் என்னை எந்த வடிவில் வழிபட்டாலும் அதனை ஏற்பேன்’’ எனக் கூறுவதை எடுத்துரைக்கிறார். 

சிகாகோ மாநாடு துவங்கப்படுவதை உணர்த்த எழுப்பப்பட்ட மணியோசை மதவெறிக்கு சாவுமணியாக இருக்கட்டும் என முதல் உரையை நிறைவு செய்கிறார். 

இரண்டாவது உரை

சுவாமிஜி சிகாகோவில் தனது இரண்டாவது உரையில் இன்றும் மிகப் பிரபலமான ‘’கிணற்றுத் தவளை’’ கதையைக் கூறுகிறார். 

அந்த காலகட்டத்தில் உலகெங்கும் ஏகாதிபத்ய சக்திகள் தாங்கள் அடிமைப்படுத்திய நிலங்களில் வாழும் மக்களின் பண்பாட்டை அழிக்க கிருஸ்தவ மத பரப்புனர்களை அனுப்பிக் கொண்டிருந்தன, அவர்கள் உலகெங்கும் கிருஸ்துவமே உயர்ந்தது என பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த பின்புலத்தில், சுவாமிஜியின் ’’கிணற்றுத் தவளை’’ கதை மேலும் கூடுதல் அர்த்தங்கள் பொதிந்தது. 

தங்களைச் சமயவாதிகள் எனக் கருதிக் கொள்பவர்கள் திறந்த மனத்துடன் உரையாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். 

மூன்றாவது உரை

இந்திய மண்ணில் எண்ணற்ற வழிபாட்டு வழிமுறைகள் இருப்பதை சுட்டிக் காட்டும் சுவாமிஜி அவற்றுக்கு வேதங்களே அடிப்படை என்கிறார். வேதங்கள் எவ்விதம் பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதையும் சுவாமிஜி விளக்குகிறார்.ஆலய வழிபாட்டிலிருந்து அத்வைத உணர்வு வரை அனைத்தும் இந்திய மண்ணின் பகுதியாக விளங்குவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த உரையில் சுவாமிஜி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர் என்ற முறையிலும் அத்வைதியாகவும் அத்வைதத்தின் மேலான தன்மை குறித்து விரிவாக எடுத்துரைக்கிறார். 

நான்காவது உரை

மேலை நாடுகளின் மனசாட்சியை நோக்கி சுவாமிஜி ஒரு இந்தியத் துறவியாக எங்கள் மக்களுக்கு இப்போதைய தேவை உணவு ; மதம் அல்ல என்பதை துணிச்சலாகக் கூறுகிறார். 

ஐந்தாவது உரை

இந்த உரையில் சுவாமிஜி தான் ஒரு பௌத்தன் என்கிறார். ஹிந்துக்கள் புத்தரைக் கடவுளாகவும் அவதார புருஷராகவும் கருதுகிறார்கள் என்கிறார். 

புத்தர் கருணையின் வடிவமாக இருந்ததை எடுத்துக் காட்டும் சுவாமிஜி அவர் வறியவர்களுக்கு உதவி செய்வதையே மகத்தான ஒன்றாகக் கருதியை சுட்டிக் காட்டுகிறார். 

உண்மையில் நான்காவது உரைக்கும் ஐந்தாவது உரைக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. மக்கள் மீதான கருணையே மேலை நாடுகளின் நோக்கம் எனில் புத்த மதத்தைப் போல ஏழைகளுக்கு உதவுவதே உங்கள் சமயமாக இருக்கும்; உங்கள் நோக்கங்கள் வேறானவை என்பதை நேரடியாகத் தெரிவிக்காமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார். 

இறுதி உரை

மதமாற்றம் உலகில் அமைதியின்மையையும் கொடுஞ் செயல்களையுமே உண்டாக்கும் என்றும் மதமாற்றம் எதற்குமே தீர்வு அல்ல; அதுவே எல்லா சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம் என்றும் சுவாமிஜி சொல்கிறார்.