ஆதித்ய ஸ்ரீநிவாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வரும் திருவாரூர்க்காரரான திரு. க. ஸ்ரீநிவாஸ் என் நண்பர். தற்போது கர்நாடக மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். சலூன் நூலகங்கள் குறித்து அவரிடம் பேசினேன். துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன். தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விஷயத்தைக் கொண்டு சென்று அவர்கள் உதவியுடன் குறைந்தபட்சம் 100 சலூன்களுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறினார். எனக்கு அது பெரிய நம்பிக்கையை அளித்தது.
நண்பா! நீ என் மீது வைத்துள்ள அன்புக்கும் பிரியத்துக்கும் மதிப்புக்கும் மிக்க நன்றி. உனக்கு எல்லா நலன்களும் கிட்டட்டும்!
அவர் தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உதவி கேட்டு எழுதிய கடிதத்தைக் கீழே தருகிறேன்.
அன்புள்ள நண்பருக்கு,
“Books are the quietest and most constant of friends; they are the most accessible and wisest of counselors, and the most patient of teachers.”– Charles W. Eliot
வாசிக்கும் சமூகம் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்படியான ஒரு இடம் நோக்கி சிறு அடிவைப்பு. முதல் படி இது. பொது இடங்களில் புத்தகங்களை வைப்பதைவிட அச்சிட்டு எல்லோருக்கும் இலவச வினியோகம் செய்வதை விட சிறிது நேரம் கண்டிப்பாக காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் இடங்களில் புத்தகங்கள் இருந்தால்?
அப்படியான ஒரு இடமாக சலூன்கள் உள்ளன. எப்படியும் நாம் குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் வரை காத்திருக்க நேரும் இடம் சலூன். அங்கு கண்ணில் படும்படி ஒரு பத்து புத்தகம். வரும் வாடிக்கையாளர்களில் பத்தில் ஒருவர் படித்தால் கூட போதும். ஒரு மாவட்டத்தில் இருக்கும் அத்தனை சலூன்களிலும் புத்தகங்களிருந்தால்?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காக்கள் - மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம். தோராயமாக 500 சலூன்கள். ஒரு கடைக்கு 10 புத்தகங்கள். எல்லாம் சிறிய முக்கியமான புத்தகங்கள். பத்து புத்தகங்களுக்கு ஆகும் செலவு ரூ.100. ஒருவர் ரூ.100 அல்லது அதிகபட்சம் ரூ.200 கொடுத்து உதவலாம்.
இதனை முன்னெடுப்பவர் என் நெருங்கிய நண்பர் 'மயிலாடுதுறை பிரபு'. இவர் காவிரி போற்றுதும் எனும் ஒரு தன்னார்வ முன்னெடுப்பின் மூலம் மயிலாடுதுறை தாலுக்காவில் ஒரு கிராமத்தில் சுமார் 20000 மரக்கன்றுகளை நட்டுள்ளார் .அவருடைய திட்டமிது. செவ்வனே செய்து முடிப்பார்.
ஆக உங்களிடம் நான் கோருவது ரூ.100 அல்லது ரூ.200. எதுவானாலும்.
இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் உங்கள் கொடை ஒரு புத்தகத் திரட்டாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஏதாவது ஒரு சலூனில் இருக்கும். அறிவாக மக்களில் மலரும்.
"A thousand mile journey starts with one single step."
அன்புடன்
க.ஸ்ரீநிவாஸ்