Friday, 5 March 2021

நூல் அறிமுகம் : சுவாமி விவேகானந்தர்



நூல் : சுவாமி விவேகானந்தர் ஆசிரியர் : ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பக்கம் : 106  வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  அ கு எ :639115. விலை : ரூ. 27/- 

இந்தியா என்னும் நிலப்பரப்பு வெறும் பௌதிக நிலம் அன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரினங்களில் சிந்தனை என்னும் சிறப்பு அம்சம் கொண்டதான மனித இனம் வாழ்தலில் ஆக உயர்ந்த நிலையை எய்துவதற்கான சாதனங்களை உருவாக்கித் தருவதை தம் கடமையெனக் கருதி மேற்கொண்டு வருவது இம்மண்ணின் மகத்துவங்களில் ஒன்று. மிருக நிலையிலிருந்து உயர்ந்த அமர நிலைக்கு மனித வாழ்வைக் கொண்டு செல்லுதலே இந்திய வாழ்முறையின் நோக்கமாயிருந்திருக்கிறது. ஞானியரின் யோகியரின் பக்தர்களின் பெருநிரை ஒன்று இம்மண்ணில் தொடர்ந்து இலங்கிய வண்ணமே இருக்கிறது. அத்தன்மையுடையோரில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். சுவாமிகளைப் பற்றி ஸ்ரீராமகிருஷண சிஷ்ய மரபில் வந்தவரான ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இந்நூலை இயற்றியுள்ளார். 

இந்திய மரபு, மனிதனின் ஆத்மீகப் பாதை பல பிறவிகளாகத் தொடர்வது எனக் கூறுகிறது. எனினும் ஒரு குரு தன் ஆத்மீக சாதனையை திறனும் கவனமும் அர்ப்பணிப்பும் மிக்க தம் சீடனுக்கு எளிதில் வழங்கிட முடியும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து ஆன்மீக ஞானம் பெற்றவர் சுவாமி விவேகானந்தர். 

சுவாமிஜியின் பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் மூன்றாவதாகப் பிறக்கிறார் சுவாமிஜி. சிறு வயதிலேயே சேட்டைகள் பல புரிபவராக இருக்கிறார். சுவாமிஜியின் அன்னை சிவபெருமானிடம், ‘’நீ எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினேன். நீ உன் பூத கணம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறாயே ‘’ என்கிறார். சிறு வயது முதலே இறை உரு முன் தியானத்தில் நெடுநேரம் அமர்ந்து விடுவது சுவாமிஜியின் பழக்கம்.

பால பருவத்தில் , சுவாமிஜி வாழ்வில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அவருடைய கல்வி எவ்விதம் நிகழ்ந்தது என்பதையும் விளக்குகிறார். 

குருதேவர் ராமகிருஷ்ணரால் ஆட்கொள்ளப் படுவது, குருவுக்குப் பின், மடத்தை உண்டாக்குவது. பரதேசியாக நாடு முழுதும் அலைந்து திரிந்தது, சிகாகோ சர்வ மத சபை என சுவாமிகளின் வாழ்விலும் இந்திய வரலாற்றிலும் முக்கியமான இந்நிகழ்வுகளை சுவை பட விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர். 

சுவாமிஜி, சுவாமிஜியின் இந்திய மேல்நாட்டு சீடர்கள், ஆற்றிய பணிகள், அவருடைய செய்தி என அனைத்தைப் பற்றியும் சுருக்கமான அறிமுகம் அளிக்கக் கூடிய நூல்.