Saturday 6 March 2021

முதல் ஆதரவு - கடிதம்

 அன்பின் பிரபு

இதை ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சியாகவே பார்க்கிறேன். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டுள்ளன. உங்களின் அனைத்து முயற்சிகளும் சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். 

அன்புடன்
உலகநாதன்

அன்புள்ள உலகநாதன்,

ஸ்ரீநிவாஸைப் போல நீங்களும் திருவாரூர்க்காரர் என்பதை கடிதத்தின் முதல் வரியை வாசிக்கும் போது நினைவுபடுத்திக் கொண்டேன். ஆரூரின் அடையாளம் ஆழித்தேர் தானே!

இந்தியாவில் வாழ்க்கை என்பது பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. வேண்டுமானால் இப்படியும் சொல்லலாம் : உலகில் எந்த மண்ணை விடவும் ஒப்பீட்டளவில் நம் மண்ணில் கூடுதலாகக் கொண்டாட்டம் இருந்திருக்கிறது. 

இசை , கூத்து ஆகியவை அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெற்று இருந்திருக்கின்றன. ஒரு கிராமத்தில் தான் எத்தனை விதமான விளையாட்டுக்கள் விளையாடியுள்ளனர். இன்றும் இந்தியாவில் சங்கீதக் கச்சேரிகள் பெரும் கொண்டாட்டங்களே. 

அன்னியக் கல்வி முறை ஓயாமல் இந்தியர்களிடம் நூற்றாண்டுகளுக்கு மேலாக மெல்ல சொல்லிக் கொண்டே இருந்தது : நீங்கள் வறியவர்கள் . நீங்கள் நாகரிகம் இல்லாதவர்கள். நீங்கள் எதையும் நிர்மாணிக்க இயலாதவர்கள் என. நமது நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவார்களாயின் அளப்பரிய சாதனைகள் இங்கே நிகழும். 

நான் தினமும் சாமானிய மக்களைச் சந்திப்பவன். இன்று நாம் மரக்கன்றுகள் வழங்கிய கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தைப்பூசத்தன்று சென்றிருந்தேன். பின்னர் இன்று செல்கிறேன். ஒரு பெண் என்னைப் பார்த்ததும் ‘’சார்! எங்க வீட்டுக்கு பாரிஜாதக் கன்னு ஒண்ணு வேணும் சார். கோயில்ல பூஜைக்கு வேணும்’’ என்றார். என்னிடம் கேட்டதுமே பாரிஜாதக் கன்று நடப்பட்டு வளர்ந்து பூத்து அதன் மலர் இறைவனுக்கு அர்ப்பணம் ஆகி விட்டதைப் போல அப்பெண்ணுக்கு பூரிப்பு. ‘’ரெண்டு நாள்ல திரும்ப வருவேன். அப்ப வாங்கிட்டு வரேம்மா’’ என்றேன். 

ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் நாம் தந்த அரளி பூச்செடிகள் நல்ல உயரம் வளர்ந்து பூத்துள்ளன. காணவே மகிழ்ச்சியாக இருந்தது. 

மக்கள் நுட்பமாக இருக்கிறார்கள். நுட்மான ஒன்றை நுட்பமாகவே ஏற்கிறார்கள். 

உங்களைப் போன்ற நண்பர்கள் உடனிருந்து அளிக்கும் உற்சாகம் நம் செயல்பாடுகளைக் கொண்டாட்டமாக ஆக்குகின்றன. 

அன்புடன்,
பி ம