108
வசந்தம் துவங்கியிருக்கிறது
நாம் மலர்வோம்
மலர்தல்
நம்மை
நம் இருப்பை
அபூர்வமாக்குகிறது
மேன்மையின்
பெருவெளியில்
நிறுத்துகிறது
நாம்
பல தருணங்களில்
மலர்ந்திருக்கிறோம்
இக்கணம்
முதல்
மலராகிறோம்
மலராகவே ஆகிறோம்
107
மலர்களின் உலகில்
மகிழ்ச்சி இருக்கிறது
புரிதல் இருக்கிறது
நம்பிக்கை இருக்கிறது
அன்பு இருக்கிறது
அன்பு
மட்டுமே இருக்கிறது
106
மலர்கள்
இனிமையைப் பரப்புகின்றன
எளிமையை நிறையச் செய்கின்றன
ஒரு மலரைப் போல
எளிதாக
இனிதாக
இருப்பது
இந்த உலகை
இன்னும்
பெரிதாக்குகிறது
105
சொற்களை விட
உணர்வுகளை விட
மௌனம்
நம்மை
மேலும் இணைக்கிறது
மேலும் புரிந்து கொள்ளச் செய்கிறது
மௌனத்தில் பேதம் இல்லை
மௌனத்திற்கு பேதம் இல்லை
மௌனத்தில்
நாம் மட்டுமே இருக்கிறோம்
104
மலர்கள்
எங்கும் செல்வதில்லை
அங்கேயே இருக்கின்றன
மலர்களைப் பார்க்க
அவ்வப்போது
கடவுள்கள் வருகின்றனர்
103
மலர்களின் உலகில்
துயரம் இல்லை
எனினும்
யாரேனும் கலங்கும் போது
மலர்கள்
துயரப்படுகின்றன
102
மலர்கள்
மௌனமே
ஆகச் சிறந்த மதிப்பளித்தல் என்றும்
ஆகப் பெரிய ஆறுதல் என்றும்
அறிந்திருக்கின்றன
துயருற்றவர்களை
அவை
மௌனத்தால் எதிர்கொள்கின்றன
101
மலர்களின் பிராந்தியங்களில்
வேலிகள் இல்லை
கதவுகள் இல்லை
அங்கே
மிகச் சிலரே
செல்கின்றனர்
100
ஒரு மலரை
ஒரு புன்னகையாக
ஒரு இன்சொல்லாக
ஒரு பிரியமாக
ஒரு அன்பாக
மேன்மைகள் அனைத்துமாகவும் கூட
புரிந்து கொள்ள முடிகிறது
99
மலர்கள்
எத்தனை அளிக்கப்பட்டாலும்
இன்னும்
காதலை
முழுமையாகச் சொல்லிட
மலர்களால்
முடியவில்லை
98
மலர்களைக் காணும் போது
மலர்களைச் சூடும் போது
அவற்றுடன்
காதல் நினைவுகள்
இணைந்து விடுகின்றன
97
ஒரு மலரைப் பறிக்கும் போது
அம்மலருக்கு வலிக்குமோ
என
ஒரு குழந்தை
ஐயுறுகிறது
96
எல்லா குழந்தைகளும்
மலர்மொழியின்
அட்சரங்களைப்
பயில்கின்றன
95
வெண் மலர்கள்
உன் மாசற்ற தன்மையை
நினைவுபடுத்துகின்றன
சிவந்த மலர்கள்
ஓயாத உன் நம்பிக்கையை
நினைவுபடுத்துகின்றன
94
உன்னிடம்
ஒரு மலரைக் கொடுக்கும் போது
அப்போது
சொல்வதற்கு
ஏதேனும்
இருக்கிறதா என்ன?
93
மலர் குறித்த எண்ணங்கள்
மலர் குறித்த சிந்தனைகள்
மலர் குறித்த கற்பனைகளில்
ஒரு மலர்
வந்தமர்ந்து விடுகிறது
நம் அகத்தில்
92
மலரைக் காணும் போது
நீ ஏன்
அத்தனை மலர்கிறாய்?
நீ ஏன்
அத்தனை புன்னகைக்கிறாய்?
நீ ஏன்
அத்தனை உணர்ச்சிவசப்படுகிறாய்?
91
கையில்
ஒரு மலரை
வைத்திருக்கும் போது
நீ
அப்சரஸ் ஆக
மாறுகிறாய்
என்பதை
அறிவாயா?
90
மலர்கள்
உன்னை
மிகவும் நேசிக்கின்றன
மிகவும் விரும்புகின்றன
என்பதை
அறிவாயா?
89
வெயிலில்
காற்றில் ஈரம் இல்லை
ஈரம் இல்லாத காற்றில்
தன்னை
நிறைத்துக் கொள்கிறது
மலர் மணம்
88
தூய சொல்லில்
கனிவில்
மென்மையான அணுகும் முறையில்
உவகையின் கணங்களில்
கன்னிமை உணரும் நிறைவில்
ஒரு மலர்
புவியில்
மலர்கிறது
87
மலர்ச்சிக்காகவே
மலர்கின்றன
மலர்கள்
86
மலர்களால்
மலர்களுக்காக
மலர்களுடைய
உலகம்
85
மலர்களின் உலகம்
குழந்தைகளின் உலகமாகவும்
இருக்கிறது
84
மலர்களின் உலகம்
உனது உலகமாகவும்
இருக்கிறது
83
இரவு
நாளின் மலர்
அந்திகள்
மலரின் மகரந்தங்கள்
82
விடியல் பூக்கள்
நம்பிக்கை அளிக்கின்றன
அந்திப் பூக்கள்
மேலும்
நம்பிக்கை அளிக்கின்றன
81
விடியல் அந்திக்கும்
மாலை அந்திக்கும்
இடையே
மேலும்
மாலை அந்திக்கும்
விடியல் அந்திக்கும்
இடையே
இருக்கிறது
வாழ்க்கை
80
உன் தனிமை
ஒரு
மலர்
79
உன் புன்னகை
ஒரு
மலர்
78
உன் காத்திருப்பு
ஒரு
மலர்
77
காற்றில்
மலர்கள் அசைவது
போல
உன் உரையாடல்கள்
76
நீ அளிக்கும் நம்பிக்கைகள்
மலரைப் போல் நுண்மையானவை
மலர் வாசம் போல் மென்மையானவை
75
ஒரு மலர் வசீகரிப்பது போல
ஒரு மலர் மணம் பரப்புவது போல
ஒரு மலர் பொலிவு கொள்வது போல
இருக்கிறது
உனது இயல்பு
74
ஒரு மலரைப்
பார்த்துக் கொண்டே
இருப்பதைப் போல
உன்னை
நினைத்துக் கொண்டே
இருக்கிறேன்
73
ஒரு மலரின்
முன்னால்
நாம்
அழாமல் இருக்கிறோம்
72
மலரை
புவியில் பூக்கும்
நிலவென்றே
புரிந்து கொள்கிறான்
அந்த குழந்தை
71
ஒவ்வொரு தினமும்
மண்ணில்
மலர்கள்
மலர்ந்து கொண்டிருப்பது போல
உன்னைப் பற்றிய
சொற்களை
உச்சரித்துக் கொண்டே இருக்கிறேன்
70
பெருநதியில்
மலர்கள் மிதப்பது போல்
வாழ்வில்
உனது இயல்பு
69
ஒற்றை மலரென
ஆலயத்தில்
ஒரு தீபம்
ஆயிரமாயிரம்
தீபச்சுடர்களென
காட்டில்
மலர்கள்
68
மலர்கள் வாடுகையில்
தெய்வங்கள்
வருத்தம் கொள்கின்றன
67
ஒரு பொழுதை
ஒரு தருணத்தை
ஒரு நாளை
ஒரு பருவத்தை
ஒரு வாழ்வை
நீ
மலரச் செய்கிறாய்
66
தீபங்கள்
தீயின் மலர்கள்
65
தனித்து நிற்கிறது
வெட்டவெளியில்
ஒரு மலர்
64
உனது விரல்கள்
மலர்களை
நெசவு செய்து கொண்டிருக்கின்றன
உனது எண்ணங்கள்
மலர்களை பூக்கச் செய்கின்றன
உனது கற்பனைகள்
மலர்வாசம் கொண்டுள்ளன
63
ஆயிரம் நிலவுகள் உதிக்கையில்
பூக்கிறது
ஆத்ம மலர்
62
மலர்களின் உலகில்
கரைதல் மட்டுமே இருக்கிறது
கரைதலின்
விடுதலை மட்டுமே இருக்கிறது
61
கரைந்து போகையில்
எண்ணிக் கொள்ளவோ
சொல்லிக் கொள்ளவோ
ஏதேனும் உள்ளதா என்ன?
60
ஒரு மலரின்
முன்
பணிதல்
இந்த வாழ்வை
எத்தனை
அழகாக்குகிறது?
59
தூய்மையின்
அன்பின்
உணர்வின்
கண்ணீர்த் துளிகள்
மலர்களாக
விழுகின்றன
58
ஒரு குழந்தைக்கு
மலர்
என்பது
தீரா வசீகரமாகவும்
முடிவில்லாப் புதிராகவும்
எப்போதும்
இருக்கிறது
57
விண்மீன்கள்
நிலவு
மேகம்
கடல்நுரை
அனைத்தும்
நீ சூடும் மலர்கள்
என்றாகின்றன
56
வாழ்வை
மலராக்கிக் கொள்ளும்
விந்தையை
நீ பெற்றது எப்படி?
நீ அடைந்தது எப்படி?
55
அவள்
ஒரு மலரைப் போன்றிருக்கிறாள்
அத்தனை மென்மையாக
அத்தனை மேன்மையாக
தன் கைவிரல்களால்
மலர்தலை
அபிநயிக்கிறாள்
அக்கணம்
மலரும்
ஆயிரம்
ஆத்ம மலர்கள்
54
உன்னை
ஒரு மலரன்றி
வேறு ஏதாகவும்
கருத முடியவில்லை
ஏன்?
53
நீர்ப்பெருக்கின் சுழிப்பு
நதியின் மலர்
அருவிச் சாரல்
காற்றின் மலர்
52
தீ
என்பது
ஒரு உக்கிர மலர்
51
நிலவைக்
குளிரச் செய்யும் மலர்
சூரியனை
சுடரச் செய்கிறது
50
மலர்
ஒரு தவம்
மலர்
ஒரு வரம்
49
கவிதை
சொல்லின் மலர்
48
மலர்கள்
வாடுகின்றன
உதிர்கின்றன
மீண்டும்
மலர்கின்றன
மீண்டும் மீண்டும்
மலர்கின்றன
47
ஓர் அபூர்வ கணம்
ஒரு மகத்தான உணர்வு
ஓர் இனிய பிரியம்
நிறைவளிக்கும்
நம்பிக்கையளிக்கும் ஒரு சொல்
மலர்கள்
அந்தரத்திலும் பூக்கின்றன
46
ஆழ் இரவும்
அடர் ஒளியும்
இணைந்த
மலர்
நீ
45
வெயில்
தழுவிக் கொள்கிறது
மலரை
வளி
தழுவிக் கொள்கிறது
மலரை
மழை
தழுவிக் கொள்கிறது
மலரை
வான்
தழுவிக் கொள்கிறது
மலரை
யாவற்றையும்
தழுவிக் கொள்கிறது
மலர்
44
விண்மீன்கள் மலரும் வானம்
பூக்கள் மலரும் பூமி
இரண்டுக்கும் நடுவே
மலர்ந்திருக்கிறது
இரவு என்னும் மலர்
43
மலர்களுக்கும்
மலர்களின் மகரந்தங்களுக்குமான
உறவு
உனக்கும்
உனது அகத்துக்கும்
42
மலரின் ஒளி
எதனால்
ஆனது?
41
ஒரு சிறு பூந்தோட்டம்
மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது
நம்பிக்கை அளிக்கிறது
துணை நிற்கிறது
தோட்டத்திற்கு
தினமும்
நீர் வார்க்கும்
தோட்டக்காரன்
மகிழ்ச்சியை
நம்பிக்கையை
மலரச் செய்கிறான்
40
ஒரு மலர்
உடன் வருவதைப் போல
உடன் இருப்பதைப் போல
ஏன்
எல்லாரும் இருப்பதில்லை
என்ற வினா
அக்குழந்தைக்கு
39
நிலவை
மலர் என்றும்
மலரை
நிலவு என்றும்
புரிந்து கொள்கிறது
அக்குழந்தை
38
தடாகம் வானம்
பூத்திருக்கும்
சின்னஞ்சிறு மலர்கள்
விண் மீன்கள்
வெண் பெரும் மலர்
நிலவு
37
நிலவு அறியும்
மலரை
மலர்கள் அறியும்
நிலவை
36
உனது பிரதேசத்தில்
பேதம் இல்லை
துயரம் இல்லை
வலிகள் இல்லை
ஒரு மென் துடிப்பு மட்டுமே இருக்கிறது
உயிரின் துடிப்பு
உயிர் பூக்கும்
மண்ணின் துடிப்பு
35
ஒரு விதையின்
கனவில்
முடிவில்லாமல்
மலர்கள்
பூத்துக் கொண்டே
இருக்கின்றன
34
மல்லிகை
இயல்பு கொள்ள
விரும்புவதாக
நீ
ஒருநாள்
சொன்னாய்
33
வான் பார்க்கிறாய்
நிலம் பார்க்கிறாய்
காற்று தீண்டுகையில்
மேலும்
உயிர் கொள்கிறாய்
மலராக
32
உன் முகம்
ஒரு மலர்
உன் கண்கள்
இரு மலர்கள்
31
மீன்கள் சலனமுறச் செய்யும்
நீர்மலர்த் தடாகத்தை
உன் மென் விரல்களால்
தீண்டுகிறாய்
சிலிர்ப்பு
30
பறவைகள்
பறக்கும் மலர்கள்
29
சில்வண்டுகளின் ஒலி காட்டின் மௌனம்
மௌனத்தின் மீதேறி
ஊர்கின்றன
மலர்களின் மகரந்தங்கள்
28
ஒரு
மலரில்
அமிழ்ந்திருக்கிறது
ஒரு பெரும் காடு
27
மலர்க்கண்களால்
மலர்ப்பார்வையால்
நோக்குகிறாய்
உன் உலகம்
உன் உலகம்
நீர்மை
கொள்கிறது
உன் கண்கள்
நீர்த்திரை கொள்கின்றன
ஒரு கணம்
விழி மூடி
விழி திறக்கிறாய்
உலகில் மலர்கின்றன
ஆயிர மாயிரம்
மலர்கள்
26
புன்னகைக்கிறாய்
உதட்டினை மடித்துக் கொள்கிறாய்
இமை உயர்த்துகிறாய்
உள்ளம்கைகளில்
முகத்தினை வைத்துக் கொள்கிறாய்
ஒரு முகம்
எத்தனை
மலராக மலர முடியும்
உதட்டினை மடித்துக் கொள்கிறாய்
இமை உயர்த்துகிறாய்
உள்ளம்கைகளில்
முகத்தினை வைத்துக் கொள்கிறாய்
ஒரு முகம்
எத்தனை
மலராக மலர முடியும்
25
மருத நிலம்
நீரில்
பூக்கிறது
இளம் நாற்றுகளாக
நீரில்
பூக்கிறது
இளம் நாற்றுகளாக
24
மருதநிலம்
காத்திருக்கிறது
மழைக்காக
வானம் மகரந்தமென
தூவுகிறது
மழையை
மழை கொண்ட நிலம்
பூக்கிறது
புல்லாக
23
புல்லும்
ஒரு மலரென
புரியத் தொடங்குவது
எப்போது
22
ஒரு மலர்
வான் நோக்குவது
போல
உன் குரல்
உன் இசை
மேலெழுகிறது
இறைமையை
நோக்கி
21
நீ
உணர்ந்த கடவுளை
உணர்கிறேன்
நறு மணமாய்
நிறையும்
உன் இசை
மூலம்
20
தவத்தில் சுடர்ந்த
ஒரு முனிவன்
குறுமுனிவன்
அவன்
கமண்டல நீராய்
மலர்ந்திருந்தது
யோகம்
அந்த மலர்
பரவியது
நிலத்தில்
கலையென
இசையென
காவிரி
என
19
தம்பூராவின் சுருதியில்
நாத ஸ்வர இசையில்
வீணையின் நரம்பொன்றின் அதிர்வில்
இசை பயிலும் மகவொன்றின்
குரலிசையில்
பாயும் போது
மலர்கிறாள்
காவேரி
18
ஒரு மலர்
பலவற்றை
உணர்த்துகிறது
மலர்தலையும்
17
மலரின்
மகரந்தத்திலும்
வீற்றிருக்கிறது
இறைமை
16
மலரை அர்ப்பணிக்கிறேன்
மலரிடம்
அர்ப்பணம் ஆகிறேன்
15
நீ
சூடிக் கொள்ளும்
மலரும்
மலர்களும்
உன்னிடம்
அத்தனை இயல்பாக
பொருந்திக் கொள்வது
எதனால்?
14
உன்னை
மலர்கள் அறியும்
உன்னை
இறைமை அறியும்
13
உயிரை ஏந்திக் கொள்ளும்
ஆற்றல்
கொண்டுள்ளன
எளிய மலர்கள்
12
மணக்கையில்
மலர் வேராகிறது
மணம் மலராகிறது
11
மலர்ப்பெருவெளியில்
ஆதி மலர் ஒன்று இருக்கிறது
ஆதி உயிர் ஒன்று இருக்கிறது
10
நீ
மலரானது எப்படி
என்று
கேட்கும் போதெல்லாம்
புன்னகையையே
பதிலாக
அளிக்கிறாய்
9
நீல மலர் கடல்
அதில்
மிதக்கும்
வெண் மலர்கள்
நுரை
8
சுடரும் மலரும்
மிதக்கும்
பெருநதியில் ஒரு ஓடம்
ஓடக்காரன் பாடுகிறான்
ஒரு பெண்ணின் கதையை
7
வானம்
கன்னங்கரு மேகங்களால்
சூழ்ந்திருப்பதைக்
காண்கிறாய்
குளிர்கிறது உன் உடல்
குளிர்கிறது உன் மனம்
காற்றில் மலர்கின்றன
மழை மலர்கள்
6
மலர்ப்பாதங்கள்
மலர்க்கண்கள்
அகம் மலரும் கணம்
மலர் வெளியாய்
உயிர் வெளி
5
அகம் கரையும் கணம்
யாவும் கரைகின்றன
மலரிதழென
காற்றில் அலைகிறது உயிர்
அவ்வளவு மென்மையாக
அவ்வளவு மென்மையாக
4
மலருக்கான தவம்
மலர்தலுக்கான தவம்
3
ஒரு துளி
ஒரு சிறு துளி
ஒரு சின்னஞ்சிறு துளி
மகரந்தத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பெரும் காடு
2
மலர்
தன்னைச் சுற்றி
ஓருலகை
உருவாக்கிக் கொள்கிறது
1
நிறைந்திருக்கிறது
காலப்பெருவெள்ளம்
அதில் மலர்ந்திருக்கிறது
ஒரு ஒலிமலர்
ஓங்காரம்