Saturday 24 July 2021

அவிட்டம்

புது மடிக்கணிணி வாங்க வேண்டிய சூழல் உருவானது. அதாவது நிர்ப்பந்தம் உண்டானது. பல ஆண்டுகளாக உடனிருந்த பழைய கணினி தன் இறுதி மூச்சு வரை உழைத்து விட்டு தன் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு ஓய்ந்தது. இப்போது புதிதாக ஒன்றை வாங்க வேண்டும் என்ற நிலை. பழைய மடிக்கணினி என்னுடன் இருந்த ஏழிரண்டு ஆண்டுகளில் சில முறை பேட்டரி மாற்றினேன். அதைத் தவிர வேறு பெரிய செலவில்லை. 

மைசூரில் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக இருக்கும் நண்பனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’தம்பி! லேப்டாப் சரியா ஒர்க் ஆகல. இனிமே ரிப்பேர் செய்ய முடியாதுன்னு தோணுது. ‘’

’பரவாயில்ல. புதுசு வாங்கிடலாம். இது உங்க கிட்ட எத்தனை வருஷமா இருக்கு?’’

‘’பதினாலு வருஷம் தம்பி’’

‘’எனக்குத் தெரிஞ்சு இத்தனை வருஷம் ஒரே லேப்டாப் வச்சிருக்கறது நீங்க தான்’’

‘’எழுதறது வாசிக்கறது இணையம்ன்னு டெய்லி வேலை செஞ்சிருக்கு.’’

''புது மாடல் எது பெஸ்ட்டா இருக்கும்னு நான் பாத்து சொல்றன் அண்ணா’’

சில நாட்கள் சென்றன. 

நண்பன் ஃபோன் செய்தான். ‘’அண்ணா ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நிறைய சூப்பர் மாடல் இருக்கு.’’

‘’அவ்வளவு பட்ஜெட் எனக்கு தாங்காது தம்பி’’

‘’உங்க பட்ஜெட் எவ்வளவு?’’

’’15,000 அதிகபட்சம் 20,000’’

‘’அந்த விலைக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல’’

‘’டிரை பண்ணிப் பார்ப்போம்’’

ராஜீய பேச்சுவார்த்தைகள் போல எந்த முடிவும் எடுக்’’காமல் நிறைவு செய்தோம். 

அமேசானின் ஒரு இணைப்பை தம்பிக்கு அனுப்பினேன். அனுப்பிய அன்று இரவு அவனுக்கு ஃபோன் செய்தேன். 

’’அண்ணா நீங்க அனுப்பிய மாடலைப் பத்தி பிரவுஸ் செஞ்சன். ரொம்ப புது கம்பெனி. டேட்டா ஸ்டோரேஜ் ரொம்ப குறைவா இருக்கும் போல இருக்கே’’

‘’தினமும் நான் எழுதறத சேவ் செய்யணும். வேர்டு ஃபைல் மிக மிக குறைவான ஸ்பேஸ்ஸை தானே ஆக்குபை செய்யும். எனக்கு அது போதும்’’

‘’என்ன விலை வருது?’’

‘’19,000 க்குப் பத்து ரூபா குறைவு’’

‘’கன்ஸ்யூமர் ரிவியூ நல்லாத்தான் சொல்லியிருக்காங்க. 4.5 ஸ்டாருக்கு மேலே நிறைய ரேட்டிங் இருக்கு. இருந்தாலும் புதுசா இருக்கேன்னு யோசிச்சன்’’

‘’ஒரு வாய்ப்பு கொடுப்போம்’’

‘’அந்த கம்பெனி பேர் என்ன?’’

‘’அவிட்டா - நான் தமிழ்த் தன்மையோட ’’அவிட்டம்’’ னு ஒரு நட்சத்திரத்தோட பேரை வச்சுகிட்டன். ‘’அவிட்டம்’’னா பெரும் செல்வம் னு அர்த்தமாம்’’

‘’உங்களுக்குன்னு ஏதாவது ஒன்னு உங்க கைக்கு வந்து சேரும்ணன். உங்க ராசி அப்படி’’

அவிட்டம் தன் கடமையை ஆற்றத் துவங்கியுள்ளது.