Thursday 12 August 2021

பொன்னும் பவளமும்

இந்திய சுதந்திரத்தின் பொன்விழா கொண்டாடப்பட்ட போது நான் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் ஊரில், பள்ளிகளின் ‘’வினாடி - வினா அணி’’ களில் எங்கள் பள்ளியின் அணி வலுவானது. எங்கள் பள்ளி சார்பாக நானும் திரு. குமரேசன் என்பவரும் கலந்து கொள்வோம். இருவருமே 11ம் வகுப்பு படித்தோம். பொன்விழா கொண்டாட்டத்துக்கான போட்டிகள் அந்த ஆண்டு அதிக அளவில் நடைபெற்றன. எங்கள் ஊரில் நடந்த அனைத்து போட்டிகளிலும் எங்கள் அணியே முதலிடம் பெறும்.  

எங்கள் பள்ளி மேனிலைப் பள்ளி. அதில் 6,7,8 வகுப்புகள் ஒரு குழுவாகவும் 9,10 வகுப்புகள் ஒரு குழுவாகவும் 11,12 வகுப்புகள் ஒரு குழுவாகவும் இருக்கும். 11,12ம் வகுப்பு மாணவர்களிலிருந்து ஒரு ‘’வினாடி - வினா அணி’’யை உருவாக்க எழுத்துத் தேர்வு எங்கள் பள்ளியில் நடந்தது. மொத்தம் 25 கேள்விகள். நான் 18 கேள்விகளுக்கு சரியான பதிலெழுதி முதலிடம் பெற்றேன். திரு. குமரேசன் 16 கேள்விகளுக்கு சரியான பதிலெழுதி இரண்டாம் இடம் பெற்றார். நாங்கள் இருவரும் 12ம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண்களில் தாண்டியதால் +1, +2 ஆகிய இரு வருடமும் ஊரில் நடந்த எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டோம். கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் நாங்களே முதலிடத்தில் வெற்றி பெற்றோம். பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது பள்ளியின் காலை வழிபாடு கூட்டத்தில் போட்டிகளில் பெற்ற வெற்றி அறிவிக்கப்படும். அப்போது எங்கள் இருவரின் பெயரும் சொல்லப்படும். 

சுதந்திரத்தின் பொன்விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு அணி தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டு மாநில அளவில் வினாடி வினா நடத்தப்பட்டது. அப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக எங்கள் அணி தேர்வாகியது. மாவட்டம் முழுதிலும் இருந்து வந்திருந்த அணிகளுக்கு இடையே நடந்த போட்டி எழுத்துத் தேர்வு - வினாடி வினா என இரு கட்டமாக நடத்தப்பட்டது. அதில் நாங்கள் முதலிடம் பெற்றது எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. மாவட்டத்தின் பிரதிநிதிகளாக சென்னைக்குச் செல்கிறோம் என்று எண்ணும் போதே சந்தோஷம் இருந்தது.  மாநில அளவில் நடந்த போட்டியில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனினும் நாங்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டோம் என்ற செய்தியை பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவித்தார்கள். 

அந்நிகழ்வுக்குப் பின்னர், திருச்சியில் சங்கம் ஹோட்டலில் மாநில அளவிலான ஒரு வினாடி - வினா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிப்பு பள்ளிக்கு வந்தது. பெரிய பரிசுத் தொகை. நிகழ்ச்சி 12 பகுதிகளாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னால் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்ததால் இந்த போட்டியில் பள்ளி சார்பில் கலந்து கொள்ளக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்வு நடத்தப்படும் என பள்ளியில் அறிவித்தனர். மீண்டும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 25 கேள்விகள். நான் முன்னர் நடந்தது போல் 18 மதிப்பெண் பெற்று முதலிடம். திரு. குமரேசன் 16 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம். மீண்டும் எங்கள் அணியே தேர்வானது. 

திருச்சியில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து 120க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு. அதில் 20 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் நாங்கள் தேர்வானோம். பின்னர் வினாடி - வினா போட்டி. அதில் காலிறுதி சுற்று வரை சென்றோம். இரண்டு வார பகுதியாக அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்றாலும் அது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. 

இந்திய சுதந்திரத்தின் பொன்விழாவை ஒட்டி நடந்த வினாடி வினா நிகழ்ச்சிகள் என்பதால் இந்தியாவின் வரலாறு, புவியியல், வேளாண்மை, அரசியல் சாசனம், பலதுறைகளில் சாதனை படைத்த இந்தியர்கள் என பல விஷயங்கள் குறித்து பயில அந்நிகழ்ச்சிகள் உதவின. 

இப்போது இந்திய சுதந்திரத்தின் பவள விழாக் கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. பொன்விழாக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தது போல பவள விழாவிலும் ஏதேனும் ஒரு விதத்தில் பங்கெடுக்க விரும்பினேன். மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் 75 லட்சம் இந்தியர்கள் தேசிய கீதம் பாடி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதில் 75 பேரை பங்கெடுக்கச் செய்தேன்.