ஒரு பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
ஒரு வாரகாலமாக கடுமையான வேலை. சிப்பம் சிப்பமாக எடுத்துச் சென்று வழங்குவதான பணி.
என்னுடைய டூ-வீலரில் அந்த சிப்பங்களை எடுத்துச் செல்கிறேன். அதற்கான சில ஏற்பாடுகளை என்னுடைய வண்டியில் செய்தேன்.
அப்போது எனக்கு ஒரு ஞாபகம் வந்தது.
கல்லூரியில் கடைசி வருட தேர்வு முடிவுகள் வந்து பட்டம் பெற்றதும் செய்த முதல் வேலை என்னுடைய இரு சக்கர வண்டியிலிருந்த பக்கவாட்டுப் பெட்டியைக் கழட்டி தனியாக எடுத்து வைத்தது. அதெல்லாம் நடுத்தர வயதுக்காரர்களுக்கானது ; இளைஞர்களுக்கல்ல என்ற எண்ணம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மெக்கானிக்கிடம் வாகனத்தின் பெட்டியை கழட்டச் சொன்னேனோ அதே மெக்கானிக்கிடம் சென்றேன்.
‘’அண்ணன்! சில பார்சல் வண்டியில கொண்டு போக வேண்டியிருக்கு. வலது பக்கமும் இடது பக்கமும் எக்ஸ்ட்ராவா ஹூக் ஃபிக்ஸ் செஞ்சு தாங்க.’’
ஏற்கனவே ஒன்று மட்டும் இருந்தது. புதிதாக இரண்டு பக்கமும் ஒன்று என பொருத்தப்பட்டன.
துணிப்பையில் சிப்பங்களை வைத்து மாட்டிப் பார்த்தேன். வண்டி ஓட்டத்தில் அறுபட்டு விடுமோ என்ற ஐயம் எழுந்தது. வலுவான துணிப்பை வேண்டும்.
மளிகை சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளிடம் அன்றன்றைய சிறு கொள்முதலுக்குப் பயன்படுத்தும் பெரிய துணிப்பையை ஒரு கடையில் சென்று மூன்று எண்ணிக்கை வாங்கினேன்.
’’Necessity is literally the mother of invention'' என்றார் பிளாட்டோ.
மூன்று பெரிய பைகளில் சிப்பங்களை வண்டியில் மாட்டிக் கொண்டு டூ-வீலரில் சென்று கொண்டிருக்கும் என்னைக் காணும் பலர் என்னை ஒரு சிறுவணிகர் என்று எண்ணக்கூடும்.