Thursday 26 August 2021

மாற்றம்

இன்று காலை ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். எனது பணி சில நிமிடங்களில் முடிந்து விட்டது. புறப்படத் தயாரானேன். ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் கையில் ஒரு படிவத்துடன் நின்று கொண்டிருந்தனர். சிறுமிக்குப் பத்து வயதிருக்கும். பள்ளிச் சீருடை அணிந்திருந்தாள். உடனிருப்பவர் அச்சிறுமியின் தாயார். வங்கியில் நல்ல கூட்டம். என்னை நோக்கி இருவரும் வந்தனர். 

‘’சார் ! அக்கவுண்ட் ஓப்பன் செய்யணும். இந்த ஃபார்மை ஃபில்லப் பண்ணி தாங்க ‘’

ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்கள். 

எழுது மேஜைக்குச் சென்று படிவத்தை நிரப்பத் துவங்கினேன். 

பொடி பொடி கட்டங்கள். பெரிய ஆங்கில எழுத்தை அந்த பொடி கட்டத்துக்குள் எழுதுவதே பெரிய வேலையாயிருந்தது. 

அந்த சிறுமியின் பெயரைக் கேட்டேன். 

‘’காவியா’’

‘’உன் பேரு பிரமாதமான பேரு. காலத்தால் அழிக்க முடியாதது காவியம். அத தான் உன்னோட பேரா வச்சிருக்காங்க. வெரி குட்’’ என்றேன். 

’’காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவிமன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்’’ என்ற கண்ணதாசனின் வரிகள் மனதில் ஓடியது. 

கே.பி.எஸ் குரலில் அந்த பாடலின் பல வரிகள் மனதில் ஓடத் துவங்கின. ‘’பல்லக்கு பரிவாரம் படையொடு முடிசூடல் உன் சொல்லுக்கு விலையாகுமே’’ .

காவியா இவர் என்ன இன்னும் பெயரைத் தாண்டாமல் இருக்கிறாரே என யோசிக்கத் துவங்கினாள். நான் கற்பனையிலிருந்து யதார்த்தத்துக்கு வந்தேன். 

தந்தை பெயர், முகவரி, ஆதார் எண் என பல விபரங்களை கேட்டு நிரப்பிக் கொண்டிருந்தேன். 

பொருளாதார நிலை மற்றும் சமூக நிலை குறித்த கேள்விகள் இருந்தன. ‘’மைனர் கணக்கு’’ என்பதனால் அதனை நிரப்பாமல் கொடுத்து அனுப்பினேன். சாளரம் வழியாக படிவத்தை காவியாவின் தாயார் கொடுத்தார். என் உள்ளுணர்வு என்னை போகச் சொல்லவில்லை. காவியாவின் பணி முழுமையாக முடிந்ததை உறுதி செய்து கொண்டு கிளம்புவோம் என அங்கேயே நின்றிருந்தேன்.  எந்த விபரமும் இல்லாமல் இருக்கக் கூடாது; எல்லாவற்றையும் நிரப்ப வேண்டும் என்று சாளரத்தில் மீண்டும் அதே படிவத்தைக் கொடுத்து அனுப்பினர். 

அதில் வருமானவரித்துறையின் நிரந்தரக் கணக்கு எண், வருமான வரி தாக்கல் செய்த விபரங்களும் இருந்தன. ‘’மைனர் கணக்குக்கு’’ இவை பொருந்தாது. 

சமூக பொருளாதார விபரங்களை நிரப்புவோம் என காவியாவின் தாயாரிடம் ‘’ அம்மா! என்ன ஜாதின்னு கேட்டிருக்காங்க. அத நிரப்பணும். என்னன்னு  சொல்லுங்க’’

அந்த அம்மா என்ன சொல்வது என்று குழப்பமடைந்து என்னைப் பார்த்தார்கள். 

‘’அதாவது ஓ.சி, ஓ.பி.சி, எஸ்.சி ன்னு மூணு பிரிவு இருக்கு அதுல எதுன்னு தெரியுமா?

அந்த அம்மாளின் குழப்பம் இன்னும் தீரவில்லை. 

‘’அதாவது ஓ.பி.சி யில எம். பி. சியும் பி.சி யும் அடக்கம்’’ என்றேன். ஓ. பி.சி யை விளக்குவதற்காக. 

அதற்கும் அவரிடம் பதில் இல்லை.  ஒரு மஞ்சள் பையில் சில ஆவணங்கள் வைத்திருந்ததைப் பார்த்தேன். ‘’காவியாவோட கம்யூனிட்டி சர்டிஃபிகேட் இருக்காம்மா? இருந்தா கொடுங்க. அதப் பார்த்து எழுதிடறன். எழுதாம திரும்ப எடுத்துட்டு போனா அதை எழுதி எடுத்துட்டு வாங்கன்னு திரும்ப சொல்லி அனுப்புவாங்க. உங்க வேலை முடியாது அதனால தான் கேக்கறன்’’ 

என் நிலைமை அவருக்குப் புரிந்தது. 

‘’சார்! நான் ஒரு விஷயத்துக்காக தான் யோசிக்கறன்’’

‘’என்ன விஷயம் சொல்லுங்க’’

‘’முன்னாடி நாங்க ஸெட்யூல் சார். இப்ப நாங்க ஸெட்யூல் இல்ல சார். அதில இருந்து வெளிய வந்துட்டோம். நாங்க இப்ப தேவேந்திர குல வேளாளர்’’

அந்த அம்மா ஏன் தயங்கினார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் விபரங்களை நிரப்பி கொடுத்து அனுப்பினேன். 

பல கையொப்பங்கள் இட வேண்டி இருந்தது. 

காவியா ‘’எத்தனை கையெழுத்து சார் ‘’ என்றாள். 

சாளரத்தை நோக்கி அந்த அம்மா சென்றார்கள். படிவம் ஏற்கப்பட்டது. அப்போது காவியாவிடம்  ‘’நல்லா படிக்கணும்’’ என்றேன். 

‘’படிப்பேன்’’ என்றாள். 

‘’நிறைய படிக்கணும்’’ என்றேன். 

‘’சரி சார்’’ என்றாள். 

நான் புறப்பட்டு நடக்கத் துவங்கினேன். 

சில அடிகள் சென்றதும் ‘’சார்’’ என காவியாவின் குரல் கேட்டது. 

திரும்பிப் பார்த்தேன். 

‘’ரொம்ப தேங்க்ஸ் சார்’’

‘’நாட் அட் ஆல் காவியா’’