எங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்கள் ஊருக்கு வடக்கே 34 கி.மீ தூரத்தில் ஆனைக்காரன் சத்திரம் என்ற ஊர் உள்ளது. பரவலாக அதனைக் கொள்ளிடம் என்று அழைப்பார்கள். கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருப்பதால் ஊரையே கொள்ளிடம் எனக் கூறி விட்டார்கள். ரயில் நிலையத்துக்கும் அதே பெயர். எங்கள் ஊர்க்காரர்கள் அதனை ஓர் எல்லையாகக் கருதுவார்கள். அந்த கொள்ளிடம் நதியைத் தாண்டிச் சென்று விட்டால் மனம் பரபரக்கும். சிதம்பரம் செல்வதென்றால் ஒரு கணக்கில் அதனை எங்கள் பிராந்தியமாக எடுத்துக் கொள்ளலாம். சேத்தியாத்தோப்பு பரவாயில்லை. அதைத் தாண்டி விட்டால் மனம் நிலைகொள்ளாது. எப்போது ஊருக்குத் திரும்பலாம் என்று தோன்றி விடும்.
முக்கியக் காரணம் தண்ணீர். காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாய்வதால் தண்ணீர் எப்போதும் மிதந்து கிடக்கும். மிகையான தண்ணீர் இயல்பாகவே ஒரு சோம்பலை உருவாக்கி விடும். குறைந்தபட்சமாக ஒரு வேலை செய்தால் கூட மனம் ஒரு நிறைவை உணர்ந்து விடும். ஒருவிதமான நிலப்பிரபுத்துவ மனநிலை.
தண்ணீரை அளவாக செலவிடுதலை முக்கிய தினசரி நடவடிக்கையாக மேற்கொள்ளச் சொல்லும் சென்னை எங்கள் ஊர்க்காரர்களுக்கு பெரும் அசௌகர்யம். முக்கால் வாளியில் முழுக் குளியலை எப்படி முடிப்பது என்பது ஊர்வாசிகளுக்கு புரியாத புதிர். எங்கள் ஊர்க்காரர்களுக்கு எங்கள் ஊர் தண்ணீர் தான் ருசி. சென்னையில் ஒருநாள் வேலை என்றால் வாட்டர் பாட்டிலில் மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்பவர்கள் உண்டு. சென்னைக்கு அங்கே குடியிருக்கும் எங்கள் ஊர்க்காரர்களைப் பார்க்கத்தான் செல்வார்கள். அவர்கள் குடிக்கத் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டால் கையோடு கொண்டு வந்திருக்கிறோம் என்பார்கள். அவர்கள் அதில் கொஞ்சம் தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு ‘’என்ன இருந்தாலும் நம்மூர் தண்ணி நம்மூர் தண்ணி தான். நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்க. நாங்க தான் இங்க கிடக்கோம்’’ என்பார்கள். சிலர் ‘’அதென்ன நீங்க மட்டும் அவ்வளவு விவரம்’’ எனக் கூறி கொண்டு போன தண்ணீரை அவர்கள் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு சென்னைத் தண்ணீரை வாட்டர் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்து விடுவார்கள்.
சென்னையில் மாம்பலம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் எங்கள் ஊர்க்காரர்கள் அதிகம். இப்போது சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ‘’நம்ம வீராணம் தண்ணி தானே சிட்டிக்கு சப்ளை’’ என்பது ஊர்க்காரர்களின் எண்ணம்.
சென்னையில் ரயிலேறி விட்டால் எங்கள் ஊர்க்காரர்களின் கண்கள் தேடுவது ஒன்றைத்தான். ‘’கொள்ளிடம் தாண்டியாச்சா’’.
தாண்டி விட்டால் ‘’அப்பாடா’’ என்று ஒரு ஆசுவாசம். நிம்மதி.