எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். தீவிரமான இசை ரசிகர். இரவு பத்து மணிக்குத் துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை இசை கேட்பது அவரின் நாற்பதாண்டு கால பழக்கம். வானொலி, டேப் ரெகார்டர் தொடங்கி இப்போது தனது அலைபேசியில் இணையம் மூலம் பாட்டு கேட்பது வரை தனது ஒலி சாதனங்களையும் காலத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றியுள்ளார்.
பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்களுக்கு ஊர்ப்பெருமை ஜாஸ்தி. பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்களே தத்தம் ஊர்ப்பெருமை பேசிக் கொள்வார்கள். இயக்குனர் கே. பி யின் திரைப்படம் ஒன்றில் ஒரு தஞ்சாவூர்காரரும் ஒரு திருவையாறுக்காரரும் ஊர்ப்பெருமை பேசுவார்கள். தஞ்சாவூர்க்காரர் சொல்வார் : ‘’நான் குடிச்ச தண்ணியே சங்கீதம்’’. திருவையாறுகாரர் சொல்வார் : ‘’நான் சுவாசிச்ச காத்தே சங்கீதம்’’. இரண்டு ஊருக்கும் இடையே 15 கி.மீ தான் தூரம். தமிழில் ஒரு பழமொழி உண்டு : ‘’கூடப் பிறந்தவனிடமே பிறந்த வீட்டுப் பெருமை பேசுவது’’ என்று.
காலையில் முதல் பாசஞ்சரைப் பிடித்து விழுப்புரம் போய் அங்கே வைகை எக்ஸ்பிரஸுக்கு மாறி மதியத்துக்குள் சென்னை சென்று அங்கே வேலைகளை முடித்து விட்டு இரவே ரயிலில் ஊர் திரும்பி விடுவது எங்கள் பகுதியினரின் பழக்கம். காலை டிபனும் சொந்த ஊரில். இரவு உணவு வீட்டில். இதற்கிடையே போவதும் வருவதுமாக 600 கி.மீ பயணம் நிகழ்ந்திருக்கும். இப்போது, சென்னை செல்லும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.45க்கு வருகிறது. அதைப் பிடித்தால் 11 மணிக்கு சென்னை செல்லலாம். மாலை 4 மணிக்கு அதே ரயில் ஏறினால் இரவு 9 மணிக்கு ஊருக்கு வந்து விடலாம்.
நண்பரிடம் சொன்னேன் : ‘’ நாம சென்னைக்கு தெற்க இருக்கோம். அதே போல சென்னைக்கு வடக்க இருக்கறவங்களும் சென்னையோட நெருக்கமான தொடர்புல இருப்பாங்க இல்லயா’’
நண்பருக்கு இசையில் இருக்கும் ஆர்வம் புவியியலில் இல்லை. எந்த பாவனையும் இல்லாமல் பார்த்தார்.
‘’நமக்கு டிரெயின் கனெக்டிவிட்டி இருக்கறாப் போல சென்னைக்கு வடக்க இருக்கற ஊர்களும் ரயிலால இணைக்கப்பட்டிருக்கும் இல்லயா. பாடகர் எஸ். பி. பி. க்கு சொந்த ஊர் நெல்லூர். மெட்ராஸ்ல இருந்து 200 கி.மீ’’
‘’எஸ். பி.பி ஆந்திராவா? அப்ப அவர் தாய்மொழி தெலுங்கா?’’
‘’ஆமாம். உங்களுக்குத் தெரியாதா?’’
‘’இல்லை. இப்போதான் கேள்விப்படறன்’’
‘’பாடகர் பி.சுசீலாவுக்கும் தாய்மொழி தெலுங்கு’’
நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.
‘’ஏ.எம். ராஜா தெரியும் இல்லையா. அவருக்கும் தெலுங்குதான் தாய்மொழி’’
நண்பருக்குப் பேரதிர்ச்சி. சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர் ஒரு பெயரை உச்சரித்தார்.
‘’பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ்?’’
’’ஆந்திராவுல காக்கிநாடான்னு ஒரு ஊர் இருக்குல்ல. அதான் அவரோட பிறந்த ஊர்.’’
எதுவும் பேசாமல் இரண்டு பேரும் இருந்தோம். தூரத்தில் கௌரவம் படத்திலிருந்து ‘’ அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம்; அவர் மேல் தொடுத்ததோ அர்ஜூனன் கௌரவம்’’ என்ற பாடல் வரி கேட்டது.
நண்பர் என்ன கேட்கப் போகிறார் என்று தெரிந்து விட்டது.
‘’பிரபு! டி. எம். எஸ்?’’
‘’அவர் மதுரைக்காரர்’’
நண்பர் ஆசுவாசமடைந்தார்.
‘’ஆனா’’
‘’ஆனா என்ன?’’
‘’அவரோட தாய்மொழி சௌராஷ்ட்ரா’’
நண்பருக்கு சொல்லே எழவில்லை.
‘’வேற யார் யாருக்கு தாய்மொழி வேற?’’
‘’ எஸ் .ஜானகிக்கு தெலுங்கு. எம்.எஸ்.வி க்கு மலையாளம்’’
நண்பர் அயர்ந்து விட்டார். அடுத்து அவர் கேட்ட கேள்வியில் நான் அயர்ந்து விட்டேன்.
‘’ஜேசுதாஸ்?’’
நான் பதிலைச் சொன்னேன்.
அப்போது பக்கத்து வீட்டிலிருந்து வானொலிப் பெட்டியில் ‘’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’’ என்ற பாடல் ஒலித்தது.
‘’இத்தனை வருஷம் மியூசிக் கேக்கறன். நீங்க சொல்ற விஷயத்தை இப்பதான் முதல் தடவையா கேள்விப்படறன்’’
‘’இசைக்கு மொழி கிடையாது இல்லையா. அதனால நீங்க முழுசா அதுல மூழ்கிட்டீங்க.’’
‘’நீங்க சொல்ற விஷயங்களை தெரிஞ்சுகிட்ட பிறகு அந்த கலைஞர்களோட கலை மேல இன்னும் பெருசா மதிப்பு உருவாகுது. புதுசா ஒரு மொழிய கத்துகிட்டு அந்த சமூகத்தோட ஆழ்மனசுல இடம் பிடிக்கறதுன்னா ரொம்ப பெரிய விஷயம்’’