Saturday 18 September 2021

சமூகமும் நீதியும்


இந்தியாவைக் கூர்ந்து நோக்குபவர்களால் ஒரு விஷயத்தை உணர முடியும். இந்திய நிலம் எண்ணற்ற தன்மை வேறுபாடுகளைக் கொண்டது. ஒவ்வொரு நூறு கிலோமீட்டர் தூரத்துக்கும் மாறுபடும் மண் அமைப்பு, நீர்ச்சூழல் ஆகியவற்றைக் கொண்டது. ஆனால் இந்தியர்களின் அகம் சற்றேறக்குறைய ஒரே விதமானது. இந்தியர்களின் விழுமியங்கள் நாடெங்கும் பொதுவானவை. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறுதான் இருந்திருக்கிறது. பின்னரும் அது மெல்ல உறுதிப்படுத்தப்பட்டவாறே இருக்கிறது.  

நாம் இந்தியாவைப் பற்றி எவ்விதமாகச் சிந்தித்தாலும் முக்கியமான ஒரு அடிப்படை என்பது இந்திய விவசாயம் தான். இந்தியப் பண்பாடே இந்திய விவசாயத்தின் - இந்திய பருவமழையின் காலச் சக்கரத்துடன் ஒத்திசைந்து உருவானது. 

வனத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்குக் கூட நியதிகள் இருந்தன. பெண் மிருகங்களை வேட்டையாடக் கூடாது. சினையாய் இருக்கும் மிருகங்களை வேட்டையாடக் கூடாது. மிருகக் குழவிகளை வேட்டையாடக் கூடாது. காட்டின் சூழியல் நிலையைப் பேண இந்த நியதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் வரி விதிப்பு முறைகளில் ஏற்படுத்திய மாற்றம் என்பது இந்திய விவசாயத்தை பெரும் சீரழிவுக்கு இட்டுச் சென்றது. இந்திய விவசாயத்தை பிரிட்டிஷார் அழித்தனர் என்பதே வரலாறு. 

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய போது பாரம்பர்யமான அணுகுமுறைகள் புத்துருவம் கொள்ள வேண்டும் என விரும்பினார். அவருடைய வாழ்க்கையும் அவருடைய செய்தியும் அதுவே. காந்திய வாழ்க்கைமுறை என்பது தினமும் குறைந்தபட்ச உடல் உழைப்பும், கூட்டு வாழ்க்கையும், சமயப் பிராத்தனைகளும் இணைந்ததே. 

இந்தியாவில் விவசாயிகள் நலன் பெற வேண்டும் என விரும்பியவர் அவர். இந்திய விவசாயியின் பொருளியல் நலனே தேசத்தின் நலன் என்ற புரிதல் கொண்டவர் அவர். 

நாடு சுதந்திரம் பெற்ற பின், ஐரோப்பிய பார்வை நோக்கு கொண்ட அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் கொள்கை முடிவுகள் எடுக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்களில் பலர், இந்திய சமூக வாழ்வின் நுண் அம்சங்களை அறியாதவர்கள். யாவருக்குமான பொருளியல் வளர்ச்சியை உண்டாக்கத் தெரியாதவர்கள். 

மகாத்மா இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் வளம் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பைத் தர வேண்டும் என விரும்பினார். கோடிக்கணக்கான மக்களின் ஒரு மணி நேரம் என்பது பல நாடுகளின் மொத்த உற்பத்தியை தாண்டிச் சென்று விடும் என காந்தி எண்ணினார். இராட்டையில் நூல் நூற்றல் என்பது அவ்விதமான குறியீட்டுச் செயல்பாடே. அந்த இராட்டை என்பது எளிய உடல் உழைப்பை அளிக்கும் பல்வேறு கருவிகளாக உருமாற்றம் கொள்ளக் கூடியதே. 

பொருள் முதல்வாதம் கட்டற்ற நுகர்வை விரும்புகிறது. கட்டற்ற நுகர்வு வெறி சமூகத்தின் எல்லா விதமான அழிவுக்கும் வழிகோலுகிறது. எல்லா விழுமியங்களையும் அழிக்கிறது. 

அனைவருக்குமான வளர்ச்சியும் அனைவருக்குமான நீதியும் உறுதிப்படுத்தப்படும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்கி அதில் வாழ்ந்து வழிகாட்டிப் போயிருக்கிறார் மகாத்மா. அவரது வழியே சமூகநீதிக்கான வழி.