Thursday 23 September 2021

இளைப்பாறல்


எனது பள்ளித்தோழன் ஒருவன் சென்னை தி.நகரில் ஓர் வணிக அங்காடியை நடத்தி வருகிறான். ஊரிலிருந்து சென்னை சென்று சில ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து பின் ஒரு பங்குதாரருடன் இணைந்து அங்காடி வணிகம் ஆரம்பித்து நடத்தி வந்தான். வணிகம் நன்றாக நடந்தது. இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த கட்டடம் ஒரு நீதிமன்ற வழக்கில் இவர்கள் வாடகை ஒப்பந்தம் போட்டிருந்தவருக்கு சாதமில்லாமல் போனதால் இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. பங்குதாரர்கள் இருவரும் தனித்தனியே வணிக அங்காடியைத் தொடங்கினர். காலை 7 மணிக்கு அங்காடிக்குச் செல்வான். இரவு 10 மணிக்கு வீடு திரும்புவான். ஞாயிற்றுக்கிழமையும் அங்காடி உண்டு. 15 ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டது.  ஒரே இடத்தில் நாள் முழுதும் அமர்ந்தே இருப்பதால் உடலில் சில சிக்கல்கள். மருத்துவரை நாடி ஆலோசனை கேட்டிருக்கிறான். முப்பது நாட்கள் கடைக்குச் செல்லாமல் ஓய்வெடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். தனது மாமனாரை கல்லாவில் அமர வைத்து விட்டு ஊருக்கு வந்து விட்டான். 

‘’எந்த ஆர்டரும் புதுசா எடுக்க வேண்டாம். சப்ளையர் வந்து கேட்டா ஒரு மாசத்துல நான் வந்து ஆர்டர் போட்டுக்கறன்னு சொல்லிடுங்க. வசூலுக்கு யார் வந்தாலும் அவங்க கேக்கற தொகைல பாதி தொகை கொடுங்க. மீதியை அடுத்த மாசம் பாக்கலாம்னு சொல்லிடுங்க.’’ மாமனாரிடம் செயல் குறிப்புகளைக் கொடுத்து விட்டு விடுபட்டிருக்கிறான். 

என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தான். பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். 

‘’பிரபு! சின்னதா நாம ஒரு டிரிப் போவோம்’’

மறுநாள் காலை 9 மணி என நேரம் சொன்னேன். 30 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தான். அவனுடைய பைக்கில் ஏறி அமர்ந்தேன். போகுமிடம் எது என்று கேட்டான். நான் முடிவு செய்திருக்கவில்லை. கடைத்தெருவுக்குச் சென்று அங்கே முடிவு செய்து கொள்ளலாம் என்றேன். நாங்கள் பள்ளியில் படித்த போது கடைத்தெருவில் ஒரு கடையில் லெமன் சர்பத் குடிப்போம். அங்கு சென்று லெமன் சர்பத் குடித்து பயணத்தைத் துவக்கினோம். 

''பிரபு ! ரிஷிகேஷ் வரைக்கும் பைக்ல போன போது ஊர் வீடு தொழில் இந்த ஞாபகங்களை எப்படி சமாளிச்ச?’’

‘’செல்ஃபோனை கையில எடுத்துக்காம இருந்தா போதும். நாம புறப்படும் போது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எல்லாம் சரியாத்தான் இருக்கு. செல்ஃபோன் இல்லாம போய்ட்டாலே நம்ம மனசு முழுக்க எந்த இடத்துல நாம இருக்கமோ அந்த இடத்தில இருக்கும். கையில செல்ஃபோனை வச்சுக்கிட்டு இருந்தா வர்ர ஃபோன்கால்ஸ் ஏதாவது ஒரு விதத்துல நம்முடைய ரொட்டீன் மைண்ட் செட்ட நம்ம கிட்ட கொண்டு வந்துடும்’’

‘’செல்ஃபோன் இல்லாம நினைச்சே பாக்க முடியல. என்னோட டாக்டர் ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொன்னப்ப உங்க செல்ஃபோனை சென்னைலயே வச்சுட்டு போயிடுங்க. ஊருக்குக் கொண்டு போகாதீங்கன்னு சொல்லிட்டார். நானும் ஃபோனை அங்கயே வச்சுட்டு வந்துட்டன். ஆனா ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. ஏதாவது முக்கியம்னா வீட்டு லேண்ட் லைனுக்கு மாமனார் ஃபோன் செய்வார். எல்லாம் ஸ்மூத்தா போகுது. பிராப்ளம் ஒன்னும் இல்ல’’

‘’நாம இருந்தா தான் எல்லாம் சரியா இருக்கும்னு நினைக்கறது மனுஷ சுபாவம். ஆனா அது முழு உண்மை இல்லை. வேணா பகுதி உண்மைன்னு சொல்லலாம்’’

‘’கொஞ்சம் கால்சியம் டேப்ளட்ஸ். விட்டமின் டேப்ளட்ஸ். உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. மனசு மெஷின் மாதிரி ஆயிடுச்சு. அதுல இருந்து ரிலீவ் ஆகுங்கன்னு சொன்னார்’’

‘’காலைலயும் ஈவ்னிங்கும் வாக்கிங் போ’’

‘’வாக்கிங் போகும் போது ரொம்ப தனியா இருக்கற மாதிரி இருக்கு. அது ரொம்ப இன்கன்வீனியண்ட்டா ஃபீல் ஆகுது’’

‘’எந்த உயிரும் கருவுல உருவாகும் போதே ‘’நான்’’னு உணருது. அது எல்லா உயிருக்கும் இருக்கற பொதுவான ஞாபகம். பின்னால் உணர்வால அறிவால நம்மைச் சுத்தி இருக்கற எல்லாமே நாம உணர்ர அதே ‘’நான்’’னு புரிஞ்சுக்குது. சில ஜீவன்களுக்கு அது சில நாள்ல - சில மாசத்துல - சில வருஷத்த்துல இல்லன்னா பல வருஷத்துல நடக்குது. அது நூறு கோடி ஜீவன்ல ஒன்னு. மத்ததுக்கெல்லாம் ஆயிரம் ஜென்மம் தேவைப்படுது. ‘’

நண்பன் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான். எதிர்க்காற்று எங்கள் முகத்தில் அலை மோதியது. 

‘’என் கிட்ட எல்லாம் இருக்கு. பணம் குடும்பம் ஸ்டேட்டஸ். ஆனா மனசுல ஒரு குறை இருக்கு. அது எப்பவும் இருக்கு. ‘’

நாங்கள் திருவாவடுதுறை என்ற ஊருக்குப் பக்கத்தில் ஒரு கால்வாய்க்கரையில் இருக்கும் எண்பது ஆண்டுகளுக்கு மேல் வயதான ஒரு ஆலமரத்தின் அடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். விழுதுகள் தங்களை மையப்படுத்தி ஆங்காங்கே பெருவளர்ச்சி கொண்டு வளர்ந்திருந்தன. மரத்தின் மையம் எது என்பதை அவ்வளவு  எளிதில் கண்டுபிடித்து விட முடியாது என்னும் அளவுக்கு பிரும்மாண்டம். 

மரத்தின் வேரில் அமர்ந்து கொண்டோம். நூற்றுக்கணக்கான காக்கைகள் எங்கள் தலைக்கு மேல் கரைந்து கொண்டிருந்தன. 

‘’பிரபு ! மனசு எப்பவும் அன் ரெஸ்ட் டாவே இருக்கு’’

’’டாக்டர் என்ன சொல்றார்?’’

‘’மெண்டல் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு இருக்குன்னு சொன்னார்?’’

‘’எப்படி ரிலீவ் ஆகுறதுன்னு சொன்னாரா?’’

‘’டெய்லி ரெண்டு மணி நேரம் வாக் போகச் சொன்னார். நீச்சல் தெரியும்னா தினம் ஒரு மணி நேரம் ஸ்விம் பண்ணுங்கன்னு சொன்னார். ஒரு மாச பிரேக்குக்கு அப்புறம் அதைச் செய்ங்கன்னார்.’’

‘’ரொம்ப யூஸ் ஃபுல்லான யோசனை தான். ஒன்னு காத்துல மிதக்கறது. இன்னொன்னு தண்ணில மிதக்கிறது’’

‘’எல்லாம் சரி ஆயிடுமா?’’

‘’நம்ம டிரடிஷன் நம்ம உடல் பஞ்ச பூதங்களால ஆனதுன்னு சொல்லுது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். வெறுங் கால்ல நடந்தா இல்லன்னா கிரவுண்ட்ல பாட்மிட்டன் ஆடினா நிலத்தோடயும் காத்தோடயும் தொடர்பு கிடைக்கும். ஸ்விம் பண்ணா நீரோட தொடர்பு இருக்கும். உடம்பு வேர்க்க இதைச் செய்தாலே பாடி டெம்ப்பரேச்சர் நமக்கு சகாயமா இருக்கும்.’’

‘’ஆகாயம்?’’ என்றான் நண்பன். 

நான் மேலே பார்த்தேன். காகங்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. 

‘’பறவைகள் வானத்தோட நெருங்கின சொந்தங்கள். வானத்தோட குழந்தைகள்னு கூட சொல்லலாம். அந்த பறவைகளுக்கு தினமும் கொஞ்சம் தானியம் போடு. வானம் உனக்கு ஹெல்ப் பண்ணும்’’ என்றேன். 

காகங்கள் ‘’கா கா’’ என்றன.