Saturday 4 September 2021

ஓர் உரையாடல்

இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தேன். 

நேரம் 7.55.

என் மேஜையில் இருந்த அலைபேசி ஒலித்தது. ஊரில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மழைக்காலத்தில் காற்றில் நிறையும் மௌனம் வியாபித்திருந்த சூழலில் அலைபேசி ஒலிப்பது சற்று அழுத்தமாகவே கேட்டது. 

திரையில் , தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

ஃபோனை எடுத்தேன். 

‘’ஹலோ! அண்ணன்! வணக்கம் அண்ணன்’’

‘’வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா?’’

‘’நல்லா இருக்கன் அண்ணன் . ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்கங்களா’’

‘’எல்லாரும் நல்லா இருக்கோம் சார். இப்ப வீட்ல இருக்கீங்களா? இல்ல கடைத்தெரு வந்திருக்கீங்களா?’’

‘’வீட்ல தான் அண்ணன் இருக்கன். சொல்லுங்க அண்ணன். என்ன விஷயம்’’

‘’நம்ம கிராமத்துல ஃபர்ஸ்ட் வாக்சினேஷன் கேம்ப் என்னைக்கு நடந்ததுன்னு தேதி ஞாபகம் இருக்கா?’’

‘’டைரிய பாத்துட்டு திரும்ப கூப்பிடறன். ஒரு அஞ்சு நிமிஷம்’’

டைனிங் டேபிளுக்கு வந்து சுருக்கமாக சாப்பிட்டு விட்டு கை கழுவினேன். நாட்குறிப்பைப் பார்த்தேன். 

ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ஜூன் 19. என்ன அண்ணன் விஷயம். மறுபடி டிஸ்ட்ரிக்ட் அட்மினிஸ்ட்ரேஷன் நம்ம ஊருக்கு கேம்ப் தராங்களா?’’

‘’ஆமாம் சார் ! நாளைக்கு காலைல.’’

‘’அப்படியா! ஆனா செகண்ட் டோஸூக்கு இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு’’

‘’ஃபஸ்ட் டோஸ் விடுபட்டவங்க எல்லாருக்கும் இந்த கேம்ப்ல வாக்சினேட் செய்யணும் சார்’’

‘’ஓ.கே அண்ணன்’’

‘’நீங்க நாளைக்கு காலைல வந்துடுங்க.’’

‘’எத்தனை மணிக்கு வரட்டும் அண்ணன். காலை ஏழே கால்.’’

‘’உங்க வீட்ல காலைல எழுந்திருக்கிறீங்க. எழுந்ததும் நேரா நம்ம வீட்டுக்கு டீ சாப்பிட வந்துர்ரீங்க. நான் பால் கறந்து வச்சுட்டு காத்துக்கிட்டு இருப்பன். புது பால்ல டீ போட்டு குடிக்கறோம். ஊர் முழுக்க ஒரு சுத்து சுத்தி விடுபட்ட எல்லார்ட்டயும் சொல்லிட்டு வந்துடறோம். ‘’




‘’ஓ.கே அண்ணன். காலைல ஆறே காலுக்கு உங்க வீட்ல இருப்பன்’’

‘’நீங்க வந்தா தான் சரியா இருக்கும்.’’

‘’அது என் கடமை அண்ணன்’’

உரையாடலை நிறைவு செய்தோம்.