Sunday 5 September 2021

இன்று

தடுப்பூசிக்காக செயல் புரியும் கிராமத்துக்கு காலை 6.30 க்கு சென்று விட்டேன். 

கிராமத்தின் நுழைவுப்பகுதியிலேயே தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் பள்ளி இருந்தது. கிராமச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி இருபது மீட்டர் தூரம் சென்று இடது பக்கம் திரும்பி 20 மீட்டர் செல்ல வேண்டும். ஒரு சித்தி வினாயகர் கோவில். அதற்கு பக்கத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி. 

பள்ளியின் வெளிக்கதவு பூட்டிடப்பட்டிருந்தது. 

ஊருக்குள் சென்றேன். அறிமுகமான பரிச்சயமான முகங்களைக் கண்டதும் ‘’இன்று தடுப்பூசி முகாம்’’ என்று அவர்களிடம் சொன்னேன். ‘’தடுப்பூசி போட்டு விட்டோம். இரண்டாம் டோஸ் இன்று போட்டுக் கொள்ளலாமா?’’ என்று கேட்டனர். அந்த கிராமத்தில் முதல் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு 77 நாட்கள் ஆகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் டோஸ் போட வேண்டும். அதற்கு முன் முதல் டோஸ் தவற விட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள இன்றைய முகாம். ‘’உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சவங்க வேண்டியவங்க முதல் டோஸ் போடாம இருந்தா அவங்க எல்லாரையும் ஸ்கூலுக்கு அனுப்பி வைங்க’’ ஒவ்வொருவரிடமும் கூறியபடி சென்று கொண்டிருந்தேன். 

பலர் என்னிடம் ‘’ என்ன சார்! முன்னாடி அடிக்கடி உங்களைப் பாப்போம். இப்ப கொஞ்ச நாளா பாக்க முடியல’’ என்றனர். சிலர் என்னைக் கண்டதும் ‘’இன்னைக்கு தடுப்பூசி போடறாங்களா சார் ‘’ என்றனர். 

கிராமத்தின் எல்லா தெருக்களுக்கும் சென்று தகவல் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டேன். 

காலை 10 மணிக்கு முகாம் துவங்கியது. 

120 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.