{ நூல் : ஸ்ரீ சாரதாதேவியாரது சரிதம் , ஆசிரியர் : சுவாமி சித்பவானந்தா வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை , திருச்சி மாவட்டம் , 639115 விலை : ரூ. 25 }
ஞானிகளின் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவமே அவர்களின் நிறைநிலையை உணர்த்தி விடும். அன்னை சாரதாதேவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மையப்பர்
-------------------------
அன்னை சாரதா தேவி ஒருமுறை தன் ஊரைச் சேர்ந்த பெண்களுடன் ஜெயராம்பாடி என்ற ஊரிலிருந்து தக்ஷ்ணேஸ்வரத்துக்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார். அன்று அன்னையின் உடல் பெரும் நலிவு கொண்டிருப்பதால் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். மற்றவர்களும் தன்னால் தாமதிக்க வேண்டாம் என அவர்களை முன்னால் செல்லச் சொல்கிறார். அனைவரும் சென்று விடுகின்றனர். மாலைக்குள் நடந்து கடக்கும் அந்த தூரத்தை இரவாகியும் அன்னையால் கடக்க முடியவில்லை. மிக மெதுவாக காட்டில் நடந்து வருகிறார். அது கொள்ளையர்கள் மிகுந்திருக்கும் காடு. அவர்கள் நரபலி கொடுக்கும் வழக்கம் உடையவர்கள்.
அத்தகைய கொள்ளைக்காரன் ஒருவன் அன்னை நடந்து வருவதைப் பார்த்து அவர் முன் செல்கிறான். ‘’நீ யார்?’’ என்று கேட்கிறான்.
அன்னை அவனிடம் , ‘’நான் உன் மகள் சாரதை’’ என்று பதிலளிக்கிறார்.
அன்னையின் அச்சொல் கொள்ளையன் மனதை இளகச் செய்கிறது. அப்போது கொள்ளையனின் மனைவியும் அங்கே வந்து விடுகிறார்.
அன்னை அவளிடம், ‘’அன்னையே! என் உடன் பயணித்தவர்கள் முன்னே சென்று விட்டார்கள். நான் இந்த காட்டைக் கடந்து செல்ல வேண்டும்’’ என்று அவள் கையைப் பிடித்தவாறு கூறுகிறார்.
கொள்ளையனும் அவன் மனைவியும் உள்ளம் உருகுகின்றனர். வனத்தில் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு தங்கள் ‘’மகளை’’ அழைத்துச் செல்கின்றனர். இரவு உணவு அளித்து உறங்கச் செய்கின்றனர். காலை அன்னை எழுந்ததும் அவருக்கு போதுமான உணவளித்து வழித்துணையாய் உடன் வருகின்றனர்.
ஊர் வந்து சேர்ந்ததும் அந்த தம்பதிகளைத் தம் ‘’அம்மையப்பர்’’ என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார் அன்னை.
இந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் இருவரும் வன்முறை மார்க்கத்தைக் கைவிட்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் ஆகின்றனர்.