Saturday 25 September 2021

சகோதரி நிவேதிதை

{ நூல் : சகோதரி நிவேதிதை , இயற்றியவர் : சுவாமி சித்பவானந்தர் , பதிப்பகம் : ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை , திருச்சி மாவட்டம், 639115. விலை : ரூ.30}

இந்திய மரபு ஆசானின் வாழ்வை முழுமையடைந்த ஒன்றாகவும் ஆசிரியரின் வாழ்வை - வாழ்வின் சம்பவங்களை நினைவு கூர்வதை ஓர் ஆன்மீகப் பயிற்சியாகவும் கொள்கிறது. நிறைநிலை வாய்க்கப்பெற்று மண்ணில் அவதரித்த இராமனின் கதையையும் குழந்தை இயல்பும் உன்னத ஞானமும் கொண்டிருந்த கிருஷ்ணனின் கதையையும் இந்திய நிலம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆசானின் பெயரை உள்ளன்புடன் உச்சரிப்பதும் ஆசானின் வரலாற்றை மீண்டும் மீண்டும் படிப்பதும் மாணவன் அகத்தைத் தூய்மைப்படுத்தும் செயலாகக் கொள்கிறது இந்திய மரபு. ஆசிரியர்கள் சத்வ, ரஜோ, தமோ குணங்களின் இணைவால் ஆன உலக வாழ்வைக் கடந்து அதற்கு அப்பால் இருக்கும் இடத்திலிருந்து இந்த உலகை இந்த வாழ்வை இங்கிருக்கும் மனிதர்களைக் கருணையுடன் பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வு அவர்களின் கருணையின் செய்தியாகிறது. 

சகோதரி நிவேதிதை தமிழ்க்கவி பாரதிக்கு ஞான ஆசிரியராக விளங்கியவர். பாரதியிடம் வேதாந்தத்தின் தாக்கம் மிக உண்டு. பாரதி சகோதரி நிவேதிதையைக் குறித்து எழுதிய பாடல் : 

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

மார்கரெட் நோபில் என்ற இயற்பெயருடைய சகோதரி நிவேதிதை அயர்லாந்தில் ஒரு மதபோதகர் ஒருவரின் மகளாகப் பிறந்தார். தனது பாட்டியால் சிறு வயது முதல் வளர்க்கப்படுகிறார். நுணுக்கமான மன அமைப்பும் கூர்மையான அறிவுத் திறனும் மென்மையான உணர்வுகளும் கொண்டவராக வளர்ந்து வருகிறார். கல்வியில் சிறப்பான ஆர்வம் இருக்கிறது அவருக்கு. தான் படித்த பள்ளியில் சக மாணவிகளைத் தலைமை தாங்கி வழி நடத்துபவராகவும் அவர்களின் உள்ளத்துக்கினிய தோழியாகவும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறார். பள்ளியின் ஆசிரியைகள் அவர் மேல் அன்பைப் பொழிகின்றனர். 

பள்ளி , கல்லூரிப் படிப்பு நிறைவு பெற்ற பின் ஒரு கல்லூரியிலும் பின் ஒரு பள்ளியிலும் ஆசிரியையாக பணி புரிகிறார். அவரது மனம் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓயாத ஆவல் கொண்டிருக்கிறது. சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணி ஆற்றுகிறார். 

தனது அகத்தை ஒளியால் நிறையச் செய்யும் திறன் வாய்க்கப்பெற்ற ஞானாசிரியனை ஒரு மாணவன் சந்திக்கும் கணம் என்பது அரியது. வைரம் போல் ஒளி விடுவது. இங்கிலாந்தில் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்கிறார் சகோதரி நிவேதிதை. வேதாந்தத்தின் சிம்ம கர்ஜனையை சுவாமிஜியின் இனிய சொற்கள் மூலம் கேட்கிறார். குருதேவர் ராமகிருஷ்ணரின் மார்க்கமே இனி தனக்கான மார்க்கம் என முடிவு செய்து அந்த ஆத்மீகப் பயணம் அன்றி தன் வாழ்க்கைக்கு வேறு நோக்கம் இல்லை என முடிவு செய்கிறார் சுவாமி நிவேதிதை. சுவாமிஜியிடம் துறவு அளிக்குமாறு வேண்டுகிறார். பலமுறை யோசித்து முடிவெடுக்குமாறு சுவாமிஜி கூறுகிறார். தனது தெள்ளிய உள்ளப் பாங்கால் இந்தியா வந்தடைகிறார் சகோதரி நிவேதிதை. சுவாமி விவேகானந்தர் அவருக்கு துறவறத்துக்கான தீட்சையை அளித்து உயர்ந்த நோக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டவள் என்ற பொருள் கொண்ட ‘’நிவேதிதை’’ என்ற பெயரை அளிக்கிறார். 

கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் துவக்குகிறார் சகோதரி. அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார். பின்னர் பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் செல்கிறார். கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை நடத்துகிது ஸ்ரீராமகிருஷ்ண மடம். அந்த பணிகளை முன்னின்று செய்கிறார். 

தனது குருநாதரான சுவாமி விவேகானந்தர் உடலை உதிர்த்து பரத்துடன் கலந்த பின், சில ஆண்டுகள்  ஆன்ம சாதனைகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சகோதரி நிவேதிதை. பல்வேறு விதமான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சகோதரி நிவேதிதை 1911ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சமாதியடைந்தார்.  சிவோஹம் சிவோஹம்.