Thursday 21 October 2021

நீங்குதல்

மூன்று வாரங்களாக பால், தேனீர், காஃபி என மூன்றையும் நீங்கியுள்ளேன். வெகு நாள் பழகிய பழக்கம் ஒன்றிலிருந்து நீங்குதல். இளம் வயதில் மூன்று நான்கு முறை இவற்றைத் தவிர்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் மூன்று நான்கு ஆண்டுகள் நீடித்திருக்கிறது. பின்னர் பல காரணங்கள். கட்டுமானப் பணி நடக்கும் போது பணி இடத்தில் தேனீர் ஒரு நாளைக்குப் பலமுறை சுழன்று கொண்டிருக்கும். தவிர்ப்பது சிரமம். சமீப காலங்களில், பலமுறை முயன்று தோல்வி அடைந்தேன். இப்போது வாய்த்திருக்கிறது. தேனீர் அருந்தும் நேரங்களில் வென்னீர் குடித்துக் கொள்கிறேன். பால் தேனீரை இப்போது நினைத்தால் எப்படி இவ்வளவு அடர்த்தியான திரவத்தை குடலுக்குள் கொண்டு செல்வது என்று தோன்றுகிறது. பால் தேனீரை நிறுத்தி விட்டு காலையில் ஒருமணி நேரம் நடைப்பயிற்சி செய்யத் துவங்கினேன். உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது. காலை மாலை நேரங்கள் காலியான வயிறாக இருப்பதால் யோகாசனங்களும் செய்ய முடிகிறது. நல்ல பசி எடுக்கிறது. ஆழமான நிம்மதியான தூக்கம். 

ஊக்கம் கொண்ட மன அமைப்பு கொண்டவர்கள் நிச்சயம் சிறிய அளவிலாவது உடலுக்கு உழைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மனித உடல் என்பது தினசரி குறைவான நேரமாவது வியர்க்க வேண்டும். அது ஒரு எந்திரம் போல. எந்திரத்தின் எல்லா பகுதிகளும் அவற்றுக்கு உரிய பணிகளுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்க வேண்டும். நவீன வாழ்க்கை உடலை பின்னுக்குத் தள்ளி மனத்தை முன்னே கொண்டு வந்து விட்டது. மனம் உடலளவுக்கு ஸ்தூலமானது அல்ல எனினும் அதன் எவ்விதமான அலைவும் உடல் உறுப்புகளைப் பாதிக்கும். வலிமை கொண்ட உடல் வாழ்க்கையை மிக எளிதாக அணுகும். ஆரோக்கியமான உடல் என்பது நாம் அடையச் சாத்தியமான ஆகச் சிறந்த லாபம் என்கிறது மகாபாரதத்தின் யட்சப் பிரசன்னம். 

வயலில் பாய்ச்சல்காலில் நீர் பாய்வது ஓசை எழுப்புவது போல நடைப்பயிற்சிக்குப் பின் நாள் முழுவதும் காலில் பாயும் குருதியின் ஓசையை மானசீகமாக கேட்க முடிகிறது. 

மனம் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளது. தொழில் நிமித்தமான பணிகள். சமூகம் சார்ந்த பணிகள். படைப்புச் செயல்பாடுகள். அவை அனைத்துக்கும் பால் தேனீரை நீங்கியதும் நடைப்பயிற்சி , யோகா செய்வதும் உதவியாக உள்ளது.