Saturday 23 October 2021

முன்னே உள்ள பாதை

இன்று நண்பர் ஒருவருடன் மாலைநடை சென்றேன். வானம் கருத்து மழை பொழிவதற்குத் தயாராய் இருந்தது. லேசான தூறல் அவ்வப்போது தூறி ஓய்ந்தது. குளிர்க்காற்று வீசிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தில் நாம் காணும் புறவுலகம் எழில் கொள்கிறது. எப்போதும் நாம் பார்க்கும் பகுதி என்றாலும் மழைக்காலம் அவற்றில் புதிய சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. காற்றில் இருக்கும் தூசித் துகள்கள் நீரின் அடர்த்தியால் கழுவப்பட்டு விடுவதால் காணும் காட்சிகள் அனைத்தும் துலக்கம் பெற்றிருக்கின்றன. செப்புப் பாத்திரத்தை துலக்கி ‘’பளிச்’’ என வைப்பது போல. அந்த தூய்மையும் எழிலும் நம் அகத்தை இளகச் செய்கின்றன. நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன.  

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளை நிலைப்படுத்துவது தொடர்பாக பேசிக் கொண்டே நடந்தோம். ஒரு விஷயத்தை முன்வைத்து அதில் எனது எண்ணங்களையும் அபிப்ராயங்களையும் தெரிவித்து விட்டு மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள்; அபிப்ராயப்படுகிறார்கள் என்பதை முழுவதும் தெரிந்து கொள்வேன். 

உண்மையில் இப்போது, ‘’காவிரி போற்றுதும்’’ புதிதாக சிறகு முளைத்த இளம்புள்ளின் ஆர்வத்துடன் உவகையுடன் உத்வேகத்துடன் உள்ளது. எனினும் இப்போது இன்னும் பலரை இணைத்துக் கொள்ள வேண்டிய நேரம் உருவாகி விட்டதாக நான் எண்ணுகிறேன். அதனை நண்பரிடம் சொன்னேன். நமது பணியில் இன்னும் பலரை ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதற்கான பணிகளையும் நாம் தான் முன்னெடுக்க வேண்டும். நம் முன்னே உள்ள பாதை மிகப் பெரியது. மிக நீண்டது. அதில் இன்னும் பலருடன் நாம் முன்னகர வேண்டும். 

ஒரு சிறு குழுவாக ‘’காவிரி போற்றுதும்’’ செய்த செயல்களை சுயமதிப்பீடு செய்து கொண்டோம். 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு இந்தியக் கிராமத்தை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகப் பார்க்கிறது. ஏதேனும் ஒரு இந்தியக் கிராமத்தையாவது முழுத் தன்னிறைவு கொண்ட ஒன்றாக ஆக்க தனது முயற்சிகளை எப்போதும் மேற்கொள்ளும். 

1. விவசாயிகளின் விவசாய வருமானத்தை அதிகரிக்க அவர்களுக்கு உதவுதல்

2. கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் வங்கிக்கடன் மூலம் சுயதொழில் தொடங்கச் செய்வதிலும் உதவுதல்

3. கிராமத்தின் பொது இடங்களில் அதிக மரக்கன்றுகள் நடுதல்

4. இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யத்தை கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திடமும் கொண்டு சேர்த்தல் 

இவையே ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள்.