Saturday 30 October 2021

இரவுப்பணி

இந்தியப் பாரம்பர்ய நாட்காட்டி ஆண்டுகள் மொத்தம் அறுபது என்கிறது. பிரபவ, விபவ, சுக்ல என்று தொடங்கி ரக்தாட்சி, குரோதன, அட்சய என ஒரு சுற்று நிறைவு பெறும் அறுபது ஆண்டுகள். விவசாயத்தில் விதைத்தல், நடவு, களை எடுத்தல், அறுவடை என செயல்கள் கிரமமாக நடப்பது போல இந்த ஆண்டுகள் அறுபதும் மீண்டும் மீண்டும் கிரமமாக நிகழும் என்பது ஒரு கோணம்; ஒரு வகையான புரிதல். இயற்கை இவ்வாறான ஒரு சுற்றை தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கொள்ளலாம். லௌகிகத்தின் பெரும்பாலான விஷயங்கள் இந்த சுற்றுக்குள் அடங்கும் என்றும் கொள்ளலாம். 

ஷேக்ஸ்பியர், ‘’ஆல் தி வேர்ல்டு இஸ் ஸ்டேஜ் ; வுமன் அன் மென் ஆர் மியர்லி பிளேயர்ஸ்; தே ஹேவ் தேர் எக்ஸிட்ஸ் அண்ட் தேர் எண்ட்ரண்ஸஸ்’’ என்கிறார். வெளியேறும் வழியான எக்ஸிட்டை ஏன் முன்னால் சொன்னார் என்பது யோசிக்க சுவாரசியமானது. இந்த கவிதையில் மகவாக, சிறுவனாக,இளைஞனாக, நடுத்தர வயதுக்காரனாக, முதியோனாக என மனித நாடகம் நகர்வதை கவித்துவமாகக் காட்டியிருப்பார்.  

ஆதி சங்கரரின் சுலோகம் ஒன்று குழந்தைப் பருவத்தில் பொம்மைகள் மீது ஆர்வம்; இளம் வயதில் செல்வத்தின் மீது ஆர்வம்; முதிய வயதில் வாழ்நாட்கள் மீது ஆர்வம்; மனிதனுக்கு எப்போது தான் ஆத்மன் மீது ஆர்வம் ஏற்படும் என்கிறது. 

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால், நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். பட்டப் படிப்பு படித்து முடித்ததுமே சுயதொழில் மட்டுமே செய்வது என்ற முடிவுடன் இருந்தேன். எனது தந்தையும் கட்டுமானப் பொறியாளர். எல்லாத் தந்தைகளைப் போலவே அவரும் மகனின் திறமைகளை சற்று குறைத்தே மதிப்பிட்டார். வேறொரு விதத்தில் சொன்னால் சரியாக மதிப்பிட்டார். 

எனது தந்தையின் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்ல நேரிட்டதால் அவர் செய்ய இருந்த பணி ஒன்றை தந்தை செய்ய நேரிட்டது. எனது பணித்திறன் என்ன என்பதை அந்த பணி மூலம் அறிந்து விடலாம் என்பதால் அந்த பணியில் இணைந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார். 

கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். நான் ஆர்வத்துடன் காலவாய்களுக்குச் சென்று விசாரிப்பேன். செங்கல்லின் தரத்தினைப் பரிசோதிப்பேன். கட்டுமான இடம் எங்கே என்று கூறி கல்லை அங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன். அவர்கள் நாளும் நேரமும் சொல்வார்கள். நான் தந்தையிடமும் பணியாளர்களிடமும் அதனைத் தெரிவித்து விட்டு அந்த நேரத்தில் காத்திருப்பேன். பெரும்பாலும் செங்கல் வராது. காத்திருந்து விட்டு விசாரிக்க அங்கே சென்றால் ஏன் கல் அனுப்பவில்லை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். தந்தை செங்கல்லுக்கு சொன்னால் நேரத்துக்கு வந்து நிற்கும். ஒரு சில முறைக்குப் பின்னால், அந்த நுட்பம் எனக்கு பிடிபட்டது. 

நான் இளைஞன் என்பதாலும் அவர்கள் சொல்வதை நான் நம்புவேன் என்பதாலும் என்னை கன்வின்ஸ் செய்ய முடியும் என்பதாலும் நான் ஆர்டர் கொடுத்த பின்னால் ஏதேனும் புது ஆர்டர் வந்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து சப்ளை செய்து விடுவார்கள். என்னிடம் செவ்வாய்க்கிழமை என்று சொன்னால் வெள்ளிக்கிழமைதான் சப்ளை செய்வார்கள். அந்த விபரம் பிடிபட்ட பின்னர் நான் கறாராக சப்ளையர்களிடம் கூற ஆரம்பித்தேன் : நீங்க சொல்ற நாள்ல நேரத்துல சப்ளை செய்றதுன்னா செய்ங்க. உங்களால சொன்னபடி சப்ளை செய்ய முடியாம ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்தா நான் வண்டியை சைட்ல அன்லோட் பண்ண அனுமதிக்க மாட்டேன். திருப்பி அனுப்பிடுவேன். என் மேல வருத்தப்படாதீங்க. 

கட்டுமானம் என்பது பலவிதமான சுபாவமும் பழக்கமும் கொண்டவர்கள் சேர்ந்து செய்யும் தொழில். ஒரு சப்ளையர் ஆர்வமுள்ளவராக இருப்பார். ஆனால் அவருடைய டிரைவர் போதிய திறமை இல்லாதவர் என்றால் வண்டியை எங்காவது சேற்றில் இறக்கி சிக்க வைத்து விடுவார். வண்டியை சேற்றிலிருந்து வெளியே எடுக்க ஜே. சி. பி வாகனத்தைத் தேடி எடுத்து வர வேண்டும். அது நம் வேலை இல்லை ; டிரைவரின் வேலை என்று இருக்க முடியாது. சைட்டுக்கு செல்லும் வழியெல்லாம் சேறாக இருக்கிறது ; வண்டி மாட்டும். அந்த சைட் ஆர்டரை எடுக்காதீர்கள் என்று சப்ளையரிடம் தகவல் தெரிவித்து விடுவார்கள். 

கொள்முதல் விஷயங்களையும் முழுதாகப் பார்க்க வேண்டும். காலையிலிருந்து மாலை வரை நடக்கும் வேலையையும் மேற்பார்வையிட வேண்டும். வேலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். என்னுடைய பணி காலை ஏழு மணிக்குத் துவங்கும். இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவேன். அன்றைய கணக்கை டைரியில் எழுதி வைத்து விட்டு குளிக்கச் செல்வேன். இரவு உணவு அருந்த பத்து மணி ஆகி விடும். நாள் முழுதுமான அசதியால்  கண்ணை மூடியவுடன் தூங்கி விடுவேன். விழித்துப் பார்த்தால் அடுத்த நாள் விடிந்திருக்கும். 

பம்பரம் என சுழன்று வேலை செய்து கொண்டிருந்ததால் எனக்கு முதல் வேலையிலேயே நல்ல பேர் உண்டானது. எனது தந்தை ‘’பரவாயில்லையே’’ என்று நினைக்கத் தொடங்கினார். எனது அபிப்ராயங்களை கேட்கவும் என்னுடன் விவாதிக்கவும் ஆரம்பித்தார். 

அந்த சைட்டில், பேஸ்மெண்ட் ஃபில்லிங் செய்ய சவுட்டு மண் தேவைப்பட்டது. அந்த ஏரியாவில் அப்போது சவுட்டு மண்ணுக்கு டிமாண்டு. யாருக்கும் கிடைக்கவில்லை. லோடுக்கு அதிக விலை கொடுக்க நினைத்தும் எங்கும் மெட்டீரியல் கிடைக்கவில்லை. யாருக்கும் கிடைக்காததைக் கொண்டு வர நான் முயல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி கேட்டேன். ‘’சரி’’ என்றார். 

சைட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு ஊர். அங்கே நிலப்பரப்பே சவுட்டு மண்ணால் ஆனதாக இருக்கும். அது என் நினைவில் இருந்தது. அங்கு சென்றேன். அங்கே ஒரு நில உரிமையாளரைச் சந்தித்து அவர் வயலில் இருந்து சவுட்டு மண் சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டேன். அவருக்கு சப்ளை செய்து பழக்கம் இல்லை. 

‘’தம்பி ! இன்னும் பதினைஞ்சு நாள்ல எங்க வீட்டுல பொண்ணு கல்யாணம் இருக்கு தம்பி. கல்யாண வேலை ஏகப்பட்டது இருக்கு. என்னால இந்த வேலைல மெனக்கெட முடியாது’’

‘’நீங்க பகல்ல சப்ளை செய்ய வேண்டாம். நைட்ல சப்ளை செய்ங்க.’’

‘’நான் ஆளுங்ககிட்ட பேசிப் பாக்கறன்’’

‘’எனக்கு நாப்பது லோடு வேணும். நீங்க முழுக்க சப்ளை செஞ்சா உங்களுக்கு கல்யாண செலவுக்கும் கணிசமா பணம் கிடைக்கும்’’

‘’என்ன தம்பி பழக்கம் இல்லாத விஷயத்தை செய்யச் சொல்றீங்க’’

‘’இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு சைட்ல லோடுக்காக வெயிட் பண்றன்’’

இரவு ஏழு மணி அளவில் கட்டுமானப் பணி முடிந்தது. பணியாளர்களுக்கான ஊதியத்தை பட்டுவாடா செய்து விட்டேன். அன்று பணியிடத்துக்கு அப்பா வந்திருந்தார்கள். அப்பா புறப்பட்டார்கள். 

’’பிரபு ! நேரா வீட்டுக்குத்தானே’’

வீட்டுக்கும் கட்டுமானப் பணியிடத்துக்கும் இருபது கிலோ மீட்டர் தூரம். 

‘’இல்லை. நீங்க போங்க. இன்னைக்கு நைட் சவுட்டு மண் லோடு வருது. நான் இருந்து இறக்கிட்டு வர்ரேன். ‘’

’’யார் சப்ளையர்?’’

நான் விஷயத்தை சொன்னேன். 

‘’நீ சொல்றதெல்லாம் நடக்கற விஷயமா? கல்யாண வேலைல இருக்கறவரு நகைக்கடை, ஜவுளிக்கடை, கேட்டரிங் ஏற்பாடுன்னு அலைஞ்சுகிட்டு இருப்பாறா இல்லை சவுட்டு மண் அடிப்பாரா? முதல்ல அவரு ரெண்டு டிராக்டர் டிப்பர் அரேஞ்ச் செய்யணும். மண் ஏத்தி விட ஆளுங்க எட்டு பேராவது வேணும். டீசலுக்கு கொடுக்க அவர் கையில பணம் இருக்கணும். ராத்திரி நேரத்துல இத்தனை விஷயமும் நடக்கணும். நீயே யோசிச்சுப் பார். இதெல்லாம் சாத்தியமா? ’’

‘’நீங்க வீட்டுக்குப் போங்க. நான் ஒன்பது மணி வரைக்கும் பாத்துட்டு வரேன்.’’

அப்பா அதிருப்தியுடன் கிளம்பினார்கள். 

நான் அந்த கிராமத்தின் சிறிய தேனீர்க்கடை ஒன்றில் இட்லி சாப்பிட்டு விட்டு பணியிடத்தில் காத்திருந்தேன். அங்கே ஊரிலிருந்து சென்றிருந்த கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருந்தனர். யாருக்கும் நம்பிக்கையில்லை. நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். அலைபேசி அப்போது தான் அறிமுகமாகிக் கொண்டிருந்தது. மண் அடிக்கச் சொன்னவரிடம் தொலைபேசியே கிடையாது. அலைபேசி எம்மாத்திரம்? மிகவும் தனியாக உணர்ந்து அமர்ந்திருந்தேன். மணி ஒன்பது ஆனது. பத்து ஆனது. பதினொன்று ஆனது. பத்தரை மணிக்கு ஊரின் கடைசி பஸ்ஸூம் போய்விட்டது. 

ஒரு தொழிலாளர் வந்து ‘’சார் ! இங்கயே தூங்கிடுங்க. நடுநிசில ஊருக்கு கிளம்பி போக வேண்டாம். கருக்கல்ல போங்க. எங்கயாவது வண்டி பஞ்சர்னா கூட ஒன்னும் பண்ண முடியாது’’ என்றார். 

பன்னிரண்டு மணி வரை பார்த்து விட்டு டூ - வீலரில் ஊருக்குப் புறப்படுவோம் என எண்ணினேன். 

நேரம் 11.45

தூரத்தில் ஒரு டிராக்டர் வரும் சத்தம் கேட்டது. 

அதனை பணியாளர்களிடம் சொன்னேன். 

‘’சார் ! நாங்களும் உங்க கூட தான் இருக்கோம். எப்படி உங்களுக்கு மட்டும் கேக்குது’’ என்றனர். 

வண்டியை எடுத்துக் கொண்டு கிராமத்துச் சாலையில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றேன். இரண்டு டிராக்டர் டிப்பர்கள் பளிச்சிடும் ஹெட் லைட் வெளிச்சத்துடன் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றின் முன் சென்று நின்றேன். 

‘’சார் ! சவுட்டு மண் லோடு வந்திருக்கு’’

நான் வண்டியை பணியிடம் நோக்கித் திருப்பினேன். 

என் டூ -வீலர் முன்னால் வர அதன் பின்னால் இரண்டு டிராக்டர் டிப்பர்களும் வர பணியிடத்தில் நுழைந்தோம். 

ஹைட்ராலிக் லிவர் பயன்படுத்தி சவுட்டு மண் அன்லோடு ஆனது. 

‘’சார் ! மொத்தம் நாலு டிப்பர். ரெண்டு பின்னால வருது. நாங்க முன்ன கிளம்பினோம். அந்த வண்டி இந்நேரம் லோடு ஆகி கிளம்பி இருக்கும்.’’

நான்கு டிப்பர்களும் மாற்றி மாற்றி லோடு அடித்தன. 

நாற்பது லோடு நான் சொல்லியிருந்தேன். முப்பத்து எட்டு லோடு வந்து இறங்கிய போது நேரம் காலை மணி 6. 

‘’சார் ! மண் ஏத்தி விடற லோடுமேன் எல்லாரும் நைட்வேலையால சோர்ந்துட்டாங்க. இத்தோட முடிச்சுக்கிறோம் ‘’ 

நான் 38 லோடு சவுட்டு மண் சைட்டில் இறங்கி விட்டது என்பதை காலை 6.15க்கு ஃபோன் செய்து அப்பாவிடம் சொன்னேன். 

ஊருக்கு வந்து குளித்துத் தயாராகி சாப்பிட்டு வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டு சவுட்டு மண் அடித்த விவசாயி வீட்டுக்குச் சென்றேன். 38 லோடுக்கான பணத்தைக் கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். 

‘’புஞ்சை நிலத்தை நஞ்சையா மாத்தணும்னு ரொம்ப நாள் நினைச்சன் தம்பி. உங்களால அந்த விருப்பமும் நிறைவேறுச்சு. இந்த பணம் கல்யாண செலவுக்கும் உபயோகமாகும். ரொம்ப நன்றி தம்பி’’ என்றார். 

பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களைச் செய்து கொண்டிருந்த காண்டிராக்டர்கள் என்னிடம் வந்து தங்களுக்கும் சவுட்டு மண் தேவை என்றனர். விவசாயியின் விலாசம் சொல்லி அனுப்பி வைத்தேன். 

***

இது நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

60 ஆண்டுகள் சுழற்சிக்குள் நிகழும் ஒரு உள் சுழற்சி. 

***

நேற்று, ஒரு காலிமனைக்கு கம்பிவேலி இட பணியாளர்களை காலை 5.30 மணிக்கே வரச் சொன்னேன். பணியாளர்கள் வந்து விட்டனர். நானும் சென்று விட்டேன். நாங்கள் சென்று சேர்ந்ததிலிருந்து அடைமழை பெய்யத் தொடங்கி விட்டது. மாலை 5 மணி வரை தொடர் மழை. அதன் பின்னர் மழை விட்டது. 

இரவு 9 மணிக்கு வானம் எப்படி இருக்கிறது எனப் பார்த்து விட்டு இரவில் வேலை செய்யலாம் என முடிவு செய்தோம். 

நான் 9 மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்கு சென்று விட்டேன். 

பணியாளர்கள் வந்து சேர 10.30 ஆனது. 

அதன் பின்னர் பணி தொடங்கி இரவு 1.30க்கு வேலை முடிந்தது. 

***

பணியை மேற்பார்வை இட பணியிடத்தில் இருந்த போது 15 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் துல்லியமாக நினைவில் எழுந்தது. 

---------------