Tuesday 2 November 2021

மெய்ப்பொருள்

எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர். கட்டுமானப் பணி நுண்ணிய திட்டமிடலும் நேர்த்தியான செயலாக்கமும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். கட்டுமானப் பணியிடம் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்  என எதிர்பார்ப்பார். அவரது சுட்டிக்காட்டல்களும் எதிர்வினைகளும் கடுமையாக இருக்கும். நீண்ட கால அனுபவம் உள்ளவர் என்பதால் தொழிலில் அவரது உள்ளுணர்வுகள் துல்லியமாக இருக்கும். பணியிடத்தில் அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்காது. அவர் இடும் பணிகளை நாங்கள் செய்வோம். அதில் இரண்டாம் எண்ணமே யாருக்கும் இருக்காது. 

என்னுடைய மனம் படைப்பூக்கம் கொண்டது. கல்லூரி முடித்து ஓராண்டில் தொழிலுக்கு வந்தேன். தந்தையாயினும், நெடிய அனுபவம் கொண்ட கண்டிப்பான ஒருவரின் கீழ் பணி புரிய நேர்ந்தது. ‘’சென்சிடிவ்’’ ஆன இயல்பு என்னுடையது. கட்டுமானப் பணியின் ‘’செய் - செய்யாதே’’ விதிகள் இறுக்கமானவை. அவை சிறு அளவில் கூட நெகிழ்வதில்லை; மாறுவதில்லை. 

எனது தந்தைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் கட்டுமானப் பணி நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இது சற்று கடுமையானது போல் தோன்றும். ஆனால் இது கடுமையானது அல்ல. ஏனென்றால், கட்டுமானம் அலுவலக வேலை அல்ல. ஒரு கட்டுமானப் பணியின் கால அளவு 6 மாத காலம் எனில் அதில் கொத்து வேலை 60 நாட்கள் இருக்கும். கம்பி வேலை 40 நாட்கள் இருக்கும். தச்சு வேலை 30 நாட்கள். மின் பணிகள் 25 நாட்கள். ஒரு பணி நடக்கும் போதே மற்ற பணிகள் வேறு இடத்தில் நடத்தலாம். உதாரணத்துக்கு கொத்து வேலை நடக்கும் போது தச்சு வேலை பட்டறையில் நடைபெற்று உருப்படிகள் தயாராகிக் கொண்டிருக்கும். இவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பணிக்கு ஓய்வு தருவது என்பது 60 நாள் பணிக்காலத்தை 70 நாளாக்குவதற்கு சமம். துவங்கிய கணத்திலிருந்து கட்டுமானப் பணி இடைவெளி இல்லாமல் நதி போல முன்னே சென்று கொண்டிருக்க வேண்டும் என எனது தந்தை எதிர்பார்ப்பார். ’’வெள்ளை காலர்’’ பணிகளின் நியதிகளை கட்டுமானத்துக்குப் பொருத்திக் கொள்ள தேவையில்லை என்பது அவரது அபிப்ராயம். 

அவர் எந்த விஷயத்தையும் குறிப்புகளாக மட்டுமே சொல்வார். விரிவாக விளக்க மாட்டார். இளைஞனான எனக்கு அது புதியது. இளமைக்குரிய ததும்பலுடன் ஏதேனும் யோசனைகள் சொல்வேன். நான் பணியில் சேர்ந்த மூன்றாவது நாள் என்னை அழைத்தார். என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் : ‘’நான் உன்னிடம் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்’’. அப்பா தமிழில்தான் சொன்னார். ஆங்கிலத்தில் ‘’Do What I Say'' என்பார்கள். நான் தேசிய மாணவர் படையில் இருந்தவன். அதன் முதல் கட்டளை , ‘’Obey with Smile'' என்பது. நான் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டேன். 

பணியிடத்துக்கு செங்கற்கள் வந்து இறங்கும். செங்கற்களை அடுக்கும் முறையை ‘’கட்டு ஆயம்’’ என்பார்கள். கிடைமட்டமாக 50 அல்லது 40 கற்களை பரப்புவார்கள். செங்குத்தாக 20 அல்லது 25 வரிசை செல்லும். செங்குத்து எண்ணிக்கையும் கிடைமட்ட எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஒரு வரிசை குறைந்தால் கூட 50 கற்கள் குறைந்துள்ளது எனப் பொருள். அதன் பொருள் மதிப்பு அதிகம். அத்துடன் பணியிடம் கவனமின்மையுடன் இருக்கிறது என்றாகி விடும். எனது தந்தைக்கு ‘’பார்வை உணர் திறன்’’ ( Visual Memory)  அதிகம். சற்று தொலைவில் இருந்து பார்த்தே ‘’கட்டு ஆய’’ த்தின் செங்குத்து எண்ணிக்கையைக் கூறி விடுவார். என்னாலும் பணியாளர்களாலும் எண்ணிப் பார்த்தே சொல்ல முடியும். செங்கல் வரும் போதெல்லாம் எண்ண வேண்டும். அடிக்கடி செய்ய வேண்டிய வேலை. இருந்தாலும் ஒன்று , இரண்டு , மூன்று என முதல் வகுப்பு குழந்தைகள் பாடம் படிப்பது போல எண்ண வேண்டிய வேலை. ஒரு வரிசையை விட்டு விட்டோம் என்றால் 20 என்பதை 19 ஆகக் காட்டும். அப்போது மீண்டும் எண்ண வேண்டும். எண்ணியதையே மீண்டும் எண்ணினால் எங்கோ எண்ணிக்கையில் தவறியிருக்கிறோம் என்பது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். 

ஒருமுறை பணியிடத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் செங்கல் வந்து இறங்கியது. எனது தந்தை அவற்றைப் பார்த்து விட்டு, 18,000 செங்கல் வந்துள்ளது என்றார். வழக்கம் போல், நான் சரிபார்க்கத் தொடங்கினேன். ஒரு சாக்பீஸ் எடுத்துக் கொண்டு ஒவ்வொறு ‘கட்டு ஆய’’மாக எண்ணினேன். 16,000 என எண்ணிக்கையைக் காட்டியது. எனினும் தந்தை கணக்கிட்டு சொன்ன எண்ணிக்கை. அது சரியாகத்தான் இருக்கும். இப்போது நாம் போய் 16,000 என சொல்லி மீண்டும் அவர் முன்னிலையில் எண்ணி 18,000 வந்தால் ஒன்று , இரண்டு கூட சரியாக எண்ணத் தெரியவில்லை என்றாகி விடும். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். மீண்டும் ஒருமுறை எண்ணினேன். 16,000 எண்ணிக்கை தான் வந்தது. எனது தந்தையிடம் சென்றேன். ‘’செங்கல் 18,000 இல்லை. 16,000 தான் வந்திருக்கிறது’’ என்றேன். ‘’நான் வெரிஃபை செஞ்சனே’’ என்றார். நான் மீண்டும் ஒருமுறை எண்ணச் சென்றேன். எனது தந்தை ‘’பிரபு’’ என அழைத்தார். நான் திரும்பிப் பார்த்தேன். ‘’அதில் 16,000 கல் தான் இருக்கிறது’’ என்றார். 

அன்று மாலை என்னை அழைத்தார். ‘’பிரபு! இந்த ஃபீல்டு வித்யாசமானது. பல பேரு நம்ம முன்னாடி ரொம்ப பொலைட்டா நாம சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்கிட்டதா காட்டிப்பாங்க. இங்க ‘’உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் தான்’’ அதிகம். நம்மளை ரொம்ப பிளீஸ் பண்ணி பேசுவாங்க. அது எதையும் நாம உண்மைன்னு நம்பக் கூடாது. ஒரு ஆள் அவனோட வேலைய எந்த அளவு புரிஞ்சிக்கிட்டு இருக்கான் ; எவ்வளவு சரியா செய்யறான்; நம்ம முன்னாடியும் நாம இல்லாதப்பவும் ஒரே மாதிரி நடந்துக்கிறானா எவ்வளவு உண்மையா இருக்கான் என்பது தான் அளவுகோல். 
நாம சொல்ற எல்லாத்தையும் எந்த அனலைஸும் இல்லாம ஒரு ஆள் ஆமோதிக்கிறான்னா அவன் அதை ஒரு மெக்கானிக்கல் ஹேபிட்டா வச்சுருக்கான்னு அர்த்தம். அது ரொம்ப டேஞ்சரஸ். ‘’என்றார். 

நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

‘’காலைல உனக்கு நான் வச்சது ஒரு டெஸ்ட். நீ முதல் தடவை எண்ணிப் பாத்தப்பவே உனக்கு 16,000 கல்லுன்னு தெரிஞ்சிருச்சு. இருந்தும் நான் 18,000ம்னு சொன்னேன்னு நீ திரும்ப ஒரு தடவை எண்ணுன. நான் சொன்னா ரொம்ப சரியா இருக்கும்னு தெரிஞ்சும் நீ 16,000 கல் தான்னு வந்து சொன்ன. 18,000 த்தை நான் வெரிஃபை செஞ்சுட்டன்னு சொல்லியும் நீ நான் சொல்றன்ங்கறதுக்காக ஏத்துக்காம திரும்ப ஒரு தடவை எண்ணப் போன. நீ நம்புற விஷயத்தை நான் சொல்லியும் விட்டுக் கொடுக்கல. கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க்ல ஒருத்தரோட இயல்பு என்னங்கறது இந்த மாதிரி ஒரு டெஸ்ட்லயே தெரிஞ்சிரும்.’’

இந்த நிகழ்ச்சி எனக்கு பல விஷயங்களைப் புரிய வைத்தது.