Wednesday 27 October 2021

இருமை

2003ம் ஆண்டு என்னுடைய பொறியியல் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எல்லா இளைஞர்களையும் போலவே பெரியவர்களின் உலகத்துக்குள் நுழைந்து விட்டோம் என்பதில் பேருவகை கொண்டிருந்தேன். அனைத்தும் எளிது எனத் தோன்றும் மாயத்தை அனைவருமே இளமையில் உணர்ந்திருப்பார்கள். அதில் நானும் விதிவிலக்கல்ல.   

நானும் எனக்கு ஒரு வருடம் முன்னால் கல்லூரிப் படிப்பை முடித்த என்னுடைய சீனியர் ஒருவரும் ஒரு இணைய மையத்துக்குச் சென்றோம். அவர் தீவிரமான பெருமாள் பக்தர். இனிய மனிதர்.  இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இணையம் அப்போது தான் எங்கள் ஊர் போன்ற நகரங்களில் பரவலாகிக் கொண்டிருந்தது. தமிழ் யூனிகோட் உருவாகி விட்டது என்று ஞாபகம். வெளியூர்களில் - வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். வாரம் ஒரு நாள் இணைய மையம் செல்வோம். ஒரு மணி நேரம் இணையம் பயன்படுத்த ரூ. 30 கட்டணம் என்று ஞாபகம். அவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். ரெஸ்யூம் ஃபார்வர்டு செய்வார். நானும் உடன் செல்வேன். 

அப்போது ஊரின் மத்தியில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் இணைய மையம் ஒன்று இருந்தது. அந்த வளாகத்துக்கு உள்ளேயும் கடைகள் உண்டு. வளாகத்தின் வெளிப்பக்கத்திலும் கடைகள் உண்டு. அவையும் அந்த வளாகத்தைச் சேர்ந்தவையே. முதல் தளம் , இரண்டாம் தளம் என இரண்டு தளத்திலும் கடைகள் உண்டு. 

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தை அந்த வணிக வளாகத்தின் உள்ளிருந்த பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு மாடியை நோக்கி நடந்தோம். நண்பர் என்னிடம் , ‘’ இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் டைம் ஆகும். நாம ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிப்போமா?’’ என்றார். வளாகத்தின் வெளிப்பக்கத்தில் இருந்த பேக்கரியை நோக்கி செல்லத் துவங்கினோம். 

வளாகத்தின் காவலாளி எங்களிடம் வந்து ‘’சார் ! வெளிய போறீங்கன்னா வண்டியை இங்க பார்க் பண்ணாதீங்க. வண்டியை எடுத்துட்டு போய்டுங்க’’ என்றார். 

‘’நாங்க உங்க காம்ப்ளக்ஸூக்கு வந்திருக்கோம். உங்க காம்ப்ளக்ஸூக்கு வெளிப்பக்கம் இருக்கற பேக்கரிக்கு இப்ப போகப் போறோம். எங்க கிட்ட நீங்க எப்படி இந்த மாதிரி சொல்ல முடியும்?’’

’’அவுட்சைட் வெஹிக்கிள் அதிகம் இங்க பார்க் பண்றாங்க. அத அவாய்ட் பண்ண தான் சார் இப்படி சொல்றோம்’’

‘’உங்களுக்கு காம்ப்ளக்ஸ் மெயிண்டய்ன் பண்றதுல்ல ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதெல்லாம் நீங்க தான் சால்வ் பண்ணிக்கணும். உங்க இடத்துக்கு வந்த கஸ்டமர் கிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவிங்களா?’’

‘’சார்! எனக்கு சொல்ற வேலையை நான் செய்றன். அவ்வளவுதான்’’

நான் அந்த இடத்தில் ஸ்திரமாக நின்று விட்டேன். ‘’ உங்க ஓனரை இங்க வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட நடந்ததைச் சொல்லி ஒரு கஸ்டமர் கிட்ட உங்க ஸ்டாஃப் நடந்துகிட்டது சரியான்னு கேக்கறன். அத கேக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன்.‘’

நண்பர் என்னிடம் ‘’இஸ்யூ எதுவும் வேண்டாம் பிரபு. நாம இங்கயிருந்து வேற பிரவுஸிங் செண்டர் போயிடுவோம். லெட்  அஸ் ஃபர்கெட் திஸ்’’ என்றார். 

’’என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க. ஒரு வணிக நிறுவனம் யாருக்காக நடத்துறாங்க? கஸ்டமருக்காகத்தானே? ஓனருக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியணும். ஓனர் இங்க வரணும். ஓனரைப் பாக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன். ‘’

வணிக வளாகமே என்ன நடக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தது. 

சில நிமிடங்களில் மோட்டார்சைக்கிளில் ஒரு மனிதர் வளாகத்தினுள் நுழைந்தார். வண்டியை பார்க் செய்து விட்டு எங்களிடம் வந்தார். மிகவும் பணிவாக, ‘’நான் தான் சார் இந்த காம்ப்ளக்ஸ் மேனேஜர். வீட்டில இருந்தன். காம்ப்ளக்ஸ்ல இருந்து ஃபோன் வந்தது. என்னன்னு பாக்க உடனே வந்திருக்கன். என்ன விஷயம் சொல்லுங்க’’ என்றார். 

நண்பர் விஷயத்தைச் சொன்னார். 

‘’தப்பு எங்க செக்யூரிட்டி மேல தான் சார். நடந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேக்கறன். செக்யூரிட்டிய நான் தனியா கண்டிக்கறன்.’’ 

நான் , ‘’உங்க ஓனர் எப்ப வருவார்? அவர் கவனத்துக்கும் விஷயத்தைக் கொண்டு போகணும்.’’ என்றேன். 

‘’அவர் ஃபாரின்ல இருக்கார் சார். மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவார். நான் தான் இங்க ஃபுல் இன்சார்ஜ். நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கறன்.’’

நண்பர் என் தோளில் கையைப் போட்டு என்னை பேக்கரிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதல் தளத்தில் இருந்த இணைய மையத்துக்கும் சென்றோம். 

சில ஆண்டுகள் ஓடின. 

எனது நண்பர் ஒருவர் அந்த வளாகத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அந்த கடையில் அவருடன் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்போது அந்த வளாகத்தின் மேனேஜர் நண்பரின்  கடையைக் கடந்து சென்றார். அவர் கடந்து சென்றதும் என்னிடம் இவர்தான் இந்த வளாகத்தின் உரிமையாளர் என்று சொன்னார். 

‘’இவர் ஓனர் கிடையாதுங்க. மேனேஜர். ஓனர் ஃபாரின்ல இருக்கார்’’ என்றேன். 

’’இவர் மேனேஜர்னு உங்க கிட்ட யார் சொன்னது?’’

‘’அவரே தான் என்னிடம் சொன்னார்’’. நான் சம்பவத்தை விளக்கினேன். 

நண்பர் யோசித்துப் பார்த்து விட்டு, ‘’அந்த நேரத்துல உங்களை சமாதானப்படுத்த ஓனர் தன்னை மேனேஜர்னு சொல்லியிருக்கார். ஓனர் தான் தான்னு சொல்லியிருந்தா நீங்க இன்னும் கொஞ்சம் கடுமையா ரியாக்ட் பண்ணி இருப்பீங்க. அத அவாய்ட் பண்ண இப்படி சொல்லியிருக்கிறார்’’ என்றார்.