Tuesday, 2 November 2021

உலகம்

என்னுடைய முதல் கட்டுமானப் பணியின் போது, ஊரில் ஒரு கடையில் சிமெண்ட் வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த கடையின் உரிமையாளர், நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருமே நல்லறிமுகமாகிப் பரிச்சயமானார்கள். ஊரில் எல்லா பொறியாளர்களுக்கும் அந்த கடை தான் சிமெண்ட் சப்ளை செய்து கொண்டிருந்தது.  அவர்களிடம் பெரிய குடோன் இருந்தது. அதில் எப்போதும் 2000 மூட்டை ஸ்டாக் இருக்கும். பொதுவாக எல்லா சிமெண்ட் கடைகளும் அவர்களுக்கு வரும் சிமெண்ட் லோடை கடையில் அன்லோடு செய்யாமல் பார்ட்டியிடம் ஆர்டர் வாங்கிய இடத்தில் இறக்கி விடுவார்கள். அன்லோடு மற்றும் லோடு செலவு மிச்சம். இந்த கடையும் இவ்வாறு செய்வார்கள். ஒருவேளை சிமெண்ட் வண்டி வரத் தாமதமானால் குடோனிலிருந்து அவர்கள் வண்டியில் சிமெண்ட் ஏற்றி சைட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். எனவே ஆர்டர் கொடுத்தால் டெலிவரி சரியாக இருக்கும் என்பதால் எல்லாரும் அந்த கடையை விரும்புவார்கள். ஒரு பணி தொடங்கும் போது , அவர்களிடம் முன்பணமாக ரூ.50,000 எல்லா பொறியாளர்களும் வழங்கி விடுவார்கள். பணி முடிந்ததும் கணக்கு பார்த்துக் கொள்வார்கள். 

எனது தந்தைக்கு இந்த முன்பண விவகாரத்தில் முழு உடன்பாடு இல்லை எனினும் நான் அதனை செய்தேன். 

எங்கள் கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. என்னுடைய டைரியில் எழுதியிருந்த சிமெண்ட் கணக்கைப் பார்த்தேன். அட்வான்ஸ் ரூ. 50,000. சிமெண்ட் வாங்கியது ரூ. 44750க்கு. சிமெண்ட் கடை எனக்கு ரூ. 5250 பாக்கி தர வேண்டும். அவர்களுக்கு ஃபோன் செய்து கணக்கு பார்க்குமாறு கூறினேன். அவர்கள் பார்ப்பதாகக் கூறினார்கள். மறுநாள் ஃபோன் செய்தேன். ரூ. 5250 மீதம் இருப்பதைச் சொன்னார்கள். அதை சிமெண்ட்டாக வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டார்கள். அடுத்த பணி துவங்க எனக்கு சில வாரங்கள் ஆகும். எனவே தொகையாகவே பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அடுத்த வாரம் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். நான் சரி என்றேன். 

அடுத்த வாரம் ஃபோன் செய்தேன். ஓனர் ஊரில் இல்லை; அடுத்த வாரம் என்றனர். நானும் சம்மதித்தேன். 

இது நடந்து ஓரிரு நாளில் அப்பா என்னிடம் சிமெண்ட் பற்றி கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். ‘’அவர்கள் கடை பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நீ அந்த 5250 ரூபாயை மறந்து விடு’’ என்றார்கள். 

நான் எதுவும் கேள்விப்படாதது போல அந்த கடைக்குச் சென்றேன். 

கடையின் அக்கவுண்டண்ட் , ‘’சார் ! ஓனர் சென்னை போயிருக்கார். நாலு நாள் முன்னாடியே அவரு வந்திருக்கணும். கொஞ்சம் தாமதம் ஆகுது. நீங்க வருத்தப்படாம அடுத்த வாரம் இதே கிழமை வாங்க சார். நாம செட்டில் செஞ்சிருவோம் ‘’ என்றார். 

‘’ஏதாவது பிராப்ளமா?’’ என்றேன். 

‘’அதெல்லாம் ஒன்னுமில்லை சார். நீங்க அடுத்த வாரம் வாங்க’’

ஒரு வாரம் காத்திருந்தேன். பின்னர் அங்கு சென்றேன். 

அங்கே எனக்கு நல்ல பழக்கமாயிருந்த இன்னொரு அக்கவுண்டண்ட் இருந்தார். அவர் என்னை கடைக்கு வெளியே தனியே அழைத்துச் சென்றார். 

‘’சார்! உங்களுக்கு உலகம் தெரியல. கடை பெரிய ஃபினான்ஷியல் கிரிஸிஸ்ல இருக்கு. பேங்க் லோன் கடைக்கு ஹெவியா இருக்கு. ஓனர் கடைக்கு வந்தே ஒரு மாசம் ஆகுது. உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை’’ என்றார். 

‘’ஓனர் கிட்டே நான் வந்துட்டு போன விஷயத்தைச் சொல்லுங்க. ஃபோன் பண்ணுவாரில்லையா?’’

மறுநாள் கடையிலிருந்து ஃபோன் வந்தது. கடைக்கு வரச் சொல்லி. 

மூத்த அக்கவுண்டண்ட் கடையில் இருந்தார். அவர் ஒரு கவரை என்னிடம் கொடுத்தார். அதில் ரூ. 5250 இருந்தது. 

‘’சார்! ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓனர் இன்னைக்கு காலைல ஃபோன் செஞ்சார். நீங்க ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிங்க. வந்துட்டு போனீங்கன்னு சொன்னேன். ஓனர் என்ன நினைச்சாரோ தெரியலை. உங்க கணக்கை செட்டில் பண்ண சொல்லிட்டார். இந்த நாலு மாசத்துல உங்களுக்கு மட்டும் தான் அமௌண்ட் ரிடர்ன் பண்றோம்’’

அப்பாவிடம் தொகையை ஒப்படைத்தேன். 

‘’கேஷ் அண்ட் கேரி மட்டுமே இனிமே வச்சுக்க’’ என்றார் அப்பா.