Tuesday 9 November 2021

காதலின் துயரம்

 

உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளியான கதேயின் ‘’காதலின் துயரம்’’ நாவலை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். முதல் வாசிப்பின் முதல் கணத்திலிருந்தே அந்த நாவல் என்னை ஆட்கொண்டது. அதன் பின்னர் அந்த நாவலை மூன்று நான்கு முறை வாசித்திருக்கிறேன். இன்று காலை மழை மிகுந்து பொழிந்து கொண்டிருந்த ஒரு பொழுதில் இந்த நாவலை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். மாலை வாசித்து முடித்தேன்.  முதல் முறை வாசித்த போது இந்த நாவலை எப்போதும் என் கையிலேயே வைத்திருப்பேன். மேஜையில் புத்தக அலமாரியில் என் பார்வையில் இருக்கும்படியே வைத்திருப்பேன். அந்த நூல் கையில் இருக்கும் போது பார்வையில் இருக்கும் போது மகத்தான ஓர் உணர்வுடன் அணுக்கமாக இருப்பதான எண்ணம் இருக்கும். 

வாழ்க்கை பொன்னொளியாலும் சாமானியத்தன்மையாலும் ஆனது. இந்த தூரம் கொண்ட தன்மைகள் உலகத்தின் இயல்பு. இந்திய மரபு சத்வ, ரஜோ, தமோ குணங்கள் என்கிறது. 

கி. ராஜநாராயணன் ‘’கன்னிமை’’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சிறுமியாக இருக்கும் போது கன்னிப் பெண்ணாக இருக்கும் போது நாச்சியார் என்ற அக்கதையில் வரும் கதாபாத்திரம் தன் இயல்பால் தன் சூழலை பொன்னென பொன்னிசையென ஆக்கும் மாயத்தை அதிசயித்து எழுதியிருப்பார். பின்னர், அதே பெண் லௌகிகமான மிகச் சாதாரணமான மெச்சும்படியான நளினங்கள் ஏதும் இல்லாத ஒரு குடும்பத் தலைவியாக ஆவதை அக்கதையில் காட்டியிருப்பார். 

காதல் பல்லாண்டுகளாக புழங்கிய உலகை மிகப் புத்தம் புதிய ஒன்றாக மாற்றிக் காட்டும் மாயத்தை நிகழ்த்துகிறது. காதல் கொண்ட அகம் உலகை எழில்களின் மேன்மைகளின் இயக்கமாகக் காண்கிறது. அந்த உலகில் புரிதலும் அன்பும் மட்டுமே இருக்கிறது. அவையே ஜீவித இயல்புகள் என்ற உணர்வு அடிக்கடி தோன்றி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது. காதல் கொண்டவர்கள் சக மனிதர்களை எல்லையின்றி மன்னிக்கிறார்கள். மனிதர்களைப் பெருந்தன்மையுடன் அணுகுகிறார்கள்.

வெர்தர் லோதா என்ற பெண்ணைக் காண்கிறான். அவளை அவள் வீட்டில் முதல் முறையாகக் காணும் போது அவள் சிறு குழந்தைகளாயிருக்கும் தன் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ரொட்டித் துண்டை பகிர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறாள். அந்த இளம்பெண்ணை தெய்வீக ஒளி கொண்டவளாக உணர்கிறான் வெர்தர். வெர்தர் தன் மனத்தில் கடவுளுக்குக் கொடுக்கும் இடத்தை அவளுக்குக் கொடுக்கிறான். முதல் சந்திப்பிலேயே தனக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானதைத் தெரிவிக்கிறாள் லோதா. 

வெர்தர் தன் மீது கொண்டிருக்கும் தூய அன்பு லோதாவாலும் உணரப்படுகிறது. தான் மணந்து கொள்ளப் போகும் ஆல்பர்ட்டை வெர்தருக்கு அறிமுகப்படுத்துகிறாள். ஆல்பர்ட், வெர்தர், லோதா மூவரும் நல்ல நன்பர்களாக இருக்கிறார்கள். 

படைப்பூக்கம் கொண்டவனும் கலைஞனுமான வெர்தர் தன் காதலால் பித்தேறிய அதி உச்ச மனநிலைக்குச் செல்கிறான். அவன் அகத்தில் தூய அன்பு மட்டுமே இருக்கிறது. லோதாவை மானசீகமாக பூஜித்த வண்ணம் இருக்கிறான் வெர்தர். வெர்தர் லோதாவையும் ஆல்பர்ட்டையும் பிரியும் நாள் வருகிறது. அவர்கள் கண்ணிலிருந்து மறைந்து விட வேண்டும் என விரும்பி நாடெங்கும் அலைகிறான். உலகியலின் சாதாரணத் தன்மையால் மனக்காயங்களை அடைகிறான். ஒளியின் வானத்தில் மேலேறி நின்றவன் இருளின் காலாக்கிரகங்களில் அடைபட நேர்கிறது. 

வெர்தருக்கு நிகழ்வது என்ன என்பதே நாவல். 

இந்த நாவல் எனக்கு தாஸ்தவெஸ்கியின் ‘’வெண்ணிற இரவுகள்’’ நாவலை நினைவுபடுத்தியது. வெண்ணிற இரவுகளில் ‘’காதலின் துயரம்’’ நாவலின் பாதிப்பு என்பது நேரடியானது. 

கதேயின் இந்த நாவலைப் போல உலக இலக்கியத்தில் பல மொழிப் படைப்புகளை பாதித்த பிறிதொரு நாவல் இல்லை. இந்த நாவல் வெளியான போது ஐரோப்பாவின் ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இந்த நாவல் இருந்தது என்று சொல்கிறார்கள். இந்த நாவலை வாசித்த இளைஞர்கள் தன்னை வெர்தராகவும் இளம்பெண்கள் தன்னை லோதாவாகவும் எண்ணிக் கொண்டார்கள். 

நுட்பமான உணர்ச்சிகள், உணர்ச்சி வேகம் கொண்ட மொழி, படைப்பு மொழியில் படிந்திருந்த உச்சபட்சமான அழகியல் என கதேயின் நாவல் வாசகனைத் தன் நேர்த்தியாலும் அழகாலும் சூழ்ந்து கொள்கிறது. 

நூல் : The Sorrows of Young Werther.  ஆசிரியர் : கதே.   தமிழில் : காதலின் துயரம். மொழிபெயர்ப்பு ; எம். கோபாலகிருஷ்ணன். பிரசுரம் : தமிழினி