Tuesday 9 November 2021

வன்னி


இந்திய மண்ணில் மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிக ஆழமானது. பல்லாயிரம் ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டது. இந்தியப் பண்பாடு என்பதே இங்கே வாழ்ந்த குடிகள் உருவாக்கி பேணிய இவ்வாறான நுண்ணுணர்வுகளின் தொகுப்பே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை நதிகளை தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. பல இந்தியக் குடும்பங்கள் காலை எழுந்ததும் ‘’ கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி சிந்து காவேரி’’ என இந்திய மண்ணின் நதிகளின் பெயர்களை உச்சரிக்கின்றன. இந்தியா இன்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு என்பதால் அந்த கண்ணி முற்றிலும் அறுபடாமல் நிலைத்திருக்கிறது. தொல் படிமங்கள் தலைமுறைகளின் ஆழ்மனதில் பல்வேறு விதமான சடங்குகளின் வழியாக வழிபாட்டு முறைகளின் வழியாக நிலைபெறுகின்றன. ஆடிப்பெருக்கு பண்டிகையின் அன்று காவிரியின் படித்துறைகளைக் காண்பவர்களால் அதனை உணர்ந்து கொள்ள முடியும். படித்துறையில் பெரும்பாலும் இருக்கும் வினாயகர் ஆலயங்களில் பூசனைகள் செய்து பெண்கள் மஞ்சள் கயிறை கழுத்திலும் கையிலும் கட்டிக் கொள்வார்கள். கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவிரியைத் தம் அன்னையாக எண்ணும் அவர்களுடைய உணர்வு சிலிர்க்கச் செய்வது. 

நான் நாடெங்கும் பயணித்திருக்கிறேன். எனது பயணத்தில் நூற்றுக்கணக்கான மரத்தடிகளில் அமர்ந்திருக்கிறேன் ; படுத்து உறங்கியிருக்கிறேன். ஒவ்வொரு மரத்தடி நிழலும் தம்மளவில் தனித்துவம் கொண்டது. ஆலமரத்தடிகள் அதனடியில் அமர்பவர்களிடம் பெரிய எண்ணங்களை உருவாக்கும். அதன் பெரும்பரப்பும் அதன் நிழலின் அடர்த்தியும் அதில் வாழும் பறவைகளும் வாழ்க்கை குறித்த பெரும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உண்டாக்கும். அரச மரத்தடிகள் மகிழ்ச்சி தருபவை. வேம்படிகள் ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்றவை. ஆந்திர மாநிலத்தில் வேம்படிகள் மிக அதிகமாக இருக்கும். வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தானில் ஊர் நடுவே ஆலமரம் இருக்கும். அதில் எப்போதும் பத்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். ஊர் மன்று அங்குதான் நடக்கும். மகாராஷ்டிர மாநிலத்தில் மரங்களின் கிளைகளில் பானைகளைக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். அதில் குடிநீர் இருக்கும். வழிப்போக்கர்களின் தாகம் தணிக்க இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள். அவற்றில் நீர் அருந்தும் போது அந்த பானையில் நீர் நிரப்பிய ஆத்மனை மானசீகமாக வாழ்த்துவேன். பலமுறை அவ்வாறு நீர் அருந்தியிருக்கிறேன். 

சில மரங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. நாகலிங்க மரம் அவ்வாறானது. சாமானியமாக அதன் அருகில் சென்று சகஜமாகப் புழங்க எவரும் தயங்குவார்கள். சிவலிங்க வடிவம் கொண்ட பூவைக் கொண்டிருப்பதால் தெய்வீகமானது என அதன் அருகில் செல்லத் தயங்குவார்கள். வன்னி அவ்வாறான ஒரு மரம். 

தமிழ்நாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. வன்னி மரத்தின் அடியில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் பிள்ளையாரிடம்  ஏதேனும் வேண்டிக் கொண்டால் வேண்டுதல் உடனே பலிக்கும் என்று.  பிள்ளையாரை எந்த மரத்தடியிலும் பிரதிட்டை செய்ய முடியும். மற்ற தெய்வங்களுக்கு உரிய ஆகம விதிகள் வினாயகருக்குக் கிடையாது. மரத்தடிகளில் குளக்கரைகளில் எங்கும் அமரக் கூடியவர். அங்கிருக்கும் நிலையிலேயே பக்தர்கள் ஏற்றும் தீபங்களையும் அர்ச்சனைகளையும் ஏற்கக் கூடியவர். ஆனைக்கடவுள் என்பதால் மரநிழலின் நீர்நிலைகளின் அருகில் இருப்பதை விரும்புபவராய் இருக்கக் கூடும். வன்னிப் பிள்ளையார் அத்தனை சக்தி கொண்டவர் என்பது நம்பிக்கை. 

வன்னி மரம் பாலை நிலத்திலும் எளிதாக வளரக்கூடியது. ராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரம் வன்னி. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அக்ஞாத வாசம் புரிய விராட தேசம் செல்லும் போது தமது படைக்கலன்களை ஒரு பெரிய வன்னி மரத்தின் பொந்தில் வைத்து விட்டு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ வேண்டியிருப்பதால் அவ்வாறு செய்கின்றனர். வன்னி மரம் தெய்வீக சக்தி கொண்டது என்பதால் அதில் வைக்கப்படும் தமது ஆயுதங்களின் தெய்வீக ஆற்றல் அப்படியே இருக்கும் என்பதால் அவர்கள் வன்னி மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். சைவம் வன்னி மரத்தை அக்னியின் ரூபமாகவும் சிவ சொரூபமாகவும் காண்கிறது. 

இப்போதும் ஹோமங்களில் வன்னி மரத்தின் முள், உதிர்ந்த கிளைப்பட்டைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வன்னி மரத்தை வெட்டக்கூடாது என்பது தமிழ்நாட்டின் நம்பிக்கை. வன்னி மரத்தால் உதிர்க்கப்பட்டு அதன் நிழலில் தரையில் கிடக்கும் அதன் பகுதிகளை எடுத்துப் பயன்படுத்தலாமே தவிர அதன் அருகில் சென்று எதையும் பறிக்கக்கூடாது என்பது இங்கே உள்ள தீவிரமான பழக்கம். இவ்வாறான நியமங்களும் நியதிகளும் இருப்பதால் வீட்டில் வன்னி மரம் வளர்க்க பலருக்குத் தயக்கம் உள்ளது. வன்னி கோவிலில் வழிபாட்டுக்கு இருக்க வேண்டிய மரம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. 

வன்னி மரம் தன்னை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களிடம் உணர்வுரீதியான பிணைப்பை உருவாக்கும் என அதனை வளர்ப்பவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். வீட்டு நபர்கள் அல்லாமல் புதிதாக யாரேனும் அந்த மரத்துக்கு அருகில் சென்றால் வீட்டு உரிமையாளர்கள் உணர்வில் யாரோ புதிதாக வந்திருக்கிறார்கள் என்று அந்த மரம் தோன்றச் செய்யும் என்று அதனை வளர்ப்பவர்கள் சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 

வன்னி மரத்தை வீட்டின் தோட்டத்தில் வைத்து நீரூற்றி வளர்க்க வேண்டும். வீட்டு வாசலில் வைக்கக் கூடாது. இறையருளையும் மங்களத்தையும் வன்னி வீட்டுக்கு வழங்கும் என்பது தொன்மையான நம்பிக்கை. 

என்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஒரு வன்னி மரக்கன்று உள்ளது. உற்சாகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.