Thursday 11 November 2021

அன்னபூரணி தேசம்


பாரத மண் மகத்தான எத்தனையோ பண்பாட்டு விழுமியங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர் கண்ணியாக நிலைநிறுத்தியிருக்கிறது. இயற்கையை இறைமையாகப் பார்த்தல், ஜீவன்களின் மீது கருணையோடிருத்தல், உயிர்களின் துன்பத்தைப் போக்குதல் என பல்வேறு விழுமியங்களை தலைமுறைகளின் மனதில் பதிய வைத்திருக்கிறது பாரதம். வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவிடுதலை அறம் என்கிறது நம் மரபு. அதனைப் பேரறம் எனவும் பறைசாற்றுகிறது. 

மக்கள் திரள் முன்னால் சென்று எத்தனையோ விதமான சமூகப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். ஏற்ற பணியை, ஆகக் குறைவான செலவில் துல்லியமாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று எண்ணுவேன். அவ்வாறே செய்தும் இருக்கிறேன். செய்த சமூகப்பணிகள் சார்ந்து மனம் நிறைவே கொள்கிறது. இன்னும் பல தளங்களில் பல விதமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தணியாத ஆவல் இருக்கிறது. செயலைத் தன் வழியாகக் கொண்டவனுக்கு அது எப்போதும் இருக்கும். இயற்கை அத்தகையவனுக்கு அளிக்கும் ஆசி அது. 

சில ஆண்டுகளுக்கு முன்னால், கடலூர் மாவட்டம் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட போது நான்கு கிராமங்களில் உள்ள மக்களுக்கு புத்தாடைகள், பாய், போர்வை, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை நண்பர்கள் சிலர் இணைந்து வழங்கினோம். சென்ற ஆண்டில், ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி அப்பணியில் முழு கிராமத்தையும் ஈடுபடுத்தும் செயல் செய்ய முடிந்தது. சில மாதங்களுக்கு முன்னால், ஒரு கிராமத்தின் எல்லா குடும்பங்களையும் சந்தித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள சொல்லி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மாவட்டத்திலேயே முதன்மையானதாக ஆனது. 

இந்த பணிகள் அனைத்திலும் தங்கள் சொல்லாலும் உணர்வாலும் செயலாலும் உடனிருந்த நண்பர்களே நாம் உற்சாகமாகத்  தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளைத் திட்டமிடவும் துவங்கவும் செயல்படவும் காரணம். அவர்கள் நம் மீது கொண்ட நம்பிக்கையும் பிரியமும் அன்புமே நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. அவர்களில் பலர் தங்கள் பெயரோ பங்களிப்போ எந்த விதத்திலும் தெரிவிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொண்டவர்கள். ‘’அன்புக் கட்டளை’’ இட்டவர்கள். ஒரு பணி நிறைவு பெற்று சில வாரங்களில் சில நாட்களில் கூட ஏதேனும் அடுத்த பணியைத் துவங்குவது பற்றி பேசியிருக்கிறேன். உதவி கேட்டிருக்கிறேன். ஆர்வத்துடன் இன்முகத்துடன் இனிமையான மனநிலையுடன் விவாதித்திருக்கிறார்கள் ; உதவியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் பட்டிருக்கும் ‘’நன்றிக் கடனை’’  என்னால் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. 

தடுப்பூசிக்காகப் பணி புரிந்த கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நூறு குடும்பங்களைச் சேர்ந்த 500 பேருக்கு ஆறு நாட்கள் உணவிட வேண்டும் என்று திட்டமிட்டு நண்பர்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்ற போது என் மனம் தயக்கமே கொண்டிருந்தது. இப்போது தான் தீபாவளி முடிந்திருக்கிறது. எல்லா குடும்பங்களுக்கும் பலவிதமான செலவுகள் இருந்திருக்கும். புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு என ஏகப்பட்ட செலவுகள் ஆகியிருக்கும். இவற்றை கவனத்தில் கொண்டு எவ்வாறு உதவி கேட்பது என்று தயங்கினேன். எனது தயக்கத்தை எனது எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்கள் நண்பர்கள். 

பசிப்பிணி தீர்க்கும் அறச்செயலுக்கு நண்பர்கள் வாரி வழங்கினர். ஒத்துக் கொண்ட தொகையைக் காட்டினும் கூடுதலாகவே பணம் அனுப்பி வைத்தனர். என்னுடைய அனுபவத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்று. எனது வாழ்நாளில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாளும் கூட. இன்று நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன். அறப்பணியில் மாறாப் பற்று கொண்ட நண்பர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர்வு என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. உலகியல் கடலைக் க்டக்க அவர்கள் தெப்பமென எனக்கு உதவுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்து கொண்டேன்.

’’அதிதி தேவோ பவ’’ என்கிறது மறை. ‘’அன்னம் பஹூ குர்வித;’’ எனக் கட்டளையிடுகிறது உபநிடதம். பயணிக்கும் யாத்ரீகர்களுக்கான அன்ன சத்திரங்களை அமைத்து   உணவளித்தன பாரத கிராமங்கள். கல்வியின் ஒரு பகுதியாக ‘’ பவதி பிக்‌ஷாம் தேஹி’’ என வீட்டு வாசலுக்கு பிச்சையேற்க வந்த சிறுவர்களுக்கு உணவிட்டு வளர்த்தவர்கள் பாரதத்தின் அன்னையர். அவதார புருஷர்களான ராமரும் கிருஷ்ணரும் அவ்விதம் பிச்சையேற்று உணவுண்டு கல்வி கற்றவர்களே. உயிர்களின் பசியைப் போக்குதலை வேள்விச்செயல் எனக் கொள்கிறது பாரத மரபு. வயிற்றில் எரியும் நெருப்பில் இடப்படும் அவியென உணவு சொல்லப்படுகிறது. 

கிராமத்தில் 500 பேருக்கு 6 நாட்கள் 2 வேளை உணவிடும் பணிக்கு எல்லா விதத்திலும் உடனிருந்து உதவும் எல்லா நண்பர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.