Friday 12 November 2021

முதல் நாள்

இன்று காலை விழித்தெழுந்ததிலிருந்தே ஒரு நிமிடமும் ஓயாத பணிகள். அங்கும் இங்கும் அலைந்து கொண்டேயிருந்தேன். நேற்று சமையல்காரர்கள் இன்று மாலை உணவு தயாரித்தலுக்குத் தேவைப்படும் மளிகை மற்றும் காய்கறிகளின் பட்டியலை அளித்து விட்டுச் சென்றிருந்தனர். மளிகை மொத்த வியாபாரி ஒருவரின் கடைக்குச் சென்று அவரிடம் விஷயத்தை விளக்கி பட்டியலை அளித்து விட்டு வந்தேன். அவர் அனைத்தையும் எடுத்து வைத்து  விட்டு ஃபோன் செய்கிறேன் என்றார். வாடகை பாத்திரக் கடைக்குச் சென்று அடுப்பு, தவளை, வாளி ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து வந்தேன். காய்கறிக் கடையில் காய்கறி , இலை ஆகியவற்றை வாங்கினேன். இதற்கே மதியம் 1 மணி ஆகி விட்டது. சமையல்காரர்கள் வருவதற்கும் நான் டாடா ஏசில் மளிகைப் பொருட்களை ஏற்றி வருவதற்கும் சரியாக இருந்தது.  

இன்று புளிசாதம் தயாரித்து வழங்க உத்தேசித்திருந்தோம். புளி ஊறவைக்கப்பட்டது. நிலக்கடலையைப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள் எரிவாயு சிலிண்டர் ஏற்பாடு செய்து கொடுத்தேன். 

முதல் நாள் பணி என்பது அதிக கவனம் தரப்பட வேண்டியது. சில நாட்களோ அல்லது பல நாட்களோ தொடர்ந்து நடைபெற வேண்டிய பணி என்றால் முதல் நாள் நினைவுகள் எல்லாருடைய மனத்திலும் இருக்கும். அதனால் எந்த சங்கடமும் இன்றி சுமூகமானதாக முதல் நாள் இருப்பது யாவர்க்கும் நலமானது. முதல் நாளில் சேகரமாக வேண்டியவை சேகரமாகி நிகழ வேண்டியவை கிரமமாக நிகழ்ந்தால் அந்த நாளின் ஓட்டத்தையே அப்படியே தொடர்ந்து விடலாம். 

என்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே எனக்கு சொந்தமான ஒரு ஃபிளாட் இருக்கிறது. 1250 சதுர அடி பரப்பு கொண்டது. பெரிய விசாலமான வெளிச்சம் மிக்க ஃபிளாட்.  அதில் எனது கட்டுமான நிறுவனத்தின் எலெக்டிக் பிளம்பிங் பொருட்களை அடுக்கி வைத்து ஒரு குடோன் போல பயன்படுத்துகிறேன். ஃபிளாட்டின் ஒரு அறையில் அந்த பொருட்களை எடுத்து வைத்து விட்டு கூடத்தையும் பெரிய அறை ஒன்றையும் சமையலறையையும் பயன்படுத்திக் கொள்ள சமையல்காரகளிடம் சொன்னேன். சமையல் அங்கு நடைபெறுவது மனதுக்கு மகிழ்ச்சி தந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வார் : ‘’வீடு என ஒன்று இருக்குமானால் அதில் பலவிதமான நற்செயல்கள் நிகழ வேண்டும் ’’. அவர் சொன்னது இப்போது என் நினைவுக்கு வந்தது. 

அண்டாக்களில் தண்ணீர் கொதித்தது. புளியைக் காய்ச்சினார்கள். சமையல் நடைபெறும் இடத்திலேயே இருந்தேன். அவ்வப்போது ஏதேனும் தேவையா என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மதியம் ஒரு மணி அளவில் துவங்கிய பணி 5.30 அளவில் நிறைவு பெற்றது. வாழையிலையில் பொட்டலமாகக் கட்ட கூடுதல் நேரம் ஆகிக் கொண்டிருந்தது. சட்டென முடிவெடுத்து, நடுத்தரமான அண்டாக்களில் புளிசாதத்தை எடுத்து வைக்கச் சொல்லி அதனைத் தட்டால் மூடி எடுத்துச் சென்று விடலாம் என்று சொன்னேன். டாடா ஏஸ்-க்கு ஃபோன் செய்தேன். பத்து நிமிடத்தில் வண்டி வந்தது. ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கல்லூரிப் பேராசியரான நண்பரும் வந்து விட்டார். நாளைய பணிகள் குறித்து சமையல்காரரிடம் விவாதிக்குமாறு அவரிடம் கூறி விட்டு நான் சென்று விட்டேன். 

கிராமத்தின் குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்துக்கு எங்கள் வாகனம் சென்றது. அங்கே இருந்த இளைஞர்கள் உணவு வழங்குதலில் பெரும் உதவி புரிந்தனர். மக்கள் மிகுந்த பிரியத்துடனும் அன்புடனும் வரவேற்றனர். பெண்கள் என்ன விஷயம் என்று விசாரித்தனர். விளக்கிய பின், வாழ்த்தினர். ஆசி கூறினர். நன்றி சொன்னார்கள். 

முப்பது நிமிடத்தில் 100 குடும்பங்களுக்கு - அதாவது 500 நபர்களுக்கு உணவு சென்று சேர்ந்தது. நாளை மீண்டும் வருவோம் எனக் கூறி விடை பெற்றேன்.