Wednesday 17 November 2021

ஆறாவது நாள்

 இன்று ஆறாவது நாள். 

சில விஷயங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போது, நம் மனம் அவற்றை முழுக்க உள்வாங்குகிறது. முழுமையாக ஒன்று அறியப்படும் போது அது எளிதில் கைகூடுகிறது. செய்யும் செயலில் முழுதாக ஈடுபட வேண்டும். எண்ணத்தையும் கவனத்தையும் வேறு எங்கும் சிதற விடாமல். 

நேற்று உணவளிக்கச் செல்லும் போது, அங்கே இருந்த மக்கள் அவர்கள் தெருவில் இருக்கும் பழைய சப்தமாதா கோவிலை புதிதாகக் கட்டித் தருவதில் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டனர். நான் அது குறித்து சிந்திக்கிறேன் என்று சொன்னேன். நேற்றும் இன்றும் அது பற்றி யோசித்தேன். 

இந்திய நிலமெங்கும் சப்த கன்னியர் வழிபாடு உண்டு. இறையின் அம்சம் கொண்ட இறைத்தன்மை மிக்க ஏழு கன்னிப் பெண்கள். கன்னிமையில் வேர் கொண்டிருக்கும் இறைத் தன்மைக்கு அளிக்கப்பட்ட உருவங்கள். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி,வராகி, இந்திராணி, சாமுண்டி என்ற ஏழு தெய்வங்கள். ஆதி பராசக்தியின் கன்னி ரூபங்கள். வெண்ணிற உடை உடுத்து ஸ்படிக மாலையைக் கரத்தில் ஏந்தியிருக்கும் பிராம்மி முதல் கபால மாலை அணிந்து பிணத்தின் மேல் அமர்ந்திருக்கும் சாமுண்டி வரை. ஞானம், சக்தி, ஆற்றல், செல்வம்,வளர்ச்சி, வல்லமை, அஞ்சாமை ஆகிய இயல்புகளின் தெய்வங்கள். 



இன்று கிராம மக்களிடம் ஒரு விஷயம் சொன்னேன். அந்த தெருவில் இருக்கும் குறைந்தபட்சம் 50 பெண்கள் இப்போது இருக்கும் சப்தமாதா ஆலயத்தில் நாற்பத்து எட்டு தினங்களுக்கு மாலை 5.50 முதல் 6.10 வரை ’’அபிராமி அந்தாதி’’  பாராயணம் செய்யச் சொன்னேன். சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என எவரும் பங்கு பெறலாம். சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட - மக்களுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் ஏற்பட இது வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. அவ்வாறு அவர்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படுமானால் அவர்கள் எழுப்ப விரும்பும் ஆலயம் விரைவில் எழக் கூடும். 

‘’அபிராமி அந்தாதி’’ தமிழின் சிறந்த நூல்களில் ஒன்று. தமிழின் சிறந்த நூல் ஒன்றை 50 பேரிடம் கொண்டு சேர்த்ததாகவும் இருக்கும். அவர்கள் நோக்கமும் நிறைவேறும். எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நம் மரபில் , காலை எழுந்தவுடன் சொல்லக் கூடிய ஒரு சுலோகம் உண்டு. ‘’கராக்ரே வசதே லஷ்மி’’ எனத் தொடங்குவது. நீராடும் போது சொல்லக் கூடிய சுலோகம் உண்டு. கங்கேச யமுனா’’ . உணவருந்தும் முன் சொல்லக் கூடிய சுலோகம் உண்டு. ‘’பிரம்மார்ப்பணம் பிரம்ம ஹவிர்’’ . அவ்வாறே மாலை அந்தியில் , இரவு உறங்கப் போகும் முன் என சொல்லப்படும் சுலோகங்கள் உண்டு. 

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்து சொல்லும் ‘’கராக்ரே வசதே லஷ்மி ‘’ என்ற சுலோகம் கைகளே நம் கடவுள் என்கிறது. மனிதக் கையால் நுட்பமான பல வேலைகளைச் செய்ய முடியும். கைகளுக்கு அந்த நுட்பம் கூடிய பின்னரே மானுடம் மகத்தான தாவலை தன் பரிணாமத்தில் எட்டியது. நதிகளே உணவாகவும் நீராகவும் மாறி வாழ்வளிக்கின்றன. மனித வாழ்க்கை என்பது சக ஜீவன்களுடன் இணைந்து வாழ்வதே. முழுமையான இணைவும் ஒத்திசைவும் ஏற்படும் போது மானுடம் முழுமை பெறும். 

தமிழ்ச் சமூகத்தில், மரபின் மேல் கடும் தாக்குதல் நூறாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. சமயத்தின் மேல், இலக்கியத்தின் மேல், பாரம்பர்யமான அறிவியல் அறிவின் மேல் என அது விரிந்து கொண்டே செல்கிறது. இப்போது, இங்கே யாருக்குமே மரபின் மீதான பயிற்சி கிடையாது. அத்தகைய அறிமுகமும் பயிற்சியும் இங்கே அளிக்கப்பட வேண்டும். அதற்கு இவ்வகையான முன்னெடுப்புகள் உதவும் என்பது எனது நம்பிக்கை. 

நான் நாடெங்கும் பயணம் செய்திருக்கிறேன். இந்த கணம், நான் சென்ற எண்ணற்ற ஊர்களின் ஆலயங்களை எண்ணிப் பார்க்கிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், லெபாக்‌ஷி வீரபத்ரர் ஆலயம், மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி அதிஷ்டானம், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைனி மகா காலேஸ்வரர், ரிஷிகேஷின் கங்கை அன்னை என எத்தனையோ இடங்கள். பெண்கள் தங்கள் குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக கணவனுக்காக எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டு பிராத்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெண் எப்போதும் மற்றவர்களுக்காகவே பிராத்திக்கிறாள். அதனால் தான் இந்திய மரபு பெண்மையை தெய்வ சொரூபமாக வணங்குகிறது. 

நிகழ்வில் பங்கேற்கும் பெண்களை, அந்த ஆலயத்தில் நாற்பத்து எட்டு நாட்களும் ஆளுக்கு ஒரு தீபம் ஏற்றச் சொல்லலாம். கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். நவீன வாழ்க்கை மனிதனை வெறும் நுகர்வோனாக மட்டுமே இருக்கச் செய்ய விழைகிறது. மரபு வாழ்க்கைக்கு வெவ்வேறு விதமான தன்மைகளை கூறுகளை அம்சங்களை அளித்தவாறே உள்ளது. 

எழுத்துக்கள் ‘’அ’’ என்ற எழுத்தை அடிப்படையாகவும் முதலாகவும் கொண்டிருப்பது போல செயல்களில் முதற் செயல் தீபம் ஏற்றுதல். மானுட வரலாற்றில் தீயை மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய பின் தான் அவன் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தீபம் ஏற்றுதல் அனாதி காலமாகத் தொடரும் ஒரு மரபு. 

சக மனிதர்கள் மேல் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வலிமையில் இந்த பணியை முன்னெடுக்கவும் ஒருங்கிணைக்கவும் உள்ளேன்.