Thursday 18 November 2021

கூடித் தொழில் செய்

எனது தந்தைக்கு நான் B.E  பொறியியல் பட்டம் பெற்றதும் M.E பயில வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. நான் அதனை மறுத்தேன். மாத ஊதியம் பெறும் எந்த வேலைக்கும் செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எங்கள் கல்லூரித் தேர்வுகள் மே மாதம் நடைபெறும். பட்டமளிப்பு விழா செப்டம்பரில் நடைபெறும். பொறியியல் பட்டத்தை தபால் மூலம் அனுப்புவதற்கு பணம் செலுத்தி விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது வாரத்துக்கு இரண்டு நாள் மூன்று நாள் ஏதேனும் ரயிலில் ஏறி 200 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர்களுக்குச் சென்று அங்கே உள்ள இடங்களைப் பார்த்து விட்டு வருவேன். சமயத்தில் பேருந்திலும் செல்வேன். மோட்டார்சைக்கிள் எடுத்துக் கொண்டும் செல்வேன். பேருந்திலும் ரயிலிலும் உடன் பயணிப்பவர்கள் என்னைப் பற்றி விசாரிப்பார்கள். பொறியியல் பட்டதாரி என்பேன். என்ன உத்யோகம் என்று விசாரித்தால் தொழில் தொடங்கப் போகிறேன் என்பேன். அவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த நாட்களில் ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்தது ஞாபகம் இருக்கிறது. மோட்டார்சைக்கிளில் நார்த்தாமலை, சித்தன்னவாசல் ஆகிய ஊர்களுக்கு சென்று வந்ததும் நினைவில் உள்ளது. அடிக்கடி திருச்சி சென்று வருவேன். இன்னும் பல ஊர்கள். மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவாலயத்துக்கோ பெருமாள் கோயிலுக்கோ தினமும் சென்று வருவேன். இங்கே உள்ள பெரிய கோவில்கள் அனைத்துமே குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பிரதேசத்தில் நான் போகாத சாலைகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் பயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வகையான பயணங்கள் மனதின் அக ஆற்றலைக் கிளறி விடும். பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பெருக்கெடுக்கச் செய்யும். பல கனவுகளைத் தோற்றுவிக்கும். சில மாதங்களில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலேறி தில்லி சென்று அங்கிருந்து ஹரித்வார் சென்றேன். கங்கை நதியில் மூழ்கி எழுந்தேன். கங்கை ஒரு பெருங்கனவு. நினைவு தெரிந்த நாள் முதல் கங்கையின் கதையைக் கேட்டிருக்கிறேன். அதாவது , பட்டதாரி ஆன பின்னர், ஓராண்டு சமூக சூழலை அவதானிப்பது என முடிவு செய்திருந்தேன். அவ்வாறே செய்தேன். 

தொழில் தொடங்க முடிவு செய்து எனது தந்தையிடம் சென்று எனது திட்டங்களைத் தெரிவித்தேன். ஒரு அபார்ட்மெண்ட் கட்ட வேண்டும் என்பது எனது விருப்பம். 

‘’பிரபு! அபார்ட்மெண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் ரொம்ப பெரிய ஒர்க். அத செய்ய உனக்கு இப்ப அனுபவம் போதாது.’’

‘’அதான் நீங்க இருக்கீங்களே’’

‘’என்னோட ஃபார்மட் வேற. எனக்கு நீ சொல்ற விஷயத்துலல்லாம் நம்பிக்கை இல்லை’’

நான் தட்டிய முதல் கதவே திறக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

என்ன செய்யலாம்? தந்தையுடன் இருந்து தந்தைக்கு உதவ வேண்டும் அல்லது வேறு எங்கேனும் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலைக்குச் சென்று மாத ஊதியம் பெறுவதா? அதை எக்காரணம் கொண்டும் செய்து விடக் கூடாது. ஒரு தொழில் முனைவோனாக ஆக வேண்டும் என்ற கனவை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதால் தந்தை சொல்வதைக் கேட்டு நடந்து கூடிய விரைவில் என் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை அவருக்குப் புரிய வைப்பது என்று முடிவு செய்தேன். நாள் முழுவதும் தந்தையுடன் கட்டுமானப் பணியிடத்தில் இருப்பேன். என் விருப்பங்களைக் கைவிடுமாறு தந்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர என்னால் எதுவுமே சொல்லவோ பேசவோ முடியாது. உற்சாகம் எழும் கனவுகள் கொண்ட மனம் மௌனமாக அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. வீட்டில் இருந்த ஓராண்டில் எனக்குத் தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் அனைவரிடமும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டப் போவதாக சொல்லியிருந்தேன். பார்ப்பவர்கள் அனைவரும் அதனைப் பற்றி விசாரிப்பார்கள். நான் காலை 7 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி பணியிடம் சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்புவேன் என்பதால் பலரைச் சந்திக்க வாய்ப்பு இருக்காது. அதையும் தாண்டி யாரையேனும் பார்த்தால் முதல் கேள்வியே இதுதான்.  பணியிடத்தில் நான் தினமும் பல விஷயங்களைக் கற்று வந்ததால் என்றோ ஒருநாள் நான் எண்ணியதை எய்துவேன் என்ற உறுதியுடன் இருந்தேன். 

இரண்டு ஆண்டுகள் சென்றது. அபார்ட்மெண்ட் கட்ட இரண்டு கிரவுண்டு இடத்தை வாங்கினேன். அது முதல் படி. கட்டிட அனுமதி பெற வேண்டும். அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். 

‘’பிரபு ! நீதான் அபார்ட்மெண்ட் அபார்ட்மெண்ட்-ன்னு சொல்ற . என் மனசுல அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இந்த அப்ரூவல் பிராசஸ்-லாம் ரொம்ப கஷ்டமானது. என்னால உனக்கு இந்த விஷயத்துல எந்த உதவியும் செய்ய முடியாது’’

தட்டித் திறக்காத பல கதவுகள் எனக்கு அனுபவமாகியிருந்தது. இது மேலும் ஒரு கதவு. அவ்வளவே. 

தொடர் முயற்சிக்குப் பின், கட்டிட அனுமதி பெற்றேன். இப்போது அதன் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. அப்போது அது பல அடுக்குகளைக் கொண்ட நிர்வாக நடைமுறை. முட்டுக்கட்டைகள் அதிகம். 

ஒருநாள் தந்தையிடம் கட்டிட அனுமதி வரைபடத்தைக் காட்டினேன். அவரால் நம்ப முடியவில்லை. அதன் பின் தான் , அபார்ட்மெண்ட் என்பது குறித்து அவர் மனதுக்குள் கொண்டு சென்றார். 

‘’பிரபு ! நாம கன்ஸ்ட்ரக்‌ஷன் நடக்கற மூணு நாலு அபார்ட்மெண்ட்டை போய் பார்ப்போம். நேரா பாக்கறது நல்லது.’’ 

மூன்று ஆண்டுகளுக்கு மேல் தந்தையிடம் பணி புரிந்ததால் எனக்கு அவரின் மனம் இயங்கும் விதமும் அவருடைய எதிர்பார்ப்புகளும் தெரியும். அவர் எந்த விஷயத்திலும் ‘’பெர்ஃபெக்‌ஷன்’’னை எதிர்பார்க்கக் கூடியவர். ‘’மைக்ரோ டீடெயில்ஸ்’’ வேண்டும் என நினைப்பவர். எனவே அவருடன் செல்வதற்கு முன் பார்வையிட வேண்டிய இடங்களை ஒருமுறை நான் சென்று பார்த்து வந்தேன். மூன்று ஊர்கள். கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம். அந்த ஊர்களின் அபார்ட்மெண்ட் சைட்களின் விபரங்கள், எத்தனை கிரவுண்டு, எத்தனை வீடுகள் கட்டுகிறார்கள், பயன்படுத்தும் சிமெண்ட் , ஸ்டீல் என்ன, லேபர் சம்பளம் என்ன, தின ஊதியமா கான்டிராக்ட்டா, என்ன விலைக்கு அபார்ட்மெண்ட் விற்க உத்தேசித்துள்ளார்கள், என பல விபரங்களை சேகரித்து ஒரு அட்டவணையாகப் போட்டுக் கொண்டேன். பலமுறை படித்து அந்த விபரங்களை மனப்பாடம் செய்தேன். 

எங்கள் மாருதி ஆம்னியில் சென்றோம். வண்டியை நான் ஓட்டாமல் டிரைவர் ஒருவரை ஏற்பாடு செய்து ஓட்டச் செய்தேன். முதல் நாள், கும்பகோணமும் தஞ்சாவூரும். அடுத்த நாள் சிதம்பரம் என முடிவு செய்திருந்தோம். டிரைவருக்கு ஒரு வரைபடம் போட்டுக் கொடுத்து முதலில் எந்த சைட் செல்ல வேண்டும் அடுத்தடுத்து எந்த சைட் என இலக்கமிட்டுக் கொடுத்திருந்தேன். தந்தையிடம் அபார்ட்மெண்ட் கட்டுவதன் நேர்மறையான விஷயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தேன். நாங்கள் இருவரும் பின்னால் அமர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம். 

கும்பகோணத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த எல்லா அபார்ட்மெண்ட் சைட்டையும் அப்பாவுக்குக் காண்பித்தேன். விபரங்களைச் சொன்னேன். அவர்கள் யாரிடமும் எதுவும் விசாரித்து அறிய தேவையின்றி எல்லா விபரமும் நானே சொல்லி விட்டேன். அவர் மனம் அபார்மெண்ட் கட்ட சாதகமாகத் திரும்பியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். திருப்தியுடன் வீடு திரும்பினோம். 

‘’பிரபு! இன்னைக்கு நாம பாத்த சைட் , அதோட கன்ஸ்ட்ரக்‌ஷன் விபரங்கள், மத்த டீடெயில்ஸ் எல்லாம் ஒரு டேபுளர் காலம்- ஆ போடணும்’’

முன்னரே நான் தயாரித்திருந்த அட்டவணையை அவரிடம் வழங்கினேன். 

அப்பாவிடம் கேட்டேன் : ‘’நாளைக்கு சிதம்பரத்துல உள்ள அபார்ட்மெண்ட் சைட் பாத்துடுவோமா? டிரைவரை எத்தனை மணிக்கு வரச் சொல்ல?’’

‘’நீ பாத்து விசாரிச்சிட்ட இல்ல. அதுவே போதும். டீடெயில்ஸ் மட்டும் கொடு’’