தமிழ் வாழ்க்கையில், கல்லூரியை நிறைவு செய்தல் என்பதை மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே கற்பனை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். தனக்கு வெற்றியை மட்டுமே அளித்து வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் உலகத்துக்கும் தனக்கும் இடையே கல்லூரிக் காலம் ஒரு தடையென இருப்பதாகவே அனைத்து மாணவர்களுக்கும் எண்ணம் இருக்கும். உலகியலின் கடினமான கரங்களை தம் மக்களைத் தீண்டாமல் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோர் செயலின் விளைவு அந்த எண்ணம். லௌகிக வாழ்க்கையைப் பற்றி என்ன என்று சொல்வது? அவரவர் அந்தந்த காலத்தில் பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என பெற்றோர் எண்ணி விடுவர். படிப்பு முடிந்ததும் நல்ல வேலைக்கு நல்ல ஊதியத்துக்குச் சென்று விடலாம் என்பதே அனைத்து மாணாக்கனின் எண்ணமாக இருக்கும். ஒருவருக்கு நல்ல வேலை கிடைப்பதும் நல்ல ஊதியம் கிடைப்பதும் அவரை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டது அல்ல. அது பெரும்பகுதி வேலை கொடுப்பவரையும் வேலை கொடுப்பவரின் தேவையையும் அடிப்படையாய்க் கொண்டது . கல்லூரியில் சேர்ந்த தினத்திலிருந்தே நானும் படிப்பை நிறைவு செய்வது குறித்து கற்பனை செய்தேன். இலக்கிய வாசகன் என்பதால் அது மற்றவர்களைக் காட்டிலும் தீவிரமாக இருந்தது. ஆனால் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. சுயதொழில் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என விரும்பினேன்.
படிப்பு நிறைவு பெறும் காலம் வந்தது.
அதுவரை எனது தந்தையின் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றுபவனாகவே இருந்திருக்கிறேன். தேர்வு முடிவுகள் வந்தன. முதல் வகுப்பில் தேர்ச்சி. பொறியியல் பட்டத்தை தபாலில் அனுப்ப பணம் கட்டி விட்டு வந்து விட்டேன்.
சில நாட்கள் சென்றன.
தந்தை என்னிடம் ‘’எம். ஈ அப்ளை பண்ணு’’ என்றார்.
‘’இல்லை ! இனிமேல் நான் மேலே எந்த பட்டமும் படிக்கப் போவதில்லை. சொந்தமாக தொழில் தொடங்கப் போகிறேன்’’ என்றேன்.
முதல் முறையாக தந்தையின் எண்ணத்தை ஆமோதிக்காமல் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தினேன்.
இந்த தருணமும் பல வருடமாக மனதுக்குள் நான் ஒத்திகை பார்த்த ஒன்று தான்.